பிரயாக்ராஜ், பிப்.8 உத்தரப்பிர தேசத்தின் பிரயாக்ராஜில் நடை பெறும் மகா கும்பமேளாவில் நேற்று (7.2.2025) மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ரா ஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13 ஆம் தேதி தொடங்கியது. இது இம் மாதம் 26 ஆம் தேதி முடிவடைகிறது. இங்கு இது வரை 39 கோடிக்கும் மேற்பட்டோர் ‘புனித‘ நீராடியுள்ளனர். கடந்த 5.2.2025 அன்று பிரதமர் மோடி நீராடினார். மகா கும்ப மேளாவுக்காக பிரயாக்ராஜில் ஏராளமான தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தங்கும் சாதுக்கள் தாங்களே உணவு சமைத்து சாப்பிடுகின்றனர்.
குளிர் காய்வதற்காக சிலர் தீ மூட்டுகின்றனர். இதனால் இங்குள்ள சத்நாக் படித்துறை பகுதியில் கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 15 கூடாரங்கள் எரிந்தன. இந்த தீ உடனடியாக அணைக்கப்பட்டது. உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
பெரும் விபத்து தவிர்ப்பு
இந்நிலையில் பிரயாக்ராஜின் பழைய ஜி.டி சாலையில் துளசி சவுரகா என்ற இடத்துக்கு அருகே அமைக்கப்பட்ட முகாமில் நேற்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டு பல கூடாரங்கள் எரிந்தன. இங்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தின. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.