* கலி. பூங்குன்றன்
பெரும்பாலும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை திராவிடர் கழகப் பொதுக் குழுவை கூட்டி வருகிறோம். அவ்வப்போது எழும் சவால்களின் இடுப்பு எலும்பை முறிக்கும் வகையிலும், தொலைநோக்கோடு செய்யப்பட வேண்டிய பணிகளைப் பட்டியலிட்டும் தீர்மானங்களை வடிக்கிறோம்.
பொதுக் குழுவாக இருந்தாலும் சரி, தலைமைச் செயற்குழுவாக இருந்தாலும் சரி, மாநாடுகளாக இருந்தாலும் சரி நாம் நிறைவேற்றும் தீர்மானங்கள் எதிர்காலத்தில் சட்டங்களாகப் பரிணாமம் பெற்று வந்திருக்கின்றன என்பது வரலாறு!
சிதம்பரம் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் ஒவ்வொன்றும், நம் கழக அளவில் மட்டுமல்ல – நாட்டு மக்களுக்கான வழிகாட்டும் திசை விளக்குகளே.
அரசு கவனம் செலுத்தி செயல் வடிவம் கொடுக்கப்பட வேண்டியவையே!
1929இல் செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டுத் தீர்மானங்களை இன்றுவரை நாம் மட்டுமல்ல – நாட்டு மக்களே சுவாசித்துக் கொண்டு தானே இருக்கிறார்கள் – நாளையும் அவை பேசு பொருளாக இருக்கவே செய்யும்.
தனி மனிதராகப் புறப்பட்டு, தன் பயணத்தில் தனக்குப் பின் யார் வருகிறார்கள் என்று திரும்பிப் பார்க்காமல், தனித் தன்மையான சுயமரியாதை சுய சிந்தனை விதைகளை நாடெங்கும் தூவிச் சென்ற சுத்த ரத்தவோட்டமுடைய பிறவித் தலைவராக வாழ்ந்து காட்டிய காலக் கதிரவன் தந்தை பெரியார்.
பதவிகள் பக்கம் வந்து பல்லிளிக்கும், அதிகார வர்க்கம். ஆசை வார்த்தைகளை வாரி இறைக்கும் – எதையும் சட்டை செய்யாது தனது பாதையைத் தானே தேர்ந்ெதடுத்து வீறுநடை போட்டவர் வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார்.
ஆட்சிச் சிவிகையில் ஏறுவதற்கு எத்தனையோ வாய்ப்புகள் அவர் கதவைத் தட்டியதுண்டு.
ஆசாபாசத்திற்கு ஆளாகவில்லை இந்தத் தலைவர்! அதே நேரத்தில் ஆட்சிகளை வழிநடத்திய இடத்தில் அவர் இருந்து வந்திருக்கிறார்.
‘‘இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை!’’ என்று முதலமைச்சர் அண்ணா சட்டப் பேரவையிலேயே பிரகடனப்படுத்தவில்லையா?
‘‘பெரியார் தான் தமிழ்நாடு அரசு – தமிழ்நாடு அரசே பெரியார் அரசு’’ என்று முத்தமிழ் அறிஞர் முதலமைச்சர் மானமிகு கலைஞர் சட்டப் பேரவையில் சங்கநாதம் செய்யவில்லையா?
பெரியார் நினைவு சமத்துவப்புரங்களை ஏற்படுத்தி ஜாதி ஒழிப்புச் சாசனத்தை ஆக்கப் பூர்வமாக இந்தியத் துணைக் கண்டத்திலேயே சமைத்துக் காட்டியவர் மானமிகு கலைஞர்.
காங்கிரஸ் ஒழிக என்று காங்கிரசை விட்டு காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் சூளுரைத்த தந்தை பெரியார், பச்ைசக் காங்கிரஸ்காரரான காமராசருக்குக் கைலாகு கொடுத்து, கல்விக் கண்ணைத் திறந்த பச்சைத் தமிழர் காமராசர் என்று பட்டிதொட்டி எல்லாம் பறைசாற்றவில்லையா? நல்ல பெயர் வைக்க வேண்டுமா என்று கேட்டு ‘காமராஜ்’ என்று
குழந்தைகளுக்குப் பெயர் சூட்டியது வீண்
போகவில்லையே!
‘கதர்ச்சட்டைக்குள் கருப்புச் சட்டை!’’ என்று ‘கல்கிகள்’ கார்ட்டூன் போட்டுக் காட்டி இன எதிரிகளுக்கு அடையாளம் காட்டின என்றால் அதன் பொருள் என்ன?
தந்தை பெரியார் ஒன்றை ஆதரித்தாலும் அர்த்தம் இருக்கும் – எதிர்த்தாலும் அதில் நியாயம் இருக்கும்!
ஆனால், அடிப்படைக் கொள்கையில் (Principles) ஆட்டம் இருக்காது. நிறைவேற்றுவதில் வழிமுறைகளில் – திட்டங்களில் (Policy) காலத்தின் பசியை அறிந்து மாற்றமிருக்கும்.
தந்தை பெரியாரின் பேரறிவு நுட்பத்தைப் புரிந்து கொள்வதற்கே தனி அறிவு தேவை.
தந்தை பெரியாரின் அணுகுமுறைகளைக் கொள்கை என்று இடமாறு தோற்றப் பிழையாகக் கண்டு, கல்லெறிந் தவர்கள் உண்டு; அதற்கெல்லாம் அய்யா கவலைப் பட்டதில்லை.
திட்டித் தீர்த்தவர்கள் உண்டு; செவி சாய்க்காமல் அவர் – தொண்டும், பயணமும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
அவர் உடலால் மறைந்து 52 ஆண்டுகள் பறந்தோடி னாலும், அன்றாடப் பேசுபொருளாகத்தானே இருந்து வருகிறார்.
எந்த மேடையில் பேசும்போது கல்லடிப் பட்டாரோ, அதே மேடையில் பிற்காலத்தில் மாலைகளாக அவர் கழுத்தில் விழுந்தன; மாலைக்குப் பதில் ரூபாய்களாகக் குவிந்தன.
எடைக்கு எடை வெள்ளி நாணயங்களாகவும், நவ தானியங்களாகவும், ஆசைப்பட்ட பொருள்களாகவும் வந்து குவியவில்லையா? அவை எல்லாம் பொதுக் காரியங்களுக்கே சென்றன.
இவ்வளவையும் பெற்றுக் கொண்டு, ‘உங்களுக்கு புத்தி வந்திருக்கிறது!’ என்று காட்டிக் கொண்டுள்ளீர்கள் – நன்றி என்று சொன்ன தலைவரை உலக வரலாறு சந்தித்ததுண்டா?
கல்லூரிக்குச் சென்றதில்லை – ஆனால் மாலை நேரப் பல்கலைக் கழகங்களாகப் பகுத்தறிவுப் பொதுக் கூட்டங் களை அன்றாடம் அன்றாடம் நடத்திக் கொண்டே இருந்தார்.
தான் சொன்னவை. தன் காலத்திலேயே செயல் மலர்களாக மலர்ந்து மணம் வீசியதை சுவைத்ததன் காரணமாக அவர் ஆயுளும் நீண்டு கொண்டே இருந்தது.
பெறாத தாயாக அய்யாவின் வந்தமைந்த அன்னை மணியம்மையாரின் கண்காணிப்பு – ஆயுள் சக்கரத்தைச் சிக்கல் இல்லாமல் சுழலச் செய்து கொண்டே இருந்தது.
‘திராவிடர் கழகத்தில் எத்தனை உறுப்பினர்கள்! ‘விடுதலை’ சந்தாவின் எண்ணிக்கை எவ்வளவு?’ இவற்றை எல்லாம் தரவுகளாகக் கணக்கிட்டு, தந்தை பெரியாரையோ திராவிடர் கழகத்தையோ கணிக்க முடியாது.
கண்ணுக்குத் தெரிந்த கருஞ்சட்டைத் தொண்டர்கள் உண்டு, கண்ணுக்குத் தெரியாத பல்வேறு உடைகளை அணிந்து கொண்டு அய்யாவின் கொள்கையை மட்டும் சுவாசித்துக் கொண்டிருக்கும் குடும்பங்களைக் கணக்கிலிட முடியாது.
‘திராவிட மாடல்’ அரசு நடத்தி வரும் – சமூகநீதிக்கான சரித்திர நாயகரான முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார் பிறந்த நாளை ‘சமூகநீதி’ நாளாக அறிவித்ததோடு அல்லாமல், தந்தை பெரியாரின் விழுமிய கொள்கையின் சாராம்சத்தை அரசின் கடைநிலை ஊழியர் முதல் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் வரை உறுதி மொழியாக எடுக்க வைத்தது. சாதாரணமானதா? 21 மொழிகளில் தந்தைபெரியாரின் படைப்புகள் தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்டுள்ளனவே!
இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட சமூக சீர்திருத்த அமைப்புகள், அவற்றைத் தோற்றுவித்த தலைவர்கள் மறைந்த பிறகு அமைப்புகளும் மறைந்து போன நிலையில், திராவிடர் கழகம் மட்டும் முன்னிலும் உயிர்த் துடிப்போடு துள்ளும் சக்தியாக வீறு நடை போடுவது எப்படி – அதன் இரகசியம் என்ன?
1) உத்தமமான தலைமை (தலைவர்கள்)
2) உண்மையான தொண்டர்கள்
3) உறுதியான கொள்கை
4) யோக்கியமான பிரச்சாரகர்கள் என்று உத்தமமாக இயக்கத்திற்கு இலக்கணம் வகுத்துச் சென்றார் தந்தை பெரியார்.
ஆம், இவைதான் அந்த அரும்பெரும் தலைவர் மறைவுக்குப் பிறகும் திராவிடர் கழகம் திண்டோள் தூக்கித் துள்ளி நடைபோடுவதற்குக் காரணம்.
தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு பயிற்சிப் பட்டறைகள் மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் உருக்கி வார்த்தெடுக்கப்பட்ட ஆயுதங்களாக்கப் பட்டுள்ளனர்!
பயிற்சிப் பட்டறைகள் கழகத்தின் பால பாடமான ஒன்றாகும், புதுப்புது முகங்களை அன்றாடம் பார்க்கிறோம் – இளைஞர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் இயக்கத்தை நோக்கி வருவதைக் காண முடிகிறது.
ஜாதிமறுப்புத் திருமணங்கள் மத மறுப்புத் திருமணங்கள் சர்வ சாதாரணமாகி விட்டன. இவையெல்லாம் எதைக் காட்டுகி்ன்றன?
தந்தை பெரியார் போட்ட அஸ்திவாரம் அவ்வளவுப் பலமானது பிரச்சாரம் – போராட்டம் என்று சுவர்க் கடிகாரத்தின் பெண்டுலம் போல் இயங்குவது, இயங்கிக் கொண்டு இருக்கிறது. ஆம், இது வெறும் கட்சியல்ல – இயக்கம் – அதனால்தான் இயங்கிக் கொண்டே இருக்கிறது.
இயக்கப் பிரச்சாரம் ஒரு பக்கம் – இயக்க வெளியீடுகள் இன்னொரு பக்கம் என்று இறக்கை கட்டி பறந்து கொண்டுள்ளன.
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். வைக்கம் வீரர் தந்தை பெரியாரின் நூற்றாண்டு வெற்றி விழாக்களை தமிழ்நாடு அரசும் கேரள அரசும் இணைந்து கோலா கலமாக கொண்டாடியுள்ளன. நினைவகங்கள் நிர்மாணிக் கப்பட்டுள்ளன வைக்கத்தில்.
இன்னும் நான்கு ஆண்டுகளில் தந்தை பெரியாரின் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா வர இருக்கிறது. இந்த நான்காண்டுக்குள் முதலாம் ஆண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் இரு கிளைக் கழகங்கள் தொடங்கப்பட வேண்டும்.
150 கிளைகள், புதிய புதிய இடங்களை மய்யப்படுத்தி (நகரங்கள், பெரு கிராமங்கள்) பிரச்சாரம் சுழன்றடிக்க வேண்டும்.
* ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம்.
* சமூகநீதியை முன்னிறுத்தி பல்வேறு முனை செயற்பாடுகளை திட்டமிட்டுப் பரவலாக நடத்திட வேண்டும்.
* ஜாதி, ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, பாலியல் நீதி, அதுவும் சமூகநீதியை உள்ளடக்கமாகக் கொண்ட பாலியல் ரிதியாக இருப்பது கட்டாயம் ஆகும்.
* கலைத்துறை ‘மந்திரமா தந்திரமா?’ பயிற்சிப் பட்டறைகளை நடத்தி புத்தம் புரியவர்களை உருவாக்கிக் களத்தில் இறக்கிவிட வேண்டும்.
* மகளிர் அணி, மகளிர்ப் பாசறைகளை வலுப்படுத்த வேண்டும் – கலந்துரையாடல்கள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும்.
* மாணவர் கழகம், இளைஞரணி, பலப்படுத்தப்பட வேண்டும்.
* இளைஞர் அணியினரில் தேர்வு செய்து பெரியார் சமூகக் களப்பணி பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
* இலக்கிய, எழுத்து, படைப்பாற்றல், பேச்சாற்றல், விவாதப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, திராவிடர் கழகம் என்றால் சும்மாவா என்று மற்றவர்கள் மலைக்கும் அளவுக்கு நேர்த்தியான செயல்பாடுகள் உடனடியாகவே தொடக்கப்பட வேண்டும்.
* வாகனம் மூலம் தகவமைத்து ஒரே நேரத்தில் தமிழ்நாட்டின் 3 அல்லது 4 பகுதிகளில் சுற்றிச் சுற்றிவந்து புத்தக விற்பனையை வேகப்படுத்த வேண்டும்.
* இயக்க ஏடுகளுக்கான சந்தா சேர்ப்பு அன்றாடப் பணியாக இருக்க வேண்டும்.
* ஏற்கெனவே உள்ள படிப்பகங்களை சிறப்புடன் செயல்பட வைத்தல் – புதிய படிப்பகங்களை உருவாக்குதல் அவசியம்.
* பகுத்தறிவுக் கரும்பலகைகள் அமைத்து கருத்துகளை நாளும் எழுதி வர வேண்டும்.
* ஆண்களுக்கும் சமையல் கலை கற்பித்தலும் அவசியம்.
* இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) பிரிவில் கண்டுள்ள அறிவியல் மனப்பான்மை, சீர்திருத்த கருத்துகளை, உணர்வுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்பதை உண்மையில் நூற்றுக்கு நூறு செயல்படுத்திவரும் ஒரே இயக்கம் திராவிடர் கழகமே! அதை மேலும் செழுமைப்படுத்தப்பட வேண்டும்.
* நாம் வாழும் இடங்களில் நமது இயக்கத் தோழர்கள் முதல் மனிதராக மதிக்கப்படும் வகையில் தொண்டறம் புரிய வேண்டும்.
* இயக்க அமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்துத் தயாரிப்பதற்கே – தோழர்களே நமக்குப் பற்பல களங்கள் காத்திருக்கின்றன. தோள் தூக்குங்கள் – இளைஞர்களைத் தோளில் தூக்கிக் கொண்டாடுங்கள்.
‘‘உலகமே பெரியார் மயம் –
பெரியாரே உலகமயம்!’’
என்ற நிலை வெகு தூரத்தில் இல்லை. பன்னாடுகளிலும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தோழர்கள் சிந்தனையாளர்கள் நம்மோடு தொடர்பு கொண்டு இருக்கிறார்கள். ‘திராவிடப் பொழில்’ காலாண்டு இதழ் ஆய்வு நோக்கில் சிறப்பாக வெளிவந்து கொண்டுள்ளது.
பெரியார் பன்னாட்டு அமைப்பு அதனுடைய பணிகளை ஆக்கப்பூர்வமாக செய்து வருகிறது.
இந்தக் கால கட்டத்தில் இந்தியா முழுமைக்கும் தந்தை பெரியாரின் சமூகநீதிக் கொள்கை, மதச் சார்பின்மை தேவைப்படுவதை உணரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
எந்த காங்கிரஸ் தந்தை பெரியார் வலியுறுத்திய வகுப்புரிமையை நிராகரித்ததோ, அந்தக் காங்கிரஸ் அதை இன்று இளம் தலைவர் இராகுல்காந்தி தலைமையில் முன்னெடுத்துள்ளது.
இந்தியாவே தந்தை பெரியாரின் சித்தாந்தத்தை இரு கரம் விரித்து எதிர் நோக்கும் காலப்பருவம் இது!
நாட்டில் தூண்டப்படும் மதவாதப் போக்குகள் இதற்கான அவசியத்தை உந்தித் தள்ளுகின்றன!
தயாராவீர்! தோழர்களே! கழகத்தைக் கட்டமைப்பீர் வீரர்களே!
நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது. வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்! நம்முடைய வழி வன்முறைக்கு இடம் இல்லாதது – அறவழித்தடத்தைக் கொண்டது.
நினைப்பு சரியாக இருக்க வேண்டுமே தவிர நினைத்த படியெல்லாம் நடப்பது அல்ல!
மீண்டும் நினைவூட்டுகிறோம்.
1) உத்தமமான தன்னலமற்ற தலைமை
2) உண்மையான தொண்டர்கள்
3) உறுதியான கொள்கை
4) யோக்கியமான பிரச்சாரங்கள்
இந்த நான்கும் இருக்கையில் நமக்கென்ன பயம்?
வெற்றி நமதே – வீறு கொள்வீர்!
சிதம்பரம் பொதுக் குழு, பேரணி, பொதுக் கூட்ட ஏற்பாடுகள் எல்லாம் நேர்த்தியானவை – பாராட்டுகள்!
(குறிப்பு: சிதம்பரம் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் நமது தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையைத் தழுவி எழுதப்பட்டது இது)