சென்னை,பிப்.19- “ஹிந்தி, சமஸ்கிருத திணிப்புக்காகவே மும்மொழி கொள்கையை, ஒன்றிய அரசு நிறைவேற்ற துடிக்கிறது,” என, உயர் கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
ஹிந்தித் திணிப்பு
இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: தமிழ்நாட்டில் காலம் காலமாகவே, இருமொழி கொள்கை அமலில் உள்ளது. ஒன்றிய அரசு மும்மொழி கொள்கையில் உறுதியாக உள்ளதற்கு காரணம், ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதற்குதான்.
தமிழுக்கு குறைந்த நிதி
மூன்றாவது மொழியாக, எந்த மொழியையும் கற்கலாம் என கூறினாலும், எந்த மொழியையும் கற்க, அது ஆதரவளிக்காது.இந்திய மொழிகளில் மிகவும் பழமையான தமிழ் மொழியில், இலக்கண, இலக்கிய வளம் உள்ளது. ஆனால், அதை பரப்பவோ, வளர்க்கவோ, ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதியை ஹிந்தி, சமஸ்கிருதத்தை பரப்ப ஒதுக்கப்பட்ட நிதியோடு ஒப்பிட்டால் உண்மை புரியும். அவற்றுக்கு பல நுாறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழுக்கு, சில கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்குகிறது. இதேபோல், வேறு மொழி கற்க வாய்ப்புகளையே ஏற்படுத்தாமல், மும்மொழி கொள்கை என்பது ஏமாற்றும் வேலை. மேலும், தமிழ் மொழியை வேறெங்கும் சென்று யாரும் திணிப்பதில்லை. அதேபோல், இங்கு விருப்பப்படுவோர் வேறு மொழிகளை கற்பதையும் தடுக்கவில்லை.
மாநில உரிமை
ஆனால், ஒன்றிய அரசின் கொள்கைகளையும், தங்களுக்கு உகந்த மொழியையும் திணிக்கவே மும்மொழி கொள்கையை மறைமுகமாக பயன்படுத்துகிறது. அதன் சாதக, பாதகங்களை ஆராய்ந்த பின்தான், தமிழ்நாடு இருமொழி கொள்கையை கடைப்பிடிக்கிறது; தொடர்ந்து கடைப்பிடிக்கும். பல மொழி, கலாசாரம், பண்பாட்டை கடைப்பிடிக்கும் நாட்டில், மாநிலங்கள் தங்களுக்கான மொழிக் கொள்கையை கடைப்பிடிப்பது அவற்றின் உரிமை.இவ்வாறு கோவி.செழியன் கூறினார்.