தமிழ்நாடு ஆளுநரின் நடத்தை குறித்து உச்சநீதிமன்றம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியிடம் கேட்ட நுணுக்கமான கேள்விகள், அவரது அரசமைப்பு கடமையை வேண்டுமென்றே மீறுவதை அம்பலப்படுத்தியுள்ளது.
சட்டமன்றம் இரண்டாவது முறையாக நிறைவேற்றிய பின்னர் ஒப்புதல் அளிக்க மறுத்து அதனை மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய போது அதனை வேண்டுமென்றே குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் சட்டவிதிமீறல் குறித்த ‘நறுக்’ கேள்விகளைக் கேட்டுள்ளது. இது நேர்மையான நபர்களுக்கு ஒரு தலைகுனிவு ஆகும்.
அரசமைப்பின் சரத்து 200இன் விதிமுறையின்படி அரசமைப்புச் சட்டம் தந்த கடமையை தவிர்ப்பதற்காக மட்டுமே ஆளுநர் இந்த மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினாரா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
ஒப்புதல் மறுப்பு ஒரு மசோதாவினை காலாவதி ஆக்கிவிடும் என்ற நிலை 2023இல் நீதிமன்றத்தின் தீர்ப்பால் மாற்றப்பட்டது. ஆளுநர்கள் அவ்வாறு செயல்படும்போது, விதிமுறையில் கோரப்பட்டுள்ளபடி மசோதாவை சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும்; சட்டமன்றத்தால் மீண்டும் நிறைவேற்றப்பட்டால், அவர்கள் ஒப்புதல் அளிக்க கட்டுப்பட்டவர்கள் என தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதிகள் தெளிவாக கூறியுள்ளனர். அதாவது மாநில சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை கையாளும் போது ஆளுநர்கள் பின்பற்ற வேண்டிய சரியான நடவடிக்கையை தீர்மானிப்பதில் ஆளுநருக்குள்ள அதிகாரம், அதனை அவர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பும் உரிமை போன்ற வாதங்கள் கவனத்திற்குரியதாக தோன்றலாம்.
தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கில் வரப்போகும் முடிவு இந்தியாவின் அனைத்து மாநிலத்திற்குமே பெரும் உரிமைக்களமாக இருக்கப் போகிறது என்பதில் அய்யமில்லை.
மாநில சட்டமன்றம் அனுப்பிய மசோதாக்களில் சிலவற்றின் மீது இரண்டு ஆண்டுகளாக அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒப்புதல் மறுக்கும்போது முரண்பாடு தொடர்பான தனது சந்தேகங்களை தெரிவிக்கவும் இல்லை. மேலும், மசோதாக்கள் இரண்டாவது முறையாக அவருக்கு சமர்ப்பிக்கப்பட்டபோது, ஒப்புதல் அளிக்க கட்டுப்பட்டிருந்த உண்மையை புறக்கணித்து, அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.
2023இல் நடந்த விசாரணையின் போதும் கூட, ஒப்புதல் வழங்குவதை தவிர்க்க ஆளுநர், அதே மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதன் மூலம் என்ன செய்ய நினைக்கிறார் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தனது விருப்பு வெறுப்பிற்கு ஒத்துப்போகாத எந்த சட்டத்தையும் முடக்க ஆளுநர் ரவி முனைந்து வருவதாக தெரிகிறது.
தமிழ்நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு ஆளுநர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்துக் கொண்டு இருக்கிறார். ஒட்டுமொத்த மாநில மக்களின் உரிமைகள் மீது தனது சொந்த விருப்பு வெறுப்பை காரணம் காட்டி பல்வேறு வழிகளில் மாநில ஆட்சிக்கு தொல்லைகள் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். ஒன்றிய அரசும் இந்த விவகாரத்தில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கிறது,
நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி மதிப்பாரா அல்லது நாக்பூர் தலைமை கூறும் பாதையில் மட்டுமே நடப்பாரா?