சுயமரியாதை இயக்கத்திற்குத் தந்தை பெரியார் கூறிய நான்கு: உத்தமமான தலைமை – உண்மையான தொண்டர்கள்
– உறுதியான கொள்கை – யோக்கியமான பிரச்சாரம்!
இவை நான்கும் மிகவும் அவசியமாகும்!
சென்னை, பிப்.10 சுயமரியாதை இயக்கத்திற்குத் தந்தை பெரியார் கூறிய நான்கு – உத்தமமான தலைமை – உண்மையான தொண்டர்கள் – உறுதியான கொள்கை – யோக்கியமான பிரச்சாரம்! இவை நான்கும் மிகவும் அவசியமாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
கூறினார்.
பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில், தமிழர் தலைவர் ஆசிரியருடன், அன்புடன் ஆனந்தியின் நேர்காணலின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
அன்புடன் ஆனந்தி: இன்றைக்கு இயற்கைச் சுரண்டல் மிக அதிகப்படியாக இருக்கிறது. எல்லா தரப்பிலும் அது நடக்கிறது. ஆனால், அந்த இயற்கைச் சூழலைக் காப்பாற்றும் விதமாக ஏதோ ஒரு ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்று சொல்வதுபோன்று, உங்களால் எடுக்கப்பட்ட அந்த முன்னெடுப்பு மிகச் சிறப்பானது. கட்டாயம் அந்த இடத்தினைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன். மூலிகைச் செடிகளைப்பற்றியெல்லாம் சொன்னீர்கள். அப்துல் கலாம் அய்யா அவர்களே, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வேண்டும் என்று கேட்டார் என்ற தகவலையும் சொன்னீர்கள்.
60 விழுக்காடு பெண்கள்; 40 விழுக்காடு ஆண்கள் என்பதில் தெளிவாக இருந்தீர்கள் என்பதைப்பற்றியும் சொன்னீர்கள்.
மிகச் சிறப்பு அய்யா. உங்கள் திரு மணத்தை நடத்தி வைத்தது அன்னை மணியம்மையார் என்று அனைவருக்கும் தெரியும். அந்த நினைவலைகளை எங்களிடம் பகிர்ந்துகொள்ளுங்களேன். அன்னை மணியம்மையாரைப்பற்றியும் சொல்லுங்களேன்.
பெரியார் கொடுத்த தந்தி!
தமிழர் தலைவர்: தந்தை பெரியார் அவர்கள் திடீரென்று ஒரு நாள் கடலூருக்குத் தந்தி கொடுத்தார். உடனே புறப்பட்டு வரவேண்டும் என்று.
அய்யாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று நினைத்து நானும் தொடர்வண்டியில் உடனே புறப்பட்டேன்.
அய்யாவினுடைய சிக்கனம் என்பது உலகப் புகழ்பெற்றது. ஏதாவது ஒரு கடிதத்தை கவரில் எழுதினாலே, எதற்கு கார்டு இருக்கும்பொழுது, கவரில் எழுதினீர்கள்? என்று கேட்பார்.
அவரே ‘தந்தி’ கொடுத்திருக்கின்றார் என்றால், அது மிகவும் முக்கியம் என்றுதான் அர்த்தம்.
அய்யா அவர்களை நான் வந்து சந்தித்தபொழுது, ‘‘உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கலாம்” என்று இருக்கிறோம் என்று சொன்னார்.
அய்யா, நான் சட்டக் கல்லூரி படிப்பை இன்னும் முடிக்கவில்லை என்று சொன்னேன்.
இன்னார் பெயரை சொல்லி, அவர்கள் என்னுடைய தலைமையில்தான் திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்களுடைய பெண்ணைத்தான் உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்று இருக்கிறோம். நல்ல வசதியான குடும்பம் என்றார்.
வசதி வாய்ப்பைப்பற்றி எனக்குக் கவலையில்லை அய்யா என்றேன் நான்.
கடைசியாக ஒரே வார்த்தைச் சொன்னார், உங்களுடைய திருமண ஏற்பாட்டைச் செய்வதற்கு, இயக்கத்திற்கு நீங்கள் பயன்படுவீர்கள் என்பதற்காகத்தான் என்றார்!
‘‘அய்யாவின் அடிச்சுவட்டில்” இதைப்பற்றி யெல்லாம் தெளிவாக எழுதியிருக்கிறேன்.
அதற்கு முன்பு, பல்கலைக் கழகத்தில் இன்டர்மீடியட் முடித்துவிட்டேன். அதிக மதிப்பெண் பெற்றேன். மனு போட்டேன், பரிந்துரை இல்லாமலேயே எனக்கு கிடைத்தது. 90 ரூபாய் கட்டணம் கட்டவேண்டும் என்று சொன்னார்கள். அந்தப் பணத்தை அய்யா அவர்கள் தந்தி மணியார்டர் மூலம் அனுப்பி வைத்தார்.
நான் படிக்கும்பொழுது, நண்பர்கள் எனக்குத் தேர்வுக் கட்டணத்தைக் கட்டினார்கள். அடுத்த சில மாதங்களில் அங்கேயே எனக்கு வேலை கொடுத்தார்கள், பொருளாதாரத் துறையில்!
நான் வாங்கிய முதல் சம்பளத்தில் அந்தக் கடன்களைக் கொடுத்தேன்.
அய்யாதான் சொல்லிவிட்டாரே, இயக்கத்திற்குப் பயன்படும் என்று. அவர்தான் என்னைப் படிக்க வைத்தார். நானும் சரியென்று சொல்லிவிட்டேன்.
அப்படியென்றால், அம்மாவை அழைத்துக்கொண்டு போய், பெண்ணைப் போய் பார்க்கலாமா? என்று அய்யா கேட்டார்.
நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள் என்றால் போதும்; நான் பெண்ணைப் பார்க்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை என்றேன்.
இதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம என்றால், என்னுடைய துணைவியார் மிகவும் வசதியான குடும்பத்தைச் சார்ந்தவர். எனக்கு வசதியில்லை.
இந்த ஏற்றத்தாழ்வால், மனதில் சிக்கல்கள் ஏற்படுமே என்று நினைத்தேன். அதுதான் எனக்கு கவலையாக இருந்தது.
ஆனால், என்னுடைய துணைவியாருடைய ஒத்துழைப்பு என்பது நன்றிக்குரியது, இன்றைய வரையிலும்!
இன்றைக்குக் காலையில் நான் உரையாற்றும் பொழுது, ‘‘என்னுடைய துணைவியார் குரோட்டன்ஸ் செடி போன்று வளர்ந்தவர்கள்; நான் காட்டாமணக்கு” என்றேன்.
ஆகவே, நான் அவர்களுடைய வழிக்குப் போக முடியாது. அதனால், அவர் என்னுடைய வழிக்கு வந்தார்.
நகை போடுவதிலிருந்து, கொள்ளி போடுவதி லிருந்து எங்களுடைய கொள்கையைத்தான் முக்கிய மாகக் கருதினோம்.
திருமணம் செய்யும்பொழுதுகூட பழைய வேட்டி, பழைய கருப்புச் சட்டைதான் அணிவேன். புதுத் துணி போடுவது கூட அது ஒரு சம்பிரதாயம்தான்.
புதுத் துணி எப்பொழுது தேவையோ, அப்போது வாங்கிக் கொள்ளலாம். திருமணத்தின்போதுதான் புதுத் துணி அணியவேண்டும் என்பது இல்லை என்றேன்.
என்னுடைய மாமியார் அவர்கள் கொள்கை ரீதியாக இருக்கக்கூடியவர். என்னுடைய துணைவியாரிடம், ‘‘அவர் பழைய துணி போட்டிருக்கிறார்; ஆகவே, நீ புதுப் புடவை கட்டவேண்டாம்; பழைய புடவையையே கட்டிக் கொள்” என்றார்.
‘விடுதலை’ ஆசிரியராகப் பொறுப்பேற்பு!
அதேபோன்று என்னுடைய துணைவியார் பழைய புடவையைக் கட்டிக்கொண்டு வருவதற்கு ஒப்புக்கொண்டார்.
வக்கீல் தொழிலை விட்டுவிட்டு, ‘விடுதலை’ப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அய்யா சொல்கிறார்.
இரண்டு நாள் விவாதம் செய்தோம். என்னுடைய மாமியார் வீட்டில் பணம் வாங்கினாலும் சரி, இயக்கத்தில் பணம் வாங்கினாலும் அது என் மனதிற்குச் சரியாகப் படவில்லை. இரண்டிலும் என்னுடைய சுயமரியாதை போகிறது என்று நினைத்தேன்.
அதில் எது குறைவானது என்று நினைக்கும்பொழுது, என்னுடைய துணைவியார் அழகாகச் சொன்னார்.
அது இயக்கம்; இது குடும்பம்.
இயக்கத்தில்தான் நீங்கள் பணம் வாங்கக்கூடாது. குடும்பத்தில் நீங்கள் வாங்கலாம். என்னுடைய பங்கு அதில் இருக்கிறது என்றார்.
அன்றிலிருந்து இன்றுவரையில் அவர்கள்தான் எனக்கு எல்லாமே!
இந்த வாய்ப்பு இன்றைக்கு 66 ஆண்டுகள் ஆகின்றன. பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என்றுகூட எனக்குத் தெரியாது. பிள்ளைகளைப் படிக்க வைத்ததெல்லாம் என்னுடைய துணைவியார்தான். இதுதான் என்னுடைய குடும்ப வாழ்க்கை.
அதனால்தான் நான் சொன்னேன், ‘இல்லறத் துறவி’ போன்ற நாங்கள் இரண்டு பேரும்.
அன்புடன் ஆனந்தி: அருமை அய்யா! நீங்கள் கழகத்திற்குத் தூண் போல இருப்பதுபோல, உங்களுடைய குடும்பத்திற்குத் தூணாக அம்மா அவர்கள் இருக்கிறார்கள்.
மிகவும் அருமையான நினைவலை. அம்மா அவர்களுக்கு வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களுடைய உரையிலிருந்துதான் இந்தக் கேள்வி எனக்குப் பிறந்தது.
நல்ல தலைவர், நல்ல தொண்டர், நல்ல கொள்கை, நேர்மையான பிரச்சாரம் – இந்த நான்கு விஷயங்கள் மிகவும் முக்கியம் என்று நீங்கள் அடிக்கடி சொல்கிறீர்கள். அதைப்பற்றிச் சொல்லுங்களேன்.
சுயமரியாதை இயக்கத்திற்குத்
தந்தை பெரியார் கூறிய நான்கு!
தமிழர் தலைவர்: இது தந்தை பெரியார் சொன்னது தான், இது என்னுடைய கருத்து அல்ல.
சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கும்பொழுது தந்தை பெரியார் இந்த நான்கையும் சொல்கிறார்.
1. உத்ததமான தலைமை
2. உண்மையான தொண்டர்கள்
3. உறுதியான கொள்கை
4. யோக்கியமான பிரச்சாரம்
இந்த நான்கும் இருந்தால், ஓர் இயக்கம் மிகச் சிறப்பாக இருக்கும்.
உண்மையான தொண்டர்கள் என்பதிலேயே, போலித்தனம் இருக்காது; ஒரு பழமொழி சொல்வார்கள், அடக்குமுறை என்றால், ஓடிப் போவது கிடையாது. தொண்டர்கள் குறைவாக இருந்தாலும், அடக்குமுறை என்றால், அவர்கள்தான் முதல் ஆளாய் நிற்பார்கள். அந்த மாதிரியான தொண்டர்கள்.
இப்படி ஒரு நல்ல வாய்ப்பு இருப்பதினால், இந்த இயக்கம், எண்ணிக்கையில் அதிகம் இருக்காது; இருக்க முடியாது.
கட்டுப்பாடுள்ள காவலர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகை அளவிற்கு இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அதுபோன்றுதான் இந்த இயக்கமும்.
எந்தவிதமான ரகசியமும் இல்லாத இயக்கம்.
வன்முறையில் நம்பிக்கை இல்லாத இயக்கம்.
எல்லாவிதமான கஷ்ட, நஷ்டங்களைப் பெற்றிருக்கிறது. பொதுமக்களுக்கு இடையூறு இருக்கக்கூடாது.
அதற்குப் பதில், நமக்கு இடையூறு ஏற்பட்டாலும், சிறைச்சாலைக்குச் செல்லவேண்டும் என்றாலும், தொல்லைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்வோம்.
மற்ற சமூகத்தினருக்கு நாம் இடையூறாக இருக்கக்கூடாது என்கிற பெரியார் தத்துவத்தை உண்மையாகக் கடைப்பிடித்ததினால், இந்த இயக்கம், அதனுடைய கொள்கைகள் நாளும் வெற்றி பெற்றிருக்கிறது.
அய்யா சொன்னதை சுருக்கமாகச் சொல்கி றேன்,
‘‘என்னுடைய வெற்றிகள் வேண்டுமானால் கொஞ்சம் காலதாமதம் ஆகலாமே தவிர, ஒருபோதும் அது தோல்வியடையாது” என்று.
அந்த நம்பிக்கையோடுதான் நாங்களும் இருக்கின்றோம்.
எந்தப் பணியையும் ஈடுபாட்டோடு செய்யவேண்டும்!
அன்புடன் ஆனந்தி: அருமை அய்யா. வெற்றி வேண்டுமானால் தாமதமாகலாம்; ஆனால், தோல்வியடையமாட்டோம் என்று. அது மிகவும் முக்கியம்.
‘‘வயதான வாலிபர்’’ என்ற ஒரு சொல்லாட்சியை நீங்கள் பயன்படுத்தினீர்கள். உடல் ஆரோக்கியம், உள்ள ஆரோக்கியம் மேம்பாட்டுக்கு உங்களுடைய அறிவுரையாக நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: ஒருவர் ஓர் இலக்கை அடை வதற்கான ஈடுபாடு, உறுதிப்பாடு. இந்த இரண்டும் மிகவும் முக்கியம்.
எந்தப் பணியைச் செய்தாலும், அதை ஓர் ஈடு பாட்டோடு, விருப்பத்தோடு செய்தால், எந்தப் பணியும் கடினமான பணி கிடையாது.
இரண்டாவதாக, எடுத்த பணியை நாம் முடித்தாக வேண்டும் என்றும், அதற்காக நாம் எந்த விலையும் கொடுக்கலாம் என்றும் நினைக்கவேண்டும். சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் சொன்னார், பதவியை விட்டுப் போன நேரத்தில், ‘‘ஒருமுறை அல்ல; ஒன்பது முறை வேண்டுமானாலும், மண்டலுக்காக, சமூகநீதிக்காக, என்னுடைய பிரதமர் பதவியை இழப்பதற்குத் தயாராக இருக்கிறேன். ஆனால், நான் பிரதமர் பதவியை விட்டுப்போனாலும், மண்டல் காற்று எப்பொழுதும் வீசிக் கொண்டிருக்கும்” என்றார்.
மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு!
அதுபோன்று, சுயமரியாதைக் கொள்கை என்பது, ‘‘மானமும் அறிவும் மனிதர்க்கழகு” என்று சொன்னார். அந்த ‘‘மானமும் அறிவும் மனிதர்க்கழகு’’ என்பது உலகளாவியது. ஒரு குறிப்பிட்ட எல்லை, குறிப்பிட்ட மக்கள், குறிப்பிட்ட இனத்திற்கு என்று குறுக்கவில்லை. அதுபோன்று ஒரு குறுகிய நோக்கம் கிடையாது.
திராவிடம், மானிடப் பரப்புக்குரியது.
சுயமரியாதை, தன்மானம், பகுத்தறிவு என்பது மனிதர்களுடைய மிக முக்கியமானதாகும்.
ஜாதி, தீண்டாமை என்பது மனிதத்தன்மையையே அழிப்பது.
மனிதர்களை மிருகங்களைவிடக் கேவலமாக்குவது. மிருகங்களைக்கூட கொஞ்சுகிறான். ஆனால், கீழ்ஜாதிக்காரன் என்று சக மனிதனைத் தொடமாட்டேன் என்கிறான்.
உயிரோடு இருக்கின்றபோது மட்டுமல்ல, இறந்த பிறகும்கூட தனி சுடுகாடு என்று சொல்கிறான்.
இவ்வளவு பெரிய ஒரு காட்டுமிராண்டித்தன, அருவருக்கத்தக்க ஒரு பேதமுள்ள சமுதாயத்தை எதிர்த்து, ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்ற உணர்வோடு நாம் செய்யும்பொழுது, நாம் நிச்சயமாக அதில் ஏற்படுகின்ற ஒரு திருப்தி வேறு எதிலும் கிடையாது.
ஒரு போர் வீரனுக்கு, போரில் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் அவன் போர்வீரன்தான்! அவன் களமாடியவன். அந்த வரலாறுதான் மிகவும் முக்கியம்.
அந்த உணர்வுகள் மிகவும் முக்கியம். அந்த உணர்வை இன்றைக்கும், நானும், என்னுடைய சக தோழர்களும், போராளிகளும், நண்பர்களும், குடும்பங்களும் அனுபவிக்கின்றோம்.
இந்த மகிழ்ச்சிக்கு ஓர் எல்லை இல்லை. அதற்குத் தொல்லைகள் வந்தாலும், அதனைச் சந்திப்பதற்குத் தயாராக இருக்கின்றோம்.
நல்ல பொருளை வாங்கவேண்டுமானால், அதற்குச் சரியான விலை கொடுக்கவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்.
அந்தச் சரியான விலை கொடுத்துக்கொண்டே, இந்தப் பயணம் மகிழ்ச்சியோடு தொடரட்டும்!
அன்புடன் ஆனந்தி: அருமை, அருமை! ஏனென்றால், கொள்கைப் பிடிப்பு, அந்த ஈடுபாடு என்பது மிகவும் முக்கியம்.
இதைத்தான் முந்தைய கேள்விக்கான பதிலிலும் சொன்னீர்கள்.
எங்களுடைய வெற்றி வேண்டுமானால் கொஞ்சம் தாமதமாகலாம்; ஆனால், தோல்வியடைய மாட்டோம் என்றால், அதில் ஈடுபாடு, அந்தக் கொள்கைப் பிடிப்புத் தொடர்ந்து இருப்பதினால்தான்.
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இடிபோன்றது!
எங்களுடைய எண்ணிக்கை வேண்டு மானால் குறைவாக இருக்கலாம்; ஆனால், எடுத்து வைக்கக்கூடிய அடி ஒவ்வொன்றும் இடி போன்று இருக்கும் என்று சொல்வதுபோன்று, மிக அழகாக இருந்தது உங்கள் பதில்.
அலுவலகப் பணியைக்கூட நாம் விரும்பிச் செய்யும்பொழுது, மகிழ்ச்சியாக இருப்போம். அய்யோ, வேலைக்குப் போகவேண்டுமே என்று நினைத்தால், நாம் சோர்வடைவோம்.
அந்தக் கொள்கைப் பிடிப்பும், ஈடுபாடும் இருந்தால், நம்முடைய உள்ளமும், உடலும் என்றும் இளமையாக இருக்கும் என்பதற்கு அருமையான விளக்கம் சொன்னீர்கள்.
‘விடுதலை’ நாளிதழ் இன்றைக்கும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதேபோல், ‘பெரியார் பிஞ்சு’ இதழையும் பல இளைய தலைமுறையினரிடம் கொண்டு போய்ச் சேர்க்கிறீர்கள். அதைப்பற்றி சொல்லுங்களேன்?
பத்திரிகைகளில் இரண்டு வகை!
தமிழர் தலைவர்: பத்திரிகைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று எத்தனை லட்சம் பிரதிகள் வெளிவருகின்றன என்பது வியாபாரம். வியாபாரப் பொருளாக நினைப்பது.
ஆனால், கொள்கை ஏடுகளை, வியாபாரப் பொருள்களாக இருக்க முடியாது. ‘விடுதலை’ என்பது இலட்சிய நாள் ஏடு. அந்த இலட்சியம் எப்பொழுதும் இனிப்பாக இருக்காது.
இந்தக் கொள்கை ஏடுகளுக்கும், மற்ற ஏடுகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால், பொருளாதாரத்தில் எங்களுக்கு நட்டம்; ஆனால், சமூகத்தில் எங்களுக்கு லாபம். எழுச்சிக்கு மிகப்பெரிய வரவு.
முழு மனநிறைவோடு இதில் ஈடுபாடு கொள்கிறேன். நான் மட்டுமல்ல, என்னுடைய சக தோழர்கள் எல்லோரும். அவர்கள் ஊதியத்திற்காக வேலை செய்யவில்லை. தொண்டறத்திற்காக அவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு நல்ல வாய்ப்பாக இந்தப் பயணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அடக்குமுறைகள் தாராளமாக வந்திருக்கும்.
ஏடுகள் இரண்டு வகையானது.
ஒன்று, மக்கள் பின்னாலே செல்லக்கூடிய ஏடுகள். மக்களுக்கு எதைச் சொன்னால், விருப்பமாக இருக்குமோ, அதைச் சொல்வது.
அதாவது, இனிப்பைக் கொடுத்து, அது எவ்வளவு சர்க்கரையாக இருந்தாலும் பரவாயில்லை; உடல்நிலைக் கெட்டுப் போனாலும் பரவாயில்லை. அவர்களுக்கு வியாபாரம் நடந்தால் போதும் என்று நினைப்பது.
இரண்டாவது, ஏடுகளுக்குப் பின்னே மக்களை வரவழைப்பது.
தந்தை பெரியார் சொன்ன ஓர் உதாரணம்:
Physician’s cure; surgical cure
ஒன்று, மருந்தின்மூலமாகவே குணப்படுத்தி விடலாம்; உடலில் கத்தி வைக்கவேண்டிய அவசியமில்லை என்றால் ஆவலாய் இருக்கிறது.
மற்றொன்று, புற்றுநோய் ஆபத்தால், உடலில் ஒரு பாகத்தை வெட்டி எடுக்கவேண்டும் என்றால், வெட்டி எடுப்பது என்பது கொடுமைதான்; ஆனால், அவர் உயிரைக் காப்பாற்றவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம். அதனால், உடலின் ஒரு பாகத்தை வெட்டி எடுக்கவேண்டும்.
அதுபோன்ற பணிதான்; அறுவை சிகிச்சை பணி போன்றதுதான் எங்களுடைய பணி. அதற்கு ஓர் ஆயுதமாக நாங்கள் நடத்தும் பத்திரிகைகள் இருக்கின்றன
நாங்கள் நடத்துகின்ற ஏடுகள் வெறும் காகிதங்கள் அல்ல; அறிவாயுதங்கள்; போராயுதங்கள்; சமூகத்தை மாற்றுவதற்கான ஆயுதங்கள்!
தொண்டறத்தோடு நடத்தப்படக்கூடிய இயக்கம்!
அன்புடன் ஆனந்தி: அருமை அய்யா. நீங்களே சொல்லியிருந்தீர்கள். இது ஒரு தொண்டறம் என்று.
அந்தத் தொண்டறத்தோடு நடத்தப்படக் கூடிய இயக்கம். எதிர்நீச்சல் அடித்து நடத்தப்படக்கூடியது. ஒரு மருந்து கசப்பாக இருக்கிறதே என்று குடிக்காமல் போனால், உடல்நிலை சரியாகாது. அதுபோலத்தான், அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நேரத்தில், அந்தப் பாகத்தை அகற்றியே ஆகவேண்டும்; அந்தக் கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். அதனால், தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்போம்.
நம்முடைய பெரியார் பன்னாட்டமைப்பு பாரதிதாசன் நிகழ்ச்சிகளை நடத்தும்பொழுது, சின்னப் பிள்ளைகளுக்கு பெரியார் பிஞ்சு ஓராண்டிற்கான சந்தாத் தொகையை பெரியார் பன்னாட்டமைப்பே செலுத்துகிறது. நீங்கள் சொன்னதுபோன்று, கொஞ்சம்கூட சுயநலமில்லாமல் அந்தப் பணி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றது.
சமூகப் போராட்டங்களில் நிறைய முறை நீங்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறீர்கள். 52 முறைக்குமேல் உங்களை கைது செய்தி ருக்கிறார்கள்.
கேட்டவுடனே உங்களுக்கு நினைவுக்கு வரக்கூடிய ஏதாவது ஒரு சம்பவத்தைச் சொல்லுங்கள் அய்யா?
‘மிசா’வில் சிறை
தமிழர் தலைவர்: டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களுடைய மகள் கனிமொழி அவர்கள் நல்ல மருத்துவர். ஆங்கிலத்தில் சிறப்பான முறையில் கவிதைகள் எழுதக் கூடியவர். அவர் ஒருமுறை என்னிடம் இதே கேள்வியைக் கேட்டார். இப்பொழுது அதுதான் என் நினைவிற்கு வருகிறது.
அதாவது, உங்களுடைய வாழ்க்கையில் முக்கியமான பகுதியும், மறக்க முடியாததும், சிறப்பானதும், நினைவு கூரத்தக்கதும் எது? என்று கேட்டார்.
நெருக்கடி காலத்தில் ‘மிசா’வில் கைது செய்யப்பட்டது தான். காரணமே இல்லாமல் கைது செய்வார்கள். என்ன குற்றம் செய்தோம் என்று சொல்லமாட்டார்கள். எப்பொழுது விடுதலை செய்வார்கள் என்றும் சொல்லமாட்டார்கள். எதற்காகப் பிடித்தார்கள் என்றும் சொல்லமாட்டார்கள்.
எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறைச்சாலையில் இருக்கலாம்; திடீரென்று வெளியே விட்டாலும் அவர்கள் விடலாம்.
அதற்காக ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தார்கள். ஜஸ்டிஸ் இஸ்மாயில் தலைமையில் அந்த ஆணையம் அமைக்கப்பட்டது.
‘மிசா’வில் கைது செய்யப்பட்டு, நாங்கள் எல்லாம் தாக்கப்பட்டோம். ஓராண்டுகள் ஆன பிறகுகூட அந்த வலிகள் போகவில்லை. 60 ஆண்டுகள் ஆனாலும் அந்த வலி இருக்கிறது.
ஒரு சிறிய அறைக்குள் எட்டு பேரை அடைத்து வைப்பார்கள். அந்த அறைக்குள் இரண்டு பானைகள் இருக்கும். ஒரு பானை குடிநீருக்காக – இன்னொரு பானை சிறுநீர் கழிப்பதற்காக. ஒரு மாதம் சிறைச்சாலையில் அடைத்து வைத்திருந்து தொந்தரவு கொடுத்தார்கள். எப்பொழுதாவது ஒருமுறைதான் திறந்து விடுவார்கள்.
அன்றைக்கு சங்கடப்பட்டோம் என்றாலும், இப்பொழுது அதை நினைத்தால், அது ஒரு பெரிய வாய்ப்பு என்று நினைக்கின்றோம்.
ஏனென்று கேட்டால், வாழ்க்கையில், இனிமேல் எதிர்காலத்திலும், இதைவிட கீழே, இதைவிட மோசமான ஒன்று நமக்கு ஏற்பட வாய்ப்பில்லை. அதையே அனுபவித்து விட்டோம்; மற்றவையெல்லாம் சிறியதுதானே.
ஆகவே, அது ஒரு பெரிய வாய்ப்பு.
மிசா சிறைச்சாலையில் ஒரு மோசமான நிலையை சந்தித்தோம். அது திட்டமிட்டு நடத்தப்பட்டது.
பகுத்தறிவாளர்கள் எது பலகீனமோ, அதை பலமாக மாற்றிக்கொள்வதுதான்.
அந்த உணர்வுக்கு நாம் ஆளாகிவிட்டோம் என்றால், இனி எத்தனை முறை அடக்குமுறைகள் வந்தாலும், எத்தனை முறை சங்கடங்கள் வந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் தாராளமாக வந்துவிடும்.
அடுத்தபடியாக, சிறைச்சாலையில் நிலைமை கொஞ்சம் மாறியதும், எந்தெந்த புத்தகங்களைப் படிக்காமல் வைத்திருந்தோமோ, அந்தப் புத்தகங்களை யெல்லாம் படிப்பதற்கு அதைவிட நல்ல வாய்ப்பு, சிறைச்சாலையைவிட வேறு கிடையாது.
மூன்றாவது ஒரு பெரிய வாய்ப்பு என்னவென்றால், தனி மனிதன், தன்னைப்பற்றி, மிக ஆழமாக, நம்முடைய நிறை, குறை எல்லாவற்றையும் சிறைச்சாலையில் தனியே இருக்கும்பொழுது சிந்திக்கின்றான் பாருங்கள், அது ஒரு பெரிய வாய்ப்பு. இயற்கையிலேயே ஏற்படுத்திக் கொடுத்த ஒரு பெரிய வாய்ப்பு.
இவை அத்தனையும் எனக்குக் கிடைத்தது.
தற்குறிகளில் இரு வகை!
அன்புடன் ஆனந்தி: நல்ல வாய்ப்பு. எதையுமே நாம் பார்க்கின்ற கோணத்தில்தான் இருக்கின்றது என்று சொல்வார்கள்.
நீங்கள் சிறைச்சாலைக்குப் போனதால், கொள்கைப் பிடிப்பு இன்னும் அதிகமானதற்கு நல்ல வாய்ப்பு என்று சொன்னீர்கள். சிந்தனைத் திடலாகவும் சிறைச்சாலை அமைந்தது என்று சொன்னீர்கள். படிக்காத புத்தகங்களை படிப்பதற்கு நல்ல வாய்ப்பு என்று சொன்னீர்கள்.
இதுதான் பகுத்தறிவு. எந்த ஒரு சூழல் வந்தாலும், அதனை நமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வது என்பதை மிகவும் அழகாக எடுத்துச் சொன்னீர்கள், மகிழ்ச்சி, நன்றி!
அடுத்ததாக, நம்முடைய கொள்கையான பேதமில்லா பெருவாழ்வு இன்னும் சிறப்பாக மலரவேண்டும்; மக்களிடையே மேலும் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டும் என்பதற்காக என்னென்ன முன்னெடுப்புகள் செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: தந்தை பெரியார் ஒன்றைச் சொல்வார்,
தற்குறிகளில் இரண்டு வகை உண்டு. படிக்காத வர்களைத் தற்குறிகள் என்று நாம் சொல்வோம்.
ஆனால், அய்யா அவர்கள் அதை விசேசமாகப் பார்த்தார்.
‘படித்த தற்குறிகள்; படிக்காத தற்குறிகள்.’
படித்த தற்குறிகளுக்கும், படிக்காத தற்குறிகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால்,
படிக்காத தற்குறிகள் – தனக்குத் தெரியாது என்பது தெரியும்.
படித்த தற்குறிகள் – தனக்குத் தெரியாது என்பது தெரியாது.
இதுதான் மிக எளிதான ஒரு சூழல்.
அவர்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்கவேண்டும். சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், கற்றல் என்பதைவிட, கற்றுக்கொண்டதாக நினைத்துக் கொண்டிருக்கின்ற பழைய பழக்கவழக்கங்களை வெளியில் தூக்கி எறியவேண்டும்.
‘‘பழையன கழிதலும்; புதியன புகுதலும்’’ என்பதை நமக்குப் பாடமாகச் சொல்லிக் கொடுத்தாலும், நடைமுறையில், படித்தவர்கள் உள்பட – புதியன புகுதல் – நடைமுறையில் பார்த்தீர்கள் என்றால், கைப்பேசி, தொலைக்காட்சி, வீடியோ கான்பரன்சிங் எல்லாம் இருக்கின்றன.
பழையன கழிதல் கிடையாது.
பழைய ரத்தமும், புதிய ரத்தமும்!
அய்யா அவர்களுடைய சிந்தனை எல்லாவற்றையும் பளிச்சென்று சொல்வதுதான்.
பழைய ரத்தத்தையெல்லாம் வெளியேற்றி, புது ரத்தத்தைப் பாய்ச்சவேண்டும். புதிய ரத்தத்தைப் பாய்ச்சுகிறோம் என்று சொல்லி, பழைய ரத்தத்திலேயே பாய்ச்சினால், புது ரத்தமும் வீணாகப் போய்விடுமே தவிர, லாபம் கிடையாது. அது அறிவுள்ள செயலாக இருக்க முடியாது என்றார்.
அதுபோன்று, இந்தப் பணிகளை நாங்கள் செய்யும்பொழுது, என்ன செய்யவேண்டும் என்று நாங்கள் நினைக்கின்றோம் என்றால், ஒரு புத்தாக்கத்தைச் சொல்லும்பொழுது, கசப்பான பணி, எதிர்ப்பணி, யாரும் ஆதரிக்காத ஒரு பணி – அறிவியலில் முதன் முதலாக எந்தக் கண்டுபிடிப்பையும் யாரும் ஏற்றுக்கொண்டதாக வரலாறு கிடையாது.
பூமி உருண்டை என்று சொன்னவரை, உருட்டைக்கட்டையால் அடித்தார்கள்.
நோய்த் தீர மருந்து விற்றவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அடித்திருக்கிறார்கள்.
செய்யவேண்டுமா – வேண்டாமா?
நோயை கடவுள் தருகிறார்; சாத்தான் மருந்து கொடுக்கிறது என்று சொல்லக்கூடிய மேல்நாட்டு சம்பவங்கள் எல்லாம் உண்டு.
ஆகவேதான் நண்பர்களே, எல்லோருக்கும் சொல்லவேண்டிய கருத்து என்னவென்றால், இந்த எதிர்ப்பைப்பற்றி கவலைப்படாமல், எங்க ளுடைய அளவுகோல் என்னவென்றால், அய்யா சொல்வதுபோன்று, ‘‘செய்யவேண்டுமா? செய்ய வேண்டாமா?’’ ‘‘இதற்குத் தீர்வு வேண்டுமா? வேண்டாமா?’’ இது மட்டும் நடைபெறவில்லை.
நாம் வெற்றி பெறுவோமா? தோல்வி அடைவோமா? என்று முதலிலேயே அந்த ஆராய்ச்சியில் இறங்கி தயக்கம் காட்டினால், இந்தப் பணியை செய்ய முடியாது.
இப்பொழுது ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) காலம் வரைக்கும் வந்தாயிற்று.
அறிவியலை மூடநம்பிக்கைக்குப் பயன்படுத்துகின்ற ஓர் ஆபத்து நடந்துகொண்டிருக்கின்றது.
ஆனால், இங்கோ அறிவியலை உண்மைக்கு மாறான செய்திகளுக்காகப் பயன்படுத்துகின்றார்கள்.
படித்த நண்பர்கள், உங்களைப் போன்ற பல இடங்களில் இருக்கக் கூடியவர்கள் எல்லாம் என்ன செய்யவேண்டும் என்றால், அறிவியல் கருவிகள், உண்மைகளைப் பரப்புவதற்காக இருக்கவேண்டும். அறிவியல், பகுத்தறிவு கருத்துகளைப் பரப்புவதாக இருக்கவேண்டும். மனிதர்களுடைய சமத்துவத்திற்குப் பாதுகாப்புத் தேடுவதாக இருக்கவேண்டுமே தவிர, பழைமைக்கு, புதுப்புது வியாக்கியானங்கள் சொல்லக்கூடியவையாக இருக்கக்கூடாது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் பட்டமளிப்பு விழாப் பேருரை!
அறிஞர் அண்ணா அவர்கள், அண்ணாமலை பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசும்பொழுது, ‘‘இளைஞர்களே, பகுத்தறிவுப் பெறும் பட்டதாரிகளே!” என்று சொன்னார்.
இப்பொழுது பார்த்தீர்களேயானால், பழைமைக் கருத்துகளுக்குப் புதிய வியாக்கியானம்.
உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன், ஒரு காலத்தில் தெருவில் போகும்போது, கீழ்ஜாதிக்காரன் எச்சில் துப்பக்கூடாது. அதற்கு ஒரு குடுவையைக் கழுத்தில் கட்டிக் கொண்டிருக்க வேண்டும், கேரளாவில்.
அதை மீறி எச்சில் துப்பினால், சிறைத் தண்டனை, அபராதம் கட்டவேண்டும். போகும்போது ‘ஊ’ என்று சத்தம் கொண்டு போகவேண்டும். உயர்ஜாதிக்காரர்கள் இருந்தால், ஊரைச் சுற்றிக்கொண்டுதான் போகவேண்டும் கீழ்ஜாதிக்காரர்கள்.
இந்த நிகழ்வை, அறிவியலை இதனோடு பொருத்திப் பார்க்கிறார்கள் பாருங்கள்.
‘‘அந்தக் காலத்திலேயே கண்ட இடத்தில் எச்சில் துப்புவது சுகாதாரக் கேடு; அதனால் ஒரே இடத்தில் எச்சில் துப்பவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் பாருங்கள்.”
அதில் உள்ள ஆபத்தைச் சொல்லவில்லை பாருங்கள்.
அடுத்த கேள்வியைப் போடவேண்டும் பகுத்தறி வில். அதுதான் பெரியார் சிந்தனை.
சரி, நீங்கள் சொல்வது நல்லதுதான். அந்தக் குடு வையை எல்லோரும் கழுத்தில் கட்டிக் கொள்வதுதானே!
அது என்ன மேல்ஜாதிக்காரன்? கீழ்ஜாதிக்காரன்? என்பது.
கீழ்ஜாதிக்காரனுக்கு மட்டும்தான் எச்சில் சுரக்குமா?
மேல்ஜாதிக்காரனுக்கு எச்சில் சுரக்காதா? என்று கேட்டால், ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு மோசடி என்பது விளங்கும்.
பழைமைக்கு புதுமை விளக்கம்.
சில நேரங்களில் ஒப்பனைகள் – இவையெல்லாம் கலைக்கப்படவேண்டும்.
உண்மையை, உண்மையாகவே காட்டவேண்டும்.
அதற்கு அறிவுள்ளவர்கள் காரணம்.
பகுத்தறிவு வேறு; படிப்பறிவு வேறு.
பகுத்தறிவும், பட்டறிவும் பயன்படவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேட்டியில் கூறியுள்ளார்.