செய்திச் சுருக்கம்

Viduthalai
4 Min Read

பாரம்பரிய மருத்துவர் பணியிடங்களை
நிரப்ப நடவடிக்கை
பாரம்பரிய மருத்துவத் துறையில் காலியாக உள்ள 29 மருத்துவப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அந்தப் பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியான நபர்கள் மார்ச் 4ஆம் தேதி வரை mrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் 74 பெண் எம்.பி.க்கள்
தற்போதைய 18ஆவது மக்களவையில் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் 74 பேர் பெண்கள். இவர்களில் அதிகபட்சமாக 11 பேர் மேற்கு வங்கத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். ஆண் எம்.பி.க்கள் 469 பேரில் அதிகபட்சமாக 73 பேர் உ.பி.யில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். தேர்தலில் பெண்களின் பங்கேற்பை பொறுத்தவரை கடந்த மக்களவைத் தேர்தலில் மகாராட்டிராவில் இருந்து அதிகபட்சமாக 111 பெண்கள் போட்டியிட்டனர். இதையடுத்து உ.பி.யில் இருந்து 80 பேரும் தமிழ்நாட்டில் இருந்து 77 பேரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 142 தொகுதிகளில் பெண் வேட்பாளர் ஒருவர் கூட போட்டியிடவில்லை என தேர்தல் ஆணையம் தகவல்.

பணிபுரியும் மகளிருக்கான கூடுதல் மகளிர் விடுதிகள்
கல்வியறிவு, குடும்பச் சூழல், சமூக தகுதி உள்ளிட்ட காரணங்களால், தமிழ்நாட்டில் மகளிர் பணிக்கு செல்வது அதிகரித்து உள்ளது. நாட்டின் மொத்த மகளிர் பணியாளர்களில், 41 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர். எனவே பணிபுரியும் மகளிருக்கு உதவும் வகையில், சமூக நலத்துறையின் கீழ் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதி கழகம் இயங்கி வருகிறது. இதன் விளைவாக, சென்னை, மதுரை, கோவை நகரங்களில் கூடுதலாக மகளிர் விடுதிகள் கட்ட அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக 26 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.

சென்னை – விசாகப்பட்டினம் – புதுச்சேரி இடையே சுற்றுலா கப்பல்
சென்னை – விசாகப்பட்டினம் – புதுச்சேரி இடையே ஜூன், ஜூலையில் சுற்றுலா கப்பல் இயக்கப்பட உள்ளது. விசாகப்பட்டினத்தில் சுற்றுலா முகவர்கள் கூட்டம் 13.2.2025 அன்று நடைபெற்றது. இதில் சுற்றுலா வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது வரும் ஜூன், ஜூலை மாதங்களில் சென்னை – விசாகப்பட்டினம் – புதுச்சேரி இடையே 3 சேவைகள் சுற்றுலா கப்பல் இயக்குவது குறித்து உறுதி செய்யப்பட்டது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைப் படிப்புகளில் சேர்க்கை
சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வியில் வழங்கப்படும் இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. தொலைநிலைக் கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர் பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கிவரும் தொலைநிலைக் கல்வி நிறுவன ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை மய்யத்தின் வழியாக சேரலாம். மேலும் www.ideunom.ac.in என்ற இணைய தளத்தை பயன்படுத்தி இணைய வழியிலும் விண்ணப்பிக்கலாம் என இப்பல்கலைக் கழக பதிவாளர் எஸ்.ஏழுமலை தெரிவித்துள்ளார்.
சொத்துவரி செலுத்துவோர் தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்கள் தங்களது தொலைப்பேசி எண்களை பெருநகர சென்னை மாநகராட்சி இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் தங்களது சொத்துவரி சம்பந்தமான விவரங்களை எளிதாக பெற இயலும். ஆகையால் சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்களில் இதுவரை தொலைப்பேசி எண்ணை பதிவு செய்யாதவர்கள் மற்றும் மாற்றம் செய்ய விரும்புபவர்கள் “www.chennaicorporation.gov.in” என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் – கிளாம்பாக்கம்
மெட்ரோ ரயில் நீட்டிப்பு
சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கையின்படி, சென்னை விமான நிலையத்திலிருந்து, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கத்தை இணைக்கும் வகையில் மொத்தமாக 15.46 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ வழித்தடம் அமைய உள்ளது. மொத்தம் 13 மெட்ரோ ரயில் நிலையங்கள் இதற்கிடையில் அமைக்கப்படவுள்ளன. இதன் மொத்த மதிப்பீடு ரூ.9.335 கோடி எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

அணுமின் நிலைய மின்சாரம்
கொள்முதல் ஒப்பந்தம் புதுப்பிப்பு
கல்பாக்கம், கைகா அணுமின் நிலையங்களிலிருந்து மீண்டும் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை தமிழ்நாடு மின்வாரியம் மீண்டும் புதுப்பித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் சென்னை அண்ணா சாலையிலுள்ள மின்வாரியம் தலைமை அலுவலகத்தில் 14.2.2025 அன்று நடைபெற்றது. இதில், மின்வாரியம் சார்பில் தமிழ்நாடு மின்வாரிய நிறுவனத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் அதன் இயக்குநர் பி.வினோத்குமார், கர்நாடக மாநிலம், கைகா அணுமின் நிலைய இயக்குநர் சேவுய்யா முப்பராஜி மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக இயக்குநர் அ.ரா.மாஸ்கர்னஸ் இடையே இந்த ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இதனால், தமிழ்நாட்டிற்கு 526 மெகாவாட் மின்சாரம் வரும் 15 ஆண்டுகளுக்கு தடையின்றி கிடைக்கும். தமிழ்நாட்டில் பெருகி வரும் மின் தேவையின் ஒரு பகுதியை பூர்த்தி செய்ய இந்த மின் கொள்முதல் ஒப்பந்தம் பயனுள்ளதாக இருக்கும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *