ஆண்ட இனம் அடிமைப் பட்டு அடக்கப் பட்டு ஒடுக்கப்பட்டுத் தன்னிலை மறந்த இனமாக வீழ்த்தப்பட்டது ஆரியரின் சூழ்ச்சியால் சூது மதியால்.கல்வி அறிவு பெறுவதற்கும் வழியின்றி மூடத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் நிலையில் திராவிடர்கள் கிடத்தப்பட்டார்கள்.
இச்சூழலில் 15.01.1868 இல் கேரளாவைச் சார்ந்த தாரவாட் மாதவன் நாயர் பாலக்காட்டுக்கு அடுத்த தாரவாட் என்னும் சிற்றூரில் தோன்றினார். இவர்தம் தந்தை சி.சங்கரன் நாயர் வழக்குரைஞராக மாவட்ட முன்சீப்பாகப் பதவி வகித்தவர். பள்ளிப் படிப்பைப் பாலக்காட்டில் முடித்தார். ஒரு நூலைப் படித்து முடித்து விட்டால் அதனை அப்படியே ஒப்பிக்கும் திறமை இயல்பாகவே பெற்றிருந்தார். அய்ந்தாம் பாரத்தில் படித்துவந்த போதே மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் எஃப் ஏ (Fellow of Arts) பட்டம் பெற்று சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். மேனாட்டு மருத்துவப் பட்டம் பெற 1889 இல் இங்கிலாந்து சென்றார்.
ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருந்ததுடன் வாதாடும் திறனையும் கொண்டவராகவும் எழுத்தாற்றல் பெற்றவராகவும் தம்மை வளர்த்துக் கொண்டார். இங்கிலந்தில் போர்க்குணம் வாய்ந்தவராகவும் உலக அனுபவங்களைப் பெற்றவராகவும் திகழ்ந்தார். அரசியல், வரலாறு போன்றவற்றிலும் தம் அறிவை வளர்த்துக் கொண்டார்.
‘பிரிட்டன் மருத்துவ சங்கம் ‘ போன்ற பல சமூக நல சங்கங்களுடன் தம்மை இணைத்துக் கொண்டார். ஆளுமைத் திறனும் எந்த சிக்கலையும் தீர்வு செய்யும் நுணுக்கத்தைக் கற்றவராகவும் வளர்ந்தார். 1897 இல் மருத்துவ அறிவையும் உலக அறிவையும் பெற்ற ஆற்றல் வாய்ந்தவராக இந்தியா திரும்பினார். சென்னையில் ஏழை மக்களுக்காகப் பல மருத்துவ மனைகளைப் பல இடங்களில் கட்டி வைத்துச் சேவை புரிந்து வந்தார்.
1897இல் காங்கிரஸில் சேர்ந்தார்.சுதேசி இயக்கத்தில் 1905இல் சென்னைக் கூட்டத்தில் பேசினார்.லக்னோவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார்.1907இல் சித்தூர் மாநாட்டில் தலைமை தாங்கிப் பேருரையாற்றினார். சென்னை மருத்துவக் கழகத்தின் துணைத் தலைவர் ஆனார்.’ ஆண்ட்டி செப்டிக்‘ (Anti septic) என்ற மருத்துவ இதழை மாத இதழாக நடத்தி வந்தார். 1914இல் போர்க்களத்திற்கு (volunteer) மருத்துவ நலக் குழுவுடன் சென்று வந்தார் .போரில் போர்க்களப் பணிக்காகத் தங்கப் பதக்கம் பெற்றார்.கடற்படை வீரர்களுக்கும் போர்க்காலத்தில் மருத்துவ உதவிகள் செய்தார்.
1904 முதல் 1916 வரை சென்னை மாநகராட்சி உறுப்பினராகப் பணியாற்றினார். சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் நிர்வாகியாகவும் ஆளுமை பெற்றவராகவும் விளங்கினார். அக்கால அண்ணாவாக இருந்துள்ளார்.இவர் கொண்டுவந்த ‘சாய்க்கடைத் திட்டத்’தால் வெள்ளுடை வேந்தர் தியாகராயருக்கும் இவருக்கும் கருத்து வேற்றுமை உண்டாகியது.
நகராட்சிச் சீர்திருத்தத்தில் காட்டிவந்த ஊக்கத்தால் ‘தென்னிந்தியாவின் பெரோஷ்ஷா மேத்தா’ என்று இந்து நாளிதழ் பாராட்டியது.’மதராஸ் ஸ்டாண்டர்டு ‘ பத்திரிகை ஆசிரியர் ஆனார்.
1912 இல் சட்ட மேலவை உறுப்பினராக இருந்த போது மருத்துவ உதவி, மக்கள் நல்வாழ்வு, கல்வி, தொழில், தொழிலாளர் முன்னேற்றம், தன்னாட்சி அமைப்பு போன்ற விவாதங்களில் கலந்து கொண்டார். சென்னை மருத்துவப் பதிவு மசோதா (Madras Medical Registration Act) இவரது முயற்சியால் கொண்டுவரப்பட்டது. இம்மசோதா மூடத்தன மருத்துவ முறைகளைத் தடுத்ததுடன் சித்த ஆங்கில மருத்துவ முறைகளைத் தெளிவாக வரையறுத்தது.பட்டம் பெற்ற மருத்துவர்களின் தொழில் விதிகளை ஒழுங்கு படுத்தியது.
1916இல் திராவிடச் சங்கம் சார்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்
29.11.1916இல் விக்டோரியா பப்ளிக் ஹாலில் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ‘ தோன்றியது. நடேசனாருடன் இணைந்து பணியாற்றினார். பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முக்கியமாக்கப்பட்டது. சட்டமன்றத்திலும் அரசாங்க அலுவலகத்திலும் பிரதிநிதித்துவம் வலியுறுத்தப்பட்டது. ஒரு பகுதி மக்கள் ஒடுக்கப்படும் நிலையைக் கடுமையாகக் கண்டித்தார். காங்கிரசுக் கட்சியில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைக் கண்டித்தார். ஒடுக்கப் பட்டவர்களின் உரிமைகள் நசுக்கப்படும் நிலைமையைக் கண்டு வெகுண்டார்.
20.1.1916இல் பார்ப்பனரல்லாத மக்களுக்கான கட்சி காண வேண்டிய அவசியம் பற்றிப் பேசினார். ஓரிரு நாளில் அரசியல் கட்சியின் கூட்டம் என்ற உணர்வோடு கூடியது. அதிலே கட்சிப் பெயர், கொடி, சட்டதிட்டம் வகுக்கப்பட்டது. இதில் நாயரின் பங்கு முக்கியமானதாக இருந்தது.
தென்னிந்திய நல உரிமைச்சங்கம் உதயமானது.செய்தித் தாள்களாக ஆங்கிலத்தில் ‘ ஜஸ்டிஸ் ‘ (நாயரை ஆசிரியராகக் கொண்டும்) திராவிடன் தமிழில் ஆந்திர பிரகாசிகா தெலுங்கில் என்று மூன்று தொடங்கப்பட்டது.
சமூக நீதி காக்கும் நோக்கை வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை முதன்மையாகக் கொண்டதாலும் அதற்காக உழைக்கும் பத்திரிகை ஜஸ்டிஸ் என்றானதாலும் இச் சங்கம் மக்களால் (ஜஸ்டிஸ் ) ‘நீதிக் கட்சி’ என்று அழைக்கப்பட்டது.
திராவிடர் சங்கம் சார்பில் Dravidian worthies மற்றும் Non Bramin Letters, என்னும் இருநூல்களை வெளியிட்டார். திராவிடரை விழிப்படையச் செய்தன இந்நூல்கள்.
திராவிட இயக்கச் சிற்பி, திராவிட இயக்க இதயம், மூளை என்றும் நீதிக் கட்சியைத் திறம்பட செலுத்திய மாலுமி என்றும் கருதப்பட்டார்.
ஆதிதிராவிடர்க்கும் பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கும் சலுகைகள் பெறுவதை மூச்சாகக் கொண்டார்.7.10.1917இல் ஸ்பர்ட்டங் சாலையில் பஞ்சமர் கூட்டம் நடத்தி பஞ்சமர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்தார்.தீண்டாமையைச் சாடினார்.இக் கூட்டம் வரலாற்றுச் சிறப்புடையது.இரட்டைமலை சீனிவாசன் தலைமை தாங்கிட வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர் கலந்து கொண்டார்.
“இந்த நாட்டில் இரு இனங்கள் உண்டு.ஒன்று இந்நாட்டின் சொந்தக்காரர்கள் இனமான நம் திராவிட இனம். மற்றொன்று நாம் அசட்டையாய்த் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டிற்குள் நுழைந்துவிடும் திருடன் போன்ற ஆரிய இனம்“ என்றார். பார்ப்பனர்கள் 100க்கு தொண்ணூறு பேர் படித்தவர்களாகவும் பார்ப்பனரல்லாதவர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் படிக்காதவர்களாகவும் இருக்கவும் இந்த அவல நிலையில் தன்னாட்சியா? என்றும் வினா எழுப்பினார்.
சில வடநாட்டுத் தலைவர்கள் தேசியம் என்று சொல்லிக் கொண்டு இங்குள்ளவர்களுக்கு அறிவுரைகள் கூறத் தலைப்பட்டிருக்கின்றனர்! இங்கு நிலவும் வருணாச்சிரம தர்மம் காரணமாக இந்துகளுக்குள்ளே பலப்பல வேறுபாடுகள் ஏற்பட்டுப் பலர் சூத்திரர் என்றும் வேசிமக்கள் என்றும் படிக்கக் கூடாதவர்கள் என்றும் தீண்டத்தகாதவர்கள் என்றும் நெருங்கத்தகாத வர்கள் பார்க்கத் தகாதவர்கள் என்றும் இழிவுபடுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும்,
“கடவுள் என்றொரு கற்பனைக் கருத்தைச் சுட்டிக் காட்டித் திராவிடர்களின் மூளையையே குழப்பி விட்டார்கள் “என்றும் கனல் தெறிக்க முழக்கமிட்டார்.”
இலண்டனிலும் சென்னையிலும் என்னைப் பெரிய டாக்டர் என்று சொல்லுகிறார்கள்.நான் ஒரு எம்.டி பட்டதாரி. எனக்கு ஏராளமான வருமானம் வருகிறது; எனக்காகும் செலவு போக என் வருமானத்தில் மீதப்படும் பணத்தை எல்லாம் என்னருமைத் தலைவர் திரு.பிட்டி தியாகராயர் அவர்களைப் போன்று உங்களைப் போன்ற திராவிட மக்களைத் தட்டி எழுப்பும் நீதிக்கட்சியின் வளர்ச்சிக்காகச் செலவிடுவதில் பெருமைப் படுகிறேன் என்ற போதும் என் பிறந்த இடமான கேரளத்தில் நானோர் சூத்திரன்தானே” என்றும் கூறி மக்களை உணர்ச்சி மயமாக்கினார்.
“வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் வராமல் தூங்கோம்; இது சத்தியம்“ என்றும் “ அரசியல் பார்ப்பனரை நம்பாதே” என்றும் பேசினார். “
எல்லா வகுப்பு மக்களுக்கும் வாழ்க்கையில் சம வாய்ப்பும் சம வசதியும் ஏற்பட வேண்டுமென்ற நோக்கத்தோடு வற்புறுத்தப் பட்டுவரும் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவக் கொள்கை அரசின் அனைத்துத் துறையிலும் கையாளவேண்டும் என்பதைத்தான் நமது நீதிக்கட்சிக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது” என்றும் கூறினார். இந்தக் குறிக் கோளை இங்கு விளக்கி வருவது போன்றே இங்கிலாந்திலும் கூட்டம் போட்டுப் பேசியும் எழுதியும் வருவதற் காகத்தான் நான் ஆண்டுதோறும் தவறாமல் இங்கிலாந்துக்குச் சென்று வருகிறேன் “ என்றார் டாக்டர் நாயர்.
“பிரம்மாவின் முகத்திலிருந்து வெடித்து விழுந்த வீரர்களாச்சே அவாள்” என்று சீறி எழுந்த சிங்கமென பெரும் ஆரவாரத்துக் கிடையே பொழிந்தார் .
டாக்டர் பி.வரதராஜுலுவுடன் பேசும்போது “சீக்கிரமாகத் தாங்களும் தங்கள் தோழர்களான நாயக்கரும் பிள்ளைவாளும் முதலியார் வாளும் என் ஜஸ்டிஸ் கட்சியை நாடி வந்தாக வேண்டும்‘ என்று நாயர் கூறியது போல ஆறு ஆண்டுகளுக்குப் பின் இவர்கள் அனைவரும் நீதிக்கட்சியில் இணைந்தனர்.அதுமட்டுமின்றி தந்தை பெரியார் தலைவராகவே ஆனார்.
‘மக்களை விடுவித்த செம்மல்’ என்றும்
‘இந்நாட்டு லெனின்’ என்றும்
‘பார்ப்பனரல்லாதார் இயக்கச் சிற்பி’
‘சொல்லின் செல்வர்’ என்றும் நாயர் அழைக்கப் பட்டார்.
“தற்போது இந்திய அரசிடம் குவிக்கப் பட்டுள்ள அதிகாரங்கள் பரவலாக்கப் படவேண்டும் .இவற்றில் பலவற்றை மாநில அரசுகளின் பொறுப்பில் விட வேண்டும். இதை நிறுவினால் தான் கூட்டாட்சி முறை வெற்றிபெற முடியும்” என்றார். மேலும் உள்ளாட்சி, காவல், நீதித்துறை, சிறைகள், வருவாய்த்துறை , கல்வி, மருத்துவம், சுகாதாரம், நீர்ப்பாசனம், வனத்துறை, நகராட்சி இவைபோன்றவற்றில் முழு அதிகாரம் பெற்றதாக இருக்க வேண்டும் என பட்டியலிட்டு மாநில தன்னாட்சியை வலியுறுத்தினார்.
இது பற்றி ஆராய மாண்ட்போர்டு அறிக்கை நியமித்த ‘சவுத் பரோ’ குழுவைப் புறக்கணித்து இங்கிலந்துக்கு 1.6.1918இல் புறப்பட்டுச் சென்று 7.1.1919இல் திரும்பினார்.சவுத் பரோ குழு அறிக்கை 16.5.1919இல் வெளியிடப் பட்டது. இது வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் இல்லை என்றது. நாடெங்கும் எதிர்ப்புக் குரல் ஒலித்தது. நீதிக்கட்சித் தலைவர்கள் ஆங்காங்கே பொதுக்கூட்டம் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இவ்வறிக்கை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின்முன் இறுதி முடிவுக்காகக் காத்திருந்தது.
இது பார்ப்பனரல்லாத மக்களுக்குப் பேரிடியாகும்.இதை உணர்ந்த நீதிக் கட்சி டாக்டர் நாயர் , கே.வி.ரெட்டி நாயுடு, ஆற்காடு இராமசாமி முதலியார், கோகா அப்பாராவ், எல்.கே.துளசிராம் ஆகியோரை இங்கிலாந்து அனுப்பியது. இவர்களில் நாயர் மட்டும் முன்னதாகப் புறப்பட்டுச் சென்றார்.
மாண்டேகு செம்ஸ்போர்டு குழுவினரின் சீர்திருத்த அறிக்கையில் பார்ப்பனரல்லாத மக்களின் உரிமைகள் இடம் பெறாது போய்விட்டதையும் இந்தியாவிலுள்ள எவருடைய உதவி மூலமும் அவ்வுரிமையைப் பெற முடியாது என்பதையும் தெரிந்து கொண்ட டாக்டர் நாயர் இங்கிலாந்து அறிவுடைய மக்கள் மூலமே பெறமுடியும் என்பதுணர்ந்தார். இதற்கு முன் 1918இல் லண்டன் சென்றார். 1.6.1918 முதல் 7.1. 1919 வரை அங்கிருந்து பல விவாத அரங்குகளில் கலந்து கொண்டிருந்தார்.
அதன்பின் 6.5.1919இல் புறப்பட்டு 19.6.1919இல் இங்கிலாந்து சென்றடைந்தார். தம் கட்சியின் கொள்கை களையும் கோரிக்கை களையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் நேரில் கூறிப் பார்ப்பனரல்லாதாரின் தனி வாக்குரிமை கூடிய சீர்திருத்தத்தைப் பெறுவதற்கான சான்றுகளைத் திரட்டிவந்தார். தம்மால் (உடல் நிலையில்) முடியாத போதினிலும் இரவு பகல் பாராமல் பலரையும் பார்த்துத் தெளிவு பெறவும் கருத்துகளைப் பெறவும் முனனந்திருந்தார்.
1919 ஜூலை 18ஆம் நாள் அவரின் சாட்சியத்தைப் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் படைக்கும் நிலையில் ஜூலை 17ஆம் நாள் அங்கேயே மறைந்தார்.
20.07.1940இல் நம் தந்தை பெரியார் திராவிட லெனின் என்று டாக்டர் நாயரைப் புகழ்ந்தார்.” நாயர் இனியும் கொஞ்ச காலம் இருந்து வகுப்பு வாதத்தைக் கொழுந்துவிட்டு எரியச் செய்யாமல் போய்விட்டாரே” என்றார் .
“டாக்டர் டி.எம்.நாயர் சர்.பிட்டி.தியாகராய செட்டியாருடன் இணைந்து நின்று பிராமணரல்லாதார் இயக்கத்தைத் தோற்றுவித்தது மட்டுமல்ல; திறம்பட இயங்கிவரச் செய்த வீரருமாவார்! திராவிடரின் நலிந்த வாழ்வை நல்வாழ்வாக்கிய உத்தமர்!சூத்திரரெனவும் பறையரெனவும் தாழ்ந்து நின்ற திராவிட சமுதாயத் தினரை மானமிகு மனிதராக்கிய சமுதாயச்சிற்பி! பார்ப்பனரின் ஜாதி வெறியை அடக்கி எவரும் சூத்திரன் என்றோ பறையன் என்றோ உச்சரித்திடவும் அஞ்சும்படிச் செய்திட்ட அஞ்சா நெஞ்சர்” என்று
நாயரைப் படம்பிடித்துக் காட்டுகிறார் தோழர் குமாரசாமி.
அவர் வழியைப் பின்பற்றுவோம்.
வாழ்க டி.எம்.நாயர்! வாழ்க தந்தை பெரியார்!