சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்!

Viduthalai
7 Min Read

எங்கும் சுயமரியாதை சத்தியாக்கிரகம்

தென்னாட்டில் மாத்திரமல்லாமல் இந்திய நாடு முழுவதிலுமே இதுசமயம் சுயமரியாதை உணர்ச்சி பெருகி வருகின்றதைப் பார்க்க ஒரு சிறு கூட்டத்தாரான பார்ப்பனர்களைத் தவிர, மற்ற எல்லோருக்கும் ஆனந்தத்தை விளைவிக்கும் என்றே எண்ணுகிறோம். கொஞ்ச நாளைக்கு முன்பு, வடதேசத்தில் உள்ள படகு ஓட்டும் கூட்டத்தாரான செம்படவர்கள் ஒன்று சேர்ந்து, தங்களைத் தீண்டுவதில்லை என்கின்ற வகுப்பாருக்கு படகு ஓட்டுவதில்லை என்று கட்டுப்பாடு செய்து கொண்டது யாவருக்கும் ஞாபகமிருக்கலாம்.

மனுதர்மம், புராணங்களை
பறிமுதல் செய்க!
மறுபடியும், திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் சத்தியாக்கிரகம் ஆரம்பித்ததும், அதற்கு சிறீமான் காந்தி மத்தியஸ்தராயிருந்து அரசாங்கத்தார் சீக்கிரம் அனுகூலம் செய்வார்கள் என்று ஒப்புக் கொண்டு இருப்பதும், புராணம், சாஸ்திரம் முதலிய குப்பைகளை எரிப்பதுடன், மத ஆச்சாரியார்கள் என்பவர்களையும் பகிஷ்கரிக்க வேண்டு மென்று பம்பாய் மாணவர்கள் ஒன்று கூடி தீர்மானித்ததும், சென்னையிலும் அதுபோலவே பார்ப்பனரல்லாத வாலிப மகாநாட்டில், மனிதனின் சுயமரியா தைக்கு விரோதமான மனுதர்ம சாஸ்திரம், புராணம் இவைகளைச் சர்க்கார் பறிமுதல் செய்யவேண்டுமென்று தீர்மானம் செய்ததும், தாழ்ந்த ஜாதி, தீண்டத்தகாத ஜாதி, சூத்திரன் ஆகிய வார்த்தைகளை உபயோகித்தால் அவர்களைக் கிரிமினல் சட்டப்படி தண்டிக்கச் சட்டமேற்படுத்த வேண்டும் என்று சொன்னதும், ஆதி திராவிடர்கள் என்கிற கூட்டத்தார் மகாநாட்டிலும் வருணாசிரம தர்மத்தைப் போதிக்கும் ஆதாரங்களையெல்லாம் பறிமுதல் செய்யவேண்டுமென்று பேசியதும், தீர்மானித்ததும் மற்றும் பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாட்டிலும், கும்பகோணம் நாடார் சமூக மகாநாட்டிலும் சுயமரியாதை சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவளித்ததும், பம்பாயிலுள்ள பல மக்களும் கோவிலுக்குள் போக சத்தியாக் கிரகம் ஆரம்பித் திருப்பதும், மற்றும் அங்குள்ள தமிழ் மக்கள் பம்பாயி லுள்ள சென்னைப் பார்ப்பனர்கள் ஓட்டல்களில் உள்ள வித்தியாசத்தை ஒழிக்க ஜாதி சம்ஹார சங்கிர சங்கத்தார் சத்தியாக்கிரகம் செய்ய முன் வந்திருப்பதும், மற்றும் பம்பாயில் உள்ள பனஸ்வதி என்கின்ற ஆலயத்தில் தரிசனம் செய்ய ஆவலுள்ள யாரையும் உள்ளே விடாததற்காக அக்கோவிலையே பகிஷ்கரிக்க வேண்டுமென்று, முடிவுசெய்ததும், மகத் என்கின்ற இடத்தில் உள்ள பொதுக் குளத்தில் ஒரு கூட்டத்தாரை ஸ்நானம் செய்யவொட்டாமல் தடுப்பதை ஒழிக்க டிசம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் சத்தியாக்கிரம் செய்யப் போவதாய் ஏற்பாடு செய்து 500 ரூ. வசூலாயிருப்பதாயும் பல தொண்டர்களும் சேர்ந்திருப்பதாகவும் தினப்படி பத்திரிகைகளில் காணப்படுகின்றன.
இது மாத்திரமல்லாமல், சமூகங்களில் உள்ள சில கொடுமைகளையும் விலக்குவதற்காக பெண்களைத் தயாரிப்பதான பொட்டுக் கட்டும் வழக்கத்தை ஒழிக்க செங்குந்த சங்கங்களும், சட்டசபை மசோதாக்களும் பறந்து கொண்டுமிருக்கின்றன. மது விலக்குக்கும் எங்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. ஆகவே, நாட்டின் சுயமரியாதைக்கும், ஒழுக்கத்திற்கும் ஆன வேலைகள் தீவிரமாய் நடை பெறுவதுடன், இன்னமும் ஒவ்வொருவருடைய கவனமும், உணர்ச்சியும் இதிலேயே செல்லும் குறிகளும் காணப்படுகின்றன.

ஓலமிடும் பார்ப்பனர்கள்
இப்படி உலகம் முன்னேறிக்கொண்டிருக்கும் நாளையில், நம் நாட்டுப் பார்ப்பனர்களின் யோக்கியதை எப்படி இருக்கின்றது என்று பார்ப்போமானால், இவைகள் ஒவ்வொன்றுக்கும் முட்டுக்கட்டையாய் இருந்து கொண்டு மதம் போச்சு, கடவுள் போச்சு, கோவில் போச்சு, குளம் போச்சு, நாஸ்திக மாச்சுது என்பதாக ஓலமிட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றிப் பிழைக்கப் பார்க்கின்றார்கள். மக்களின் சுயமரியாதைக்கும், ஒழுக்கத்திற்கும் ஏற்படுத்துகிற இயக்கங்களை வைத்துக் கொண்டு, அதை அழிப்பதற்கும் முயற்சி செய்து கொண்டு, முட்டாள்களையும், அயோக்கியர்களையும், வயிற்றுச்சோற்றுக் கூலிகளையும் பொறுக்கி எடுத்துத் தங்களுடன் சேர்த்துக்கொண்டு, அவர்களுக்குக் காசு, பணம், பட்டம், பதவி மற்றும் என்னென்னவோ முதலியவைகளை உதவி, இவற்றின் மீது ஏவிவிட்டு நாட்டில் கலகம் விளைவிப்பதும், மக்களுடைய கவனத்தைத் தப்பு வழியில் இழுத்து விடுவதுமான கொடுமைகள் ஒருபக்கம் செய்து கொண்டு, மற்றொரு பக்கம் காங்கிரசு என்றும், சுயராஜ்யம் என்றும் பித்தலாட்டப் பெயர்களை வைத்துக் கொண்டு, திருட்டுத்தனமாய்ச் சர்க்காருக்கு உள் ஆளாய் இருந்து உத்தி யோகங்கள் பெற்று, மாதம் 1000, 2000, 5000 சம்பளம் பெறுவதில் கவனம் செலுத்திக்கொண்டு ஈனவாழ்வு வாழ்வதையே பொதுநல சேவையாய் காட்டிக்கொண்டுமிருக் கிறார்கள். அத்தோடு அவர்கள் இழிதொழில் நிற்கின்றதா என்று பார்த்தால் இல்லவே இல்லை.

பார்ப்பனர்களை நத்திப் பிழைக்கலாமா?
இவ்வளவு அக்கிரமங்களையும் செய்து கொண்டு இருப்பதல்லாமல், இதை யாராவது வெளியில் எடுத்துச்சொன்னால், அவர்களை வகுப்புத் துவேஷக் காரர்கள் என்றும், அசுரனென்றும், ராக்கதனென்றும் சொல்லி விஷமப் பிரசாரம் செய்வதுமாயிருக்கின்றார்கள். இந்த விஷயங்களை உணருவதற்கு நமது நாட்டு மக்களுக்கு புத்தி இல்லாமல், இனியும் அப்பார்ப்பனர்களை நத்திக் கொண்டு பிழைக்கவே ஆசைப்படுகின்றார்கள். இந்த மக்களைப் பார்க்கும்போது, ஒரு வேசி வீட்டில் உள்ள வாலிபன் ஒருவன், வேசியான தன் தாயாருக்கோ, தமக்கைக்கோ ஆள்களைக் கூட்டிக்கொண்டு போவதையும், தூதுக்கடிதங்கள் கொண்டு போய் கொடுத்துப் பதில் வாங்கி வருவதையும் பார்ப்பது நமக்கு ஆச்சரியமாய்த் தோன்றவில்லை.
ஏனெனில், ஒரு பெரும் சமுகத்திற்கே இவ்வளவு பெரிய இழிவு செய்து கொண்டிருக்கும் பார்ப்பனனிடம் கூடிக்கொண்டு, அவ்விழிவுகள் தொலைய ஏற்படுத்தப்படும் இயக்கங்களுக்கு விரோதமாய் இருக்க மனம் சம்மதித்த ஒருவனுக்கு மேற்சொன்ன தூதுக் கடிதம் பெற்றுப் போய்வருவது கஷ்டமான காரியமாயிருக்குமென்று நமக்குத் தோன்றவில்லை.

கலாச்சார ஒழிப்பா? மத ஒழிப்பா?
நிற்க, நமது ஒழுக்க முன்னேற்றத்திற்குப் பார்ப்பன முட்டுக்கட்டை எவ்வளவு தூரம் துணிவு பெற்று இருக்கின்றது என்பதைக் காட்ட ஒரு சிறு உதாரணத்தைச் சொல்லுகிறோம். அதாவது சிறீமதி முத்துலட்சுமி அம்மாள் விபசாரத்திற்கு பெண்களை விடும் கோவில்பேரால் பொட்டுக் கட்டும்-வழக்கத்தை ஒழிக்கக் கொண்டுவந்த மசோதாவுக்கு எதிர்ப்பிரசாரம் செய்யப் புறப்பட்ட சுயராஜ்யக் கட்சியும், அதன் உயிர்நாடியுமான சிறீமான் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் இதைப்பற்றி பேசும் போது என்ன சொல்லுகிறார் என்றால் “பொட்டுக்கட்டுதல் என்பது மத ஆச்சாரமும், குல தர்மமுமாயிருக்கின்றது என்று சொல்லப்படுகிறது. கோவிலில் நாட்டியம் முதலிய பணிகள் செய்வதற்கு தேவதாசிகள் ஏற்பட்டிருக் கிறார்கள். எனவே, இது மத சம்பந்தமான விஷயமாய் இருக்கின்றது. இம்மாதிரி மத சம்பந்தமான விஷயங்களில் பிரவேசித்து இன்று பொட்டுக்கட்டுவதை ஒழிக்க வேண்டுமென்று சொல்ல முன் வருவோமானால், மற்றொருபுறம் ஈ. வெ. ராமசாமி நாயக்கரும், வரதராஜுலு நாயுடுவும் கோவிலுக்குள் குருக்கள் ஒழிக்கப்பட வேண்டுமென்று சொல்லுகின்றார்கள் ஆதலால் இம்மாதிரி விஷயங்களில் நாம் தலையிட்டுக் கொள்ளக் கூடாது” என்று பேசினாராம். இதிலிருந்து பார்ப்பனர்கள் நமது நாட்டு ஒழுக்கத்திற்கும், சுயமரியாதைக்கும் எவ்வளவு தூரம் எதிரிகளா யிருக்கின்றார்கள் என்பது விளங்காமல் போகாது. விபசாரம் கூடாது என்றால், அதை ஒழிப்பது மதத்துக்கு விரோதம் என்று சொல்லுவார்களானால், அம்மாதிரி மதத்திற்கு நமது நாட்டில் என்ன வேலை என்று கேட்கின்றோம். அவ்விபசார ஸ்திரீகளை வேண்டி இருக்கின்ற கோவிலும், சாமிகளுக்கும் நமது நாட்டில் எப்படி வைத்துக்கொண்டிருக்கத் தக்கனவாகும்?

