சென்னை, பிப்.9 பாலியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்படும் நபர், குற்றத்தை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அவருக்கு ஆண்மை பரி சோதனை நடத்துமாறு உத்தரவிடக்கூடாது என்று சிறப்பு நீதிமன்றங்கள், அமர்வு நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
மைனர் சிறுவன் – சிறுமி இடையிலான காதல் காரணமாக எழும் திருமண பந்தம் மற்றும் மைனர் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் மைனர் சிறுவன்மீது குழந்தை திருமண தடை சட்டத் தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. பின்னர், சிறார் நீதி வாரியத்தில் விசாரணை நடத்தப்பட்டு, இறுதியாக கண்காணிப்பு இல்லங்களில் அடைக்கப் படுகின்றனர்.
இந்நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், சுந்தர் மோகன் அமர்வில் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அதன் விவரம்:
மருத்துவர்கள் உறுதி செய்ய வேண்டும்
நீதிபதிகள்: மைனர் ஆண் – மைனர் பெண் இடையே நிகழும் திரு மணம் போன்ற நிகழ்வு களின்போது ஏற்படும் பாலியல் சம்பவங் களுக்காக மைனர் சிறுவர் களை கைது செய்து, கண்காணிப்பு இல்லத்துக்கு அனுப்புவது போன்ற எந்த உத்தர வையும் சிறார் நீதி வாரியம் இயந்திரத்தனமாக பிறப்பிக்கக் கூடாது. அதே போல, பாலியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்படும் நபர், தான் குற்றம் செய்யவில்லை என மறுத்தால் மட்டுமே ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும். அவரே குற்றத்தை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்துமாறு சிறப்பு நீதிமன்றங்கள், அமர்வு நீதிமன்றங்கள் உத்தரவிட கூடாது. இதுதொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். அதுபோன்ற சோதனைகள் செய்யப்படவில்லை என்பதை மருத்துவர்களும் உறுதி செய்ய வேண்டும்.
அரசு தரப்பு: பாலியல் வழக்குகளில் தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருவிரல் சோதனை மற்றும் பிறப்புறுப்பு சோதனைகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன. பாலியல் வழக்குகளில் குறைமாத கரு, தொடை எலும்புகளை பாது காக்க எல்லா அரசு மருத் துவமனைகளிலும் போதிய வசதிகள் இல்லை.
நீதிபதிகள்: இது தொடர்பாக அரசு மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் குறித்து அரசு தடயவியல் துறை தரப்பில் அதற்கான பிரதிநிதிகள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகும் பெண்களின் அடையாளம் பொதுவெளியில் கசிவதை தடுக்க அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 14-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.