கருஞ்சட்டை
ஈரோடு இடைத்தேர்தல் ஓர் இணையற்ற வெற்றியை குவித்த தனித்தன்மையான ஒரு தேர்தல்!
1. பிரதான எதிர்க்கட்சிகளாக வரும் 2026 சட்ட மன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, ஆட்சியைப் பிடிப்பதாகச் சொல்லும் அரசியல் கட்சிகளும் – தங்களுக்கு மக்கள் இதயத்தில் எவ்வளவு இடம் என்று தெரிந்துகொண்டு அதற்கேற்ப வியூகம் வகுக்கும் அரசியல் தெளிவோ, துணிவோ இல்லாமல், தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்று பிரதான எதிர்க்கட்சியும் – சென்ற இடைத்தேர்தலில் இதே தொகுதியில் தேர்தல் நடைபெற்றபோது போட்டியிட்ட கட்சியும், களத்தை விட்டு ஓடி, தங்களது தோல்வியை முதலில் ஒப்புக்கொண்டனர்!
தேர்தல் களத்தில் தராதரமின்றி…
2. பல முக்கிய கட்சிகளும் பின்வாங்கிய நிலையில், தி.மு.க. வெற்றி அமோகமாக இருக்கும் என்பது உறுதி என்று, ஒதுங்கிய நிலையில், டெபாசிட் பறிகொடுத்தாலும், அரசியல் பேரம் நடத்திடவே இருக்கும் ஒரு தனி நபர் கட்சி, ‘‘வாடகை ஒலிபெருக்கி’’ போன்ற ஒரு சிறு குழு முன்பு போர்த்திக் கொண்டு வந்ததையெல்லாம் இம்முறை அதனிடமிருந்து, அதிலிருந்து வெளியேறியவர்களே உருவிக்கொண்டு, அதன் சுய உருவத்தைக் காட்ட வைத்துள்ள நிலையில், ஆரிய எஜமானர்களிடம் ஒப்பந்தம் பேசி, தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுச் சூரியனைப்பற்றி வெறிபிடித்தவன் வெறிப் பேச்சு பற்றி குலைத்த வகையில், தேர்தல் களத்தில் தராதரமின்றி ‘‘வெடிகுண்டு’’ என்றெல்லாம் உளறியும்கூட, எதிர்பார்த்த அரசியல் லாவணியை நடத்திட முடியாமல், ஏமாற்றமோ ஆரியத்திற்கும், அதன் கூலிக்கும் ஏற்பட்டது!
ஆரியக் கூலிக்கு மிஞ்சியது
ஏமாற்றமே!
தனக்குப் பதில் பேசி, தேர்தல் பிரச்சாரத்தில் தன்னைப்பற்றிப் பேசுவார்கள் என்று எதிர்பார்த்த அந்த ஆரியக் கூலிக்கு மிஞ்சியது ஏமாற்றமே!
அலட்சியப்படுத்தலும், அமைதியான மவுனமுமே அதற்குரிய அருமையான பதில்களாக அமைந்தன. அகிலம் அதை உணர்ந்து வருகிறது!
ஈரோட்டு மானமும், அறிவும் உள்ள மக்களுக்கு அந்த மண்ணில் பஞ்சமில்லை என்று காட்டியதோடு, அரசியல் ரீதியாக அத்தகைய கூலிகளுக்கு நல்ல பாடமும் கற்பித்துள்ளனர்.
தி.மு.க.வுக்கு முந்தைய இடைத்தேர்தலில் கொடுத்த வாக்குகளைவிட, கூடுதலான வாக்குகளை அளித்தும், அந்தக் கூலிக்குப் பாடம் புகட்டிவிட்டனர்.
சென்ற முறை டெபாசிட் வாங்காத அதே கட்சி, இம்முறையும் டெபாசிட் இழந்தது. பெரியார் பற்றிப்பேசிய கூலி நிறையக் கிடைப்பதால், இன்றும் பலமுறை கட்டிய பணத்தை இழப்பதில் சுய இன்பம் கண்டுவரும் மானம் அறியாத மனித உருவில் உள்ள அய்ந்தறிவு கட்சி.
தி.மு.க.வுக்கு வெற்றிக்கனியைத் தந்துள்ளனர்!
46 வேட்பாளர்களில், 45 வேட்பாளர்களும், இந்த சவடால் பேச்சுப் பேசும் பெரியாரை விமர்சித்த ஒரு நபர் கட்சியைச் சேர்ந்தவரும் – அரசியல் தண்டனை – கட்டிய டெபாசிட்டை இழக்கச் செய்து, தி.மு.க. ‘‘தனித்ததோர் தகத்தகாய வெற்றி’’யைப் பெற்றது, ‘திராவிட மாடல்’ முதலமைச்சரின் முழக்கமான 200 இடங்களை வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெறுவோம் என்பதற்கு அச்சார வெற்றியை ஈரோட்டு மண் இந்தத் தேர்தல் பரிசாக உச்சிமோந்து தி.மு.க.வுக்கு வெற்றிக்கனியைத் தந்துள்ளனர்!
பார்ப்பனர் – அவர்தம் குழுவினர் ஓட்டுகள்தான் – காவியினரின் (அவர்களில்கூட பலர் ஒதுங்கிய நிலை) சில வாக்குகளைப் பெற்று ‘மீசையில் மண் ஒட்டவில்லை’ என்று காட்டிக் கொள்கிறார்கள்.
வழக்கமாக அமைச்சர்களே, முக்கிய தலைவர்களே, பிரச்சார மேடைகளில் தம்மை கதாநாயகனாக்கிக் காட்டும் அதன் விளம்பர வெளிச்சத்தையாவது பெற்றுத் தனது ‘குத்தகை தொகையை’ ஆரியத்திடம் உயர்த்திக் கொள்ளலாம் என்ற ஆசையும் நிராசையாகிவிட்டது!
தேர்தலில் தோல்வி – டெபாசிட் இழந்த நிலை!
இதுவரை சொல்லி வந்த பொய், பித்தலாட்டத் திரையை – ஈழத்துக் கதைகளை – தோலுரித்துவிட்டனர்! அவரது மாஜி சகாக்களும், அவர், மாவீரன் பிரபாகரனுடன் சேர்ந்த புனை கதைகளை, பொய் முகங்களையும் அம்பலப்படுத்தி, அரசியல் நிர்வாணத்தில் நிற்க வைத்துவிட்டனர்!
கூலிக் கூட்டப் பைத்தியங்கள் மானம், வெட்கம், சூடு சொரணை ஏதும் இல்லாது நடத்திய ‘விபீஷண சரணாகதி’ கைகொடுக்காது தோல்வியில் முடிந்ததே என்ற ஒப்பாரிதான் மிச்சம்!
பாறைமீது மோதினால் மண்டைகள் உடைபடும்; கோணிப் புளுகன் – கொள்கைகளை விற்று வழிவழி வந்தவர் கதி, மேலும் தோலுரிந்து தனது சட்டையைக் கிழித்துக்கொண்டு, வேறு புதிய இடம் தேடி அரசியல் பிழைப்புக்கு வழி தேடுவதைத் தவிர வேறு ஏது வழி?
ஈரோடு கற்பித்த அரசியல் பாடம் சிறப்போ சிறப்பு!
நல்ல பிராணிக்கு ஒரு சூடு – உறைக்குமா?