இந்துமதக் கடவுள்கள் பேராலல்லவா?
பார்ப்பனப் புரட்டுப்படி நமது மதத்திற்கும், சாமிகளுக்கும் வேண்டாத இழிவான காரியங்கள் எது நமது நாட்டில் இருக்கிறது? தினம் ஆயிரக் கணக்கான ஆடுகளும், மாடுகளும், எருமைக் கிடாக்களும், கோழிகளும், பன்றிகளும் வெட்டுப்படுவது இந்து மதக் கடவுள்களின் பேரினாலல்லவா என்று கேட்கிறோம். தினம் ஆயிரக்கணக்கான கள்ளுக்குடங்களும், சாராயப் புட்டிகளும், கஞ்சா அபின் உருண்டைகளும் படைப்பது இந்துமதக் கடவுள்கள் பேரால் அல்லவா என்று கேட்கின்றோம்.
சிவநேயச் செல்வர்கள் ஒருபுறம் ஜீவகாருண்ணியப் பிரசாரம் செய்து வருவதும், சக்தி (காளி) நேயச் செல்வர்கள் ஒருபுறம் கள்ளும் மாமிசமும் வைத்துப் படைப்பதும் இந்துமதக் கடவுள்கள் பேராலல்லவா என்று கேட்கின்றோம்.
கோவில்களுக்குள் சாமிக்கு நாட்டியமாட என்பதாக அலங்கரித்துக் கொண்டு வந்து, சாமி கும்பிட வந்த பக்தனுக்குப் பாதி கொங்கையைக் காட்டி, கண்சிமிட்டி, ஜாடை செய்து வீட்டிற்குக் கூட்டிப்போய், அவனுக்கு மேகநோயைக் கொடுத்து, மடியில் இருக்கும் பணத்தைப் பிடுங்கிக்கொண்டு வெளியில் தள்ளுவது இந்துமத சாமியின் பேராலா அல்லவா என்று கேட்கின்றோம்.

உங்கள் வீட்டுப் பெண்களை ஏற்பாடு செய்யலாமே!
மக்களுடைய வீடுவாசல்களில் நடக்கும் கல்யாணங்களிலேயே நாட்டியம் கூடாது, அது ஒழுக்கயீனம் ஆவதுடன் மக்களைத் தப்பு வழியில் நடக்கச் செய் கின்றது என்று நாட்டில் பிரசாரம் நடந்துகொண்டு இருக்கும்போது, கோவிலில் சுவாமிக்கு நாட்டியம் வேண்டும் அது மத சம்பிரதாயம் என்று சொல்லுவதானால் அதில் எவ்வளவு போக்கிரித்தனம் நிறைந்திருக்க வேண்டும் என்பதை யோசித்தால் விளங்காமல் போகாது. மதத்திற்கும், சாமிக்கும் பெண்கள் நாட்டியமும், பெண்கள் பணிவிடையும் வேண்டியது அவசியமானால், அந்தச் சாமியைக் கும்பிடும் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் உள்ள பரிசுத்தமான பெண்களை விட்டு ஆடவும், பாடவும், பணிவிடைகள் செய்யவும் ஏன் ஏற்பாடு செய்யக் கூடாது என்று கேட்கிறோம்.

கடவுள், பல புருஷர்களைக் கணவனாய்க் கொண்டே பிழைக்கவேண்டிய ஸ்திரீகளை விட, ஒரு புருஷனையே கணவனாய்க்கொண்டு பிழைக்க வேண்டிய ஸ்திரீயின் ஆட்டபாட்ட பணிவிடைகளை ஏற்கமாட்டாரா என்று கேட்கின்றோம்.
எந்த வழியில் பார்த்தாலும் நமது நாட்டுக்கு ஒழுக்கமும், சுயமரியாதையும் ஏதாவது ஒரு காலத்திலாவது ஏற்பட வேண்டுமானால், பார்ப்பனர்கள் வயிற்றுப் பிழைப்புக்காகவே அவர்களால் சிருஷ் டித்துக்கொண்ட கூட்டுக்கொள்ளைத் தந்திரமாகிய இந்துமதம் என்னும் மாயத்தை ஒழித்தேதான் தீரவேண்டும் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் காட்ட முடியாது.

– குடிஅரசு – கட்டுரை – 06.11.1927

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *