புதுடில்லி, பிப்.12 மக்களவையில் நேற்று (11.2.2025) மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பேசுகையில், மக்களவையின் செயல்பாடுகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு சமஸ்கிருதம் உட்பட 22 இந்திய மொழிகளில் வழங்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நாடாளு மன்றக் குழுத் துணைத்தலைவரும் மத்திய சென்னை எம்.பியுமான தயாநிதி மாறன் பேசியதாவது:
‘‘நீங்கள் மாநிலங்களின் அதிகாரப்பூர்வ மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வது நிச்சயமாக வரவேற்கத்தக்கது. ஆனால், எந்த மாநிலம் சமஸ்கிருதத்தை அதன் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்துள்ளது? பேச்சுவழக்கில் இல்லாத சமஸ்கிருதத்திற்காக ஏன் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறீர்கள்?
இந்தியாவின் எந்த மாநிலத்திலும் யாரும் சமஸ்கிருத மொழியை பயன்படுத்தவில்லை. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வெறும் 24,821 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுவதாகக் கூறப்படுகிறது. இந்த தரவு இருக்கும்போது, உங்கள் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுக்காக ஏன் பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டும்? என்று பேசினார்.
புலம் பெயர்ந்தோர் நாடு கடத்தல்
ட்ரம்ப் நடவடிக்கைக்கு போப் கண்டனம்
ரோம், பிப்.12 அமெரிக்க அதிபராக டிரம்ப பதவி ஏற்ற பிறகு அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தி வருகிறார். இந்த நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் நேற்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அமெரிக்க ஆயர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: டிரம்ப் நிர்வாகத்தில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தோரை பெருமள வில் நாடு கடத்துவது பெரிய கண்டனத்திற்குரியது.
புலம்பெயர்ந்த மக்களை வலுக்கட்டாயமாக நாடு கடத்தும் திட்டம் அவர்களின் உள்ளார்ந்த கண்ணியத்தை இழக்கச் செய்து மிகவும் மோசமான முடிவுக்கு தள்ளிவிடும். புலம்பெயர்ந்தோரை கவனித்துக்கொள்வதுதான் நமது முன்னுரிமை. அவர்களை நாடுகள் வரவேற்க வேண்டும், பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.