சென்னை,பிப்.17- மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ் நாட்டுக்கு நிதி கிடையாது என மிரட்டும் விதமாக பேசினால் தமிழர்களின் தனிக்குணத்தை டில்லி பார்க்க வேண்டியிருக்கும் என ஒன்றிய அமைச்சருக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேசிய கல்விக் கொள்கை
‘தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க தமிழ்நாடு அரசு மறுப்பதால் எஸ்எஸ்ஏ நிதியை தமிழ்நாட்டுக்கு ஒதுக்க முடியாது’ என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
‘தலைக்கனம் காட்ட வேண்டாம்; தமிழ்நாடு பொறுக்காது’
– துணை முதலமைச்சர் உதயநிதி
எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதை நாம் அரசியலால் தூண்டப்பட்டு (Politically Motivated) பேசுவதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்லி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
மொழி, இன உணர்வு வந்தப் பிறகு தான் தமிழர்களுக்கு அரசியலே வந்தது; எங்கள் இடுப்பில் கொள்கை எனும் வேட்டி ஏறிய பிறகு தான், தோளில் பதவி எனும் துண்டு வந்தது.
நிதி உரிமையைக் கேட்டால், ஹிந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா?
தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம். ரொம்பவும் வேண்டாம் – சுதந்திரத்துக்கு பிறகான தமிழ்நாட்டின் வரலாற்றைப் படித்தாலே இது உங்களுக்குப் புரியும்.
மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கியது தான் ஒன்றிய அரசு. எங்கள் குழந்தைகளின் கல்விக்கான நிதியை தான் நாங்கள் கேட்கிறோம். நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம். தமிழ்நாடு பொறுக்காது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி
ஒன்றிய அமைச்சர் பேசுவது வெளிப்படையான மிரட்டல். தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாடுவது தான் பாஜகவின் அரசியலா, தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் செயல்களை பாஜக அரசு நிறுத்தாவிட்டால் தமிழ் மக்களின் போராட்ட குணத்துக்கு பதில் சொல்ல நேரிடும்.
அதிமுக மேனாள் அமைச்சர் ஜெயக்குமார்
தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. பாஜக, அரசியல் விளையாட்டால் உண்மையில் பாதிக்கப் படுவது தமிழ்நாட்டு மாணவர்கள்தான். மாணவர்களுக்கு சேர வேண்டிய நிதியை தடைபடுத்தக் கூடாது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை
புதிய கல்விக்கொள்கையை ஏற்காத ஒரே காரணத்துக்காக தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காமல் மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை ஒன்றிய அரசு அபகரிப்பது என்பது கூட்டாட்சி தத்துவத்தை உதாசீனப்படுத்தும் செயலாகும்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ
தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழித் திட்டத்தை ஒன்றிய அரசு திணிப்பதாலே தமிழ்நாடு அரசு அதை கடுமையாக எதிர்க்கிறது. மாநில அரசுகளின் உரிமையை நசுக்க நினைப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது.
வி.சி.க. தலைவர் திருமாவளவன்
தேசியக் கல்விக் கொள்கையை காரணம் காட்டி தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவது மிரட்டல் நடவடிக்கையாகும். இந்த போக்கை ஒன்றிய அரசு கைவிடாவிட்டால் தமிழ்நாட்டு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.
பா.ம.க. தலைவர் அன்புமணி
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதி வழங்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மாநில அரசின் உரிமைகளை ஒன்றிய அரசு மதிக்க வேண்டும்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா
தமிழ்நாட்டில் மும்மொழி கல்வியை ஒன்றிய அரசு கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல. இவ்விவகாரத்தில் மாற்றான் போக்கு எண்ணத்தோடு ஒன்றிய அரசு செயல்படுவது மாணவர் களின் எதிர்காலத்தை சூனியமாக்கும்.
த.வெ.க. தலைவர் விஜய்
மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன. மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பது ஜனநாயகத்துக்கு எதிரான பாசிச அணுகுமுறையாகும். இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளனர்.