பாணன்
நெல்லை கங்கைகொண்டான் ‘சிப்காட்’
கலைஞர், அறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
அவர் பொறுப்பேற்ற காலத்தில் இருந்தே தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சி குறித்தும் எதிர்காலத்தில் தமிழ்நாட்டிற்குரிய பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு குறித்தும் தீவிர திட்டமிடலின் கீழ் தமிழ்நாடு முழுவதும் தொழில் வளர்ச்சி ஏற்படுவதை உறுதி செய்யும் நோக்கில், 1971ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (சிப்காட்) அறிமுகப்படுத்தப்பட்டது. (SIPCOT – State Industries Promotion Corporation of Tamil Nadu) சிறப்புத் தொழிற்பூங்காக்கள், தொழிற்பேட்டைகள், துறை சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சிறப்பு உள்கட்டமைப்புத் திட்டங்கள் போன்றவற்றை உருவாக்குவதே சிப்காட்டின் நோக்கமாக இருந்தது.
நாடுமுழுவதும் பல்வேறும் தொழில் வளர்ச்சி அமைப்புகள் மாநில அரசுகளால் உருவாக்கப்பட்டாலும் திமுக தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தொழில் தொடர்பான பல்வேறு துறைகளை ஆங்காங்கே உருவாக்கியது. அதில் முக்கியமானது சிப்காட்.
கங்கை கொண்டான்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, கடலூர், திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, இருங்காட்டுக்கோட்டை, மப்பேடு, ஒசூர், மானாமதுரை, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, ஒரகடம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம், ராணிப்பேட்டை, சிறுசேரி, சிறீபெரும்புதூர், தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகை, வல்லம், வடகால் ஆகிய இருபது இடங்களில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப் பட்டுள்ளன.
இதில் கங்கைகொண்டான் மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். 1996ஆம் ஆண்டில் திருநெல்வேலி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கங்கை கொண்டானில் 2,000 ஏக்கர் பரப்பில் சிப்காட் அமைக்கப்பட்டது.
தொலைநோக்குத் திட்டம்
இந்த இடமும் கலைஞரால் சிறப்பான கண்ணோட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். நெல்லை நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து 20 நிமிடம் பேருந்துப் பயணம் – கங்கைகொண்டானைச் சுற்றி பல பேரூராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள், அனைத்துமே திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியின் கீழ் வரும். மேலும் அனைத்து குக்கிராமம் வரை கலைஞர் காலத்தில் பேருந்து வசதியோடு 1990ஆம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டணமில்லா பேருந்து வசதிகளால் கிட்டத்தட்ட அனைத்து இருபாலரும் உயர்கல்வி வரை சென்று பட்டப்படிப்பும் பொறியியல் மற்றும் இதர தொழிற்கல்வியில் மேம்பட்டனர்.
இந்த நிலையில் அனைவருக்கும் வேலை, அதுவும் அவர்களது மாவட்டத்திலேயே என்ற தொலைநோக்கோடு கங்கைகொண்டான் சிப்காட் துவங்கியது. ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றத்தின் போதும் சிப்காட் பணிகள் சிறிது தொய்வு ஏற்பட்டதும் கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு வேகமெடுக்கத் துவங்கியது.
இதற்கு எடுத்துக்காட்டு:
அன்று கூறினார் – இன்று நிறைவேற்றினார்
கங்கைகொண்டான் சிப்காட் வளாகம் பல்பொருள் உற்பத்தி மண்டலமாக்கப்படும் என்று அன்றே கூறினார் கலைஞர்.
15 அக்டோபர் 2009 அன்று கங்கைகொண்டானை அடுத்து உள்ள நகரமான சங்கர் நகரில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் உள்ள தொழில்முனைவோருடன் கலந்துரையாடலில் தற்போதைய முதலமைச்சரும் அன்றைய துணை முதலமைச்சருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:
“தொழில் நிறுவனங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் உரிமம் வழங்கும் திட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களும் தொழில்துறையில் வளர வேண்டும்.
தொழில் தொடங்க முன்வருவோருக்கு சிறப்பு தொகுப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இச் சலுகை ரூ.250 கோடிக்கு முதலீடு செய்வோருக்கு மட்டும்தான் வழங்கப்படும். ஆனால் தென் மாவட்டங்களில் ரூ.50 கோடிக்கு மேல் முதலீடு செய்தாலே வழங்கப்படுகிறது.
கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் புதிதாக 9 நிறுவனங்களுக்கு தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஒரு டயர் தொழிற்சாலை உற்பத்தியைத் தொடங்கும். சிப்காட் வளாகத்தை பல்பொருள் உற்பத்தி மண்டலமாக மாற்றும் திட்டமும் உள்ளது” என்று கூறினார். மேலும், “தூத்துக்குடியில் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 புதிய அனல்மின் நிலையங்கள் தொடங்கப்பட உள்ளன. விமான நிலையமும், துறைமுகமும் விரிவாக்கப் படும். விமான நிலையத்துக்கு நிலம் வாங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்று கலைஞர் கூறியிருந்தார்.
2000த்திற்குப் பிறகு தென் தமிழ்நாட்டிலிருந்து குறிப்பாக நெல்லை உள்ளிட்ட தென்கோடி மாவட்டங்களில் இருந்து பெருநகரங்களான மும்பை, சென்னை, உள்ளிட்ட நகரங்களுக்கு வேலைக்காக செல்லும் மக்கள் இடம் பெயர்வு மிகவும் குறைந்து கொண்டே வந்தது.
இது தொடர்பாக சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் பொருளாதாரப் பிரிவு தலைவர் பேராசிரியர்
எஸ்.தருமராஜ் “இடம் பெயரவும் பொருளாதார வளர்ச்சியும்” (migration and development book s.dharmaraj) என்ற பெயரில் விரிவாக ஆய்வுக்கட்டுரை எழுதி உள்ளார்.
நெல்லை தெற்காசியாவின் ஆக்ஸ்போர்ட் என்பது பலரும் அறியாத தகவல் ஆகும்.
1990 தாராள மயமாக்கல் காலத்தில் தென் தமிழ்நாடு ஜாதிய மோதல்களுக்கு சாட்சியாக இருந்தது. இதனால் அங்கு தொழிற்சாலைகளை கொண்டு சென்று வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது சிரமத்தை ஏற்படுத்தியது.
தென்தமிழ்நாட்டில் தொழில் முதலீடு
இருப்பினும் அடுத்தடுத்த காலக்கட்டத்தில் மாநில அரசுகள் சிறப்பு நடவடிக்கைகள் மூலம் தென் தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதில் வெற்றியும் கிடைத்து வருகிறது.
தென்தமிழ்நாட்டில் சிறப்பு கவனம் செலுத்தி தொழிற்சாலைகள், நிறுவனங்களை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வரப்படுகிறது. இதன்மூலம் தொழில் முதலீடுகள் உயர்ந்து வேலைவாய்ப்புகள் அதிகரிக்கத் துவங்கி உள்ளது.
துவத்திலேயே கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 9 நிறுவனங்களுக்கு தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் அங்கு தொழிற்சாலை உற்பத்தியைத் தொடங்கியது.
ஏற்கெனவே பன்னாட்டு குளிர்பான நிறுவனம் ஒன்று சிறப்பாக இயங்கி வந்த நிலையில் சிப்காட் வளாகம் பல்பொருள் உற்பத்தி மண்டலமாக மாற்றப்பட்டது.
ஆனால், மீண்டும் 2011 ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் வளர்ச்சிப் பணிகள் ஆமை வேகத்தில் நகரத் தொடங்கி 2015 ஆம், ஆண்டிற்குப் பிறகு கிட்டத்தட்ட மேம்பாட்டுப் பணிகள் எதுவுமே நடைபெறாமல் முடங்கிவிட்டன.
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சி மலர்ந்தது. அதன் பிறகு கலைஞரின் தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளமாக விளங்கும் கங்கைகொண்டான் சிப்காட் மீண்டும் வேகமெடுத்தது.
இன்று திருநெல்வேலி நகரத்திற்கு கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்கா அந்த மாவட்ட மக்களுக்கும் அல்லாது அருகில் உள்ள தென்காசி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களின் மக்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு தரும் தொழில் நகரமாக மாறிவிட்டது.
இரண்டு நாள் நெல்லைக்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6.2.2025 அன்று நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்திற்குச் சென்றார்.
சோலார் நிறுவனம்
முதலாவதாக 3,800 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா பவர் சோலார் நிறுவனம் அமைத்துள்ள 4.3 GW Solar Cell மற்றும் Module உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார்.
அதற்கடுத்து, 2574 கோடி ரூபாய் முதலீட்டில், 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விக்ரம் சோலார் நிறுவனம் 3 GW solar Cell மற்றும் 6 GW Module உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இவற்றில் பெரும்பான்மையான வேலைவாய்ப்புகள் பெண்களுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கான வேலைவாய்ப்பு
தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது.
இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை சுமார் 10 இலட்சம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 31 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் ஈர்க்கப்பட்டுள்ளன. சீரான, பரவலான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தமிழ்நாடு அரசின் கொள்கைக்கேற்ப, ஈர்க்கப்படும் தொழில் திட்டங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்டு. