நமது கண்டனம்!
‘ஆனந்த விகடன்’ ஏட்டின் சார்பில் நடத்தப்பெறும் ‘விகடன்.காம்‘ இணைய தளம் – ஒன்றிய அரசால் முடக்கப்பட்டுள்ளது என்ற செய்தி அதிர்ச்சிக்குரியதாகும்.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பது ஊடகங்கள் – விமர்சனங்களில் கார்ட்டூன் ஒருவகை.
முதிர்ச்சி அடைந்த பல தலைவர்கள், அவர்களைப்பற்றி ஏட்டாளர்கள், கேலிச் சித்திரம் போடும்போது – அது அவர்களையே தாக்குவதாக இருந்தாலும், ஆத்திரப்படாமல், சிரித்துவிட்டு சென்றுவிடுவார்கள்.
ஆனால், இந்தியாவின் கவுரவத்தையே பாதிக்கப்படக் கூடிய, இந்தியர்கள் – அவர்கள் சட்ட விரோதக் குடியேறிகளாக இருந்து வெளியேற்றியவர்களை கை, கால்களில் விலங்கிட்டு, நின்றுகொண்டே பல மணிநேரம் பெண்கள் உள்பட பயணம் என்பதுடன், மனித உரிமை மீறல்கள் என்பதால், அதனை கார்ட்டூனிஸ்ட் படம் போட்டு வெளியிட்டுள்ளனர்.
அது சரியானதா என்பதை அரசு, நீதிமன்றங்களுக்குப் போய் வேண்டுமானால் தீர்வு காணட்டும். அப்படியில்லாமல், அதன் உரிமையைப் பறிப்பது என்பது அதிகார துஷ்பிரயோகம் அல்லாமல் வேறு என்ன?
பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படக் கூடாத சுதந்திரம் நாட்டுக்குத் தேவை!
ஒன்றிய அரசின், பத்திரிகை உரிமைப் பறிப்புக்குக் கண்டனம் தெரிவிக்கின்றோம். ஒன்றிய அரசு உடனே தனது ஆணையைத் திரும்பப் பெறுவது அவசிய அவசரம் ஆகும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
17.2.2025