தொடர்ந்து தாக்கப்படும் மீனவர்கள் ஒன்றிய அரசு, தமிழ்நாடு மீனவர்களை பாதுகாக்க தவறுவது ஏன்? நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாடு எம்.பி.க்கள் போராட்டம்

viduthalai
1 Min Read

புதுடில்லி, பிப்.8 தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையின ரால் கைது செய்யப்படுவது மற்றும் தாக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டு மீனவர்கள்

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள் 97 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட 216 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க வேண்டும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தியும், மக்களைவையில் இந்த விவகாரத்தை விவாதத்துக்கு எடுக்கும்படி வலியுறுத்தியும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, அவையில் நேரமில்லா நேரத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்வைத்தார். மேலும், இந்த விவகாரத்தில் மெத்தனமாக செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்து நேற்று காலை திமுக எம்.பி.க்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தமிழ்நாடு எம்.பி.க்கள் நாடாளுமன்ற வாயிலில் போராட்டம் நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது: இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்களை கைது செய்வதும், துன்புறுத்துவதும் தொடர்கதையாகிவிட்டது. தற்போதுகூட 97 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கும், அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருக் கிறார்.

நிரந்தர தீர்வு

இதுவரை 210 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். தற்போது தமிழ்நாட்டில் இது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஒன்றிய அரசு மீனவக் குழுக்களுடன் கலந்துபேசி, நிரந்தரத் தீர்வுகாண குழு அமைப்பதாக உறுதியளித்திருந்தது. ஆனால், இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வதுடன், அவர்களின் படகுகளை திருப்பிக் கொடுக்க வேண்டும். மீனவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். முதலமைச்சர் வலியுறுத்தியிருப்பதைப்போல, இந்தப் பிரச்சினைக்கு இலங்கை அரசுடன் பேசி, நிரந்தரத் தீர்வுகாண ஒன்றிய அரசு முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *