சிதம்பரம் நடராஜனைத் தரிசிக்க சிதம்பரம் போகாமல் இருப்பேனா என்று நாளும் நாளும் கண்ணீர் உகுத்தான் நந்தன் என்ற கதையைக் கேள்விப்பட்டிருக்கிறோம் – ஏன் படித்தும் இருக்கிறோம்.
நடந்ததா… இல்லையா என்பது ஒரு பக்கம் நிற்கட்டும். நந்தன் சிவபக்தன் தானே… அவன் செல்ல அட்டி என்ன? என்று கேட்கக் கூடாது – கேட்டால் அது ‘‘பிராமண தோஷம்’’ என்று ஒரே போடு போட்டுத் தள்ளுவார்கள்.
ஆனால் நந்தன் விடுவதாக இல்லை. தில்லை அம்பலவாணனை நேரில் தரிசித்தே தீருவது என்று அடம்பிடிக்கிறான்.
என்ன நடந்தது? தில்லையம்பல வாணன் நந்தன் முன் எழுந்தருள.
‘‘நாளைக் காலையில், நீ இப்பிறவி இழிவு நீங்கும்படித் தீயில் மூழ்கி, அந்தணனாகி, எம்மிடம் வருக!’’ என அருள் செய்தார். கடவுளுக்கும் ஜாதி வேற்றுமை உண்டா? இல்லையென்றால், ஏன் நந்தனாரை தீயில் மூழ்கி அந்தணனாய் வருக என்று உரைக்க வேண்டும்?
இப்படி ஒரு கேள்வி ‘தினமணி’க் கதிரில் (16.9.1984) கேட்கப்பட்டிருந்தது!
அதற்குத் ‘தினமணி’க் கதிர் அளித்த பதில் என்ன?
‘‘இங்கே அந்தணனாகி வருக என்றால் வேத ஞானம் பெற்று வருக என்று பொருள். பூணூல் மாட்டிக் கொண்டு வருக என்பதல்ல’’ (‘தினமணிக் கதிர்’ 16.9.1984)
வேதங்களை ஆண்டுகணக்கில் படிக்கத் தேவையில்லை; தீயில் மூழ்கி எழுந்தாலே நான்கு வேதங்களையும் கரைத்துக் குடித்து ஞானம் பெற்றவன் ஆகி விடுவான்!
எவ்வளவு ‘சாமர்த்தியம்!’ இதற்குப் பெயர்தான் பார்ப்பனத்தனம் என்பது.
நந்தன் நுழைந்து வந்த சிதம்பரம் அம்பலவாணனின் கோபுரத் தெற்கு வாசல் இன்று வரை மூடப்பட்டு இருப்பானேன்?
அவன் அம்பலவாணன் ஆக்ஞைப்படி தீயில் மூழ்கி, வேத ஞானம் பெற்றுத் தானே அந்தக் கோயில் தெற்கு வாசல் வழியாகக் கோயிலுக்குள் நுழைந்து அம்பலவாணனைத் தரிசித்தான் – அப்படி இருக்கும் பொழுது இன்னும் தெற்கு வாசல் நுழைவு வாயில் மூடப்பட்டு தானே கிடக்கிறது.
அம்பலவாணனே சொன்னாலும் ஆரியத்தின் அந்த ஆணவம் இன்னும் அடங்கவில்லை என்பது இப்பொழுது புரிகிறதா?
இன்னும் பார்ப்பன எதிர்ப்பா என்று ஏகடியம் பேசும் எட்டப்பர்கள் தெரிந்து கொள்ளட்டும்!
‘அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை’ என்ற சட்டம் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை என்றால், நம்முடைய செயல்பாடுகள் இன்னும் தீவிரமாக வேண்டும் என்று தானே பொருள்?
கடவுளுக்கே பூணூல் மாட்டி விட்டார்களே! திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்று கிலோ எடையில் தங்கப் பூணூலை மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி அணிவிக்கவில்லையா? (‘தினமலர்’ 27.2.2014). திருப்பரங்குன்றம் சுப்பிர மணியனுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் தங்கப் பூணூலை அணிவிக்கவில்லையா? (மாலை மலர் – 6.3.2012) சீரங்கம் ரங்கநாதனுக்கு 5.2 லட்சம் மதிப்பில் ஜீயர் தங்கப்பூணூல் சாற்றவில்லையா?
கடவுளுக்குமேல் பிராமணன் என்று ‘அருந் தொண்டாற்றிய அந்தணர்’ நூல் வெளியீட்டு விழாவில் சென்னை நாரத கான சபாவில் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கர்ச்சிக்கவில்லையா?
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத்திற்கு, திராவிட இயக்கத்திற்கு இன்னும் வேலை இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
சிதம்பரம் பொதுக்குழு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா என்ற கால கட்டத்தில் நடக்கிறது என்பது முக்கியம்! முக்கியம்!! முக்கியம்!!!
இன்னும் நான்காண்டில் தந்தை பெரியாரின் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் வரவிருக்கிறது.
நம்முடைய திட்டங்கள் என்ன? செயல்பாடுகள் எதை நோக்கி இருக்க வேண்டும்? அமைப்பு ரீதியில் காலத்துக்கேற்ற சூழ்நிலையில் எப்படி அமைய வேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் நமது இயக்கத் தலைவர் அறிவிக்கவிருக்கிறார்.
போராடிப் போராடிப் பெற்ற சமூகநீதியை வஞ்சக பார்ப்பனீயம் காவிமூடி அணிந்து கொண்டு, எந்தெந்த வகைகளில் எல்லாம் வீழ்த்திட நினைக்கிறது – ஏன் வீழ்த்தியும் வருகிறது என்பதை ஈரோட்டுக் கண்ணாடி அணிந்த கருஞ்சட்டை இயக்கத்திற்கு மட்டுமே நுட்பமாகத் தெரிந்திருக்க முடியும்.
‘‘வகுப்பையும், மதத்தையும், ஜாதியையும் ஒரு பக்கத்தில் காப்பாற்றிக் கொண்டே மற்றொரு புறத்தில் ஜாதி, மத வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்பதை அயோக்கியத்தனம் என்று சொன்னால், அப்படி அவர்கள் சொல்லுவது ஆயிரம் மடங்கு அயோக்கியத்தனமும், இரண்டாயிரம் மடங்கு இழிதன்மையும், வஞ்சகத் தன்மையும், துரோகத் தன்மையும் ஆகாதா என்பதோடு, இது தங்கள் வயிற்றுப் பிழைப்பிற்கும், வாழ்வுக்கும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற கீழ் மக்கள் தன்மையல்லவா!’’
(‘குடிஅரசு’ 8.11.1931)
இன்றைக்கு 94 ஆண்டுகளுக்கு முன்னரே எரிமலையாக வெடித்தார் தந்தை பெரியார்.
அதற்கொரு முடிவையும் கண்டாக வேண்டும். கல்வித் துறையில் காவி சித்தாந்தம் எப்படியெல்லாம் காலடி வைக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டாமா?
குருகுலக்கல்விக்குப் பெயர் புதிய கல்வித் திட்டமாம். மொட்டையனுக்குப் பெயர் சவுரிராஜனா?
நல்ல வாய்ப்பாக ‘திராவிட மாடல் அரசு’ தமிழ்நாட்டில் ஏற்றமுடன் வீறுநடை போடுகிறது.
சட்டப் பேரவைத் தேர்தலும் ஓராண்டில் நடக்க இருக்கிறது.
அரசியல் பதவி பக்கம் கழுத்தை நீட்டாத நமக்குத்தான் நாலாப் பக்கங்களிலும் கண்களை செலுத்தும் கருத்தும், கவலையும் போட்டிப் போட்டுக் கொண்டு பின்னிக் கொண்டுள்ளன.
சுயமரியாதை இயக்கம் இந்தியத் துணைக் கண்டம் முழுமையும் சுழன்றடிக்க வேண்டிய கால கட்டம் மய்யம் கொண்டிருக்கிறது.
‘பெரியார் உலகம்’ என்ற மலைக்கும் – மாபெரும் திட்டம்!
ஒவ்வொரு நொடியையும் அளந்து அளந்து பார்த்து பயணிக்க வேண்டிய – பணியாற்ற வேண்டிய பயணம் இது தோழர்களே!
உரக்கச் சிந்திப்போம்! உயர்ந்த திட்டங்களைத் தீட்டுவோம்!
‘சிதம்பரப் போகாமல் இருப்போமா?’ என்ற சிந்தனை ஒவ்வொருவர் நாடி நரம்புகளையும் மீட்டிக் கொண்டுதானே இருக்கும்! அதில் அட்டி என்ன?
சிதம்பரத்தில் இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பொதுக் குழுவையும், மாலையில் நடக்க இருக்கும் மாபெரும் பொதுக் கூட்டத்தையும் பார்ப்போர் மலைக்கும் வண்ணம் நடத்திட நமது கழகப் பொறுப்பாளர்கள் நேர்த்தியான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
நம் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
வாரீர் தோழர்களே, வாரீர்!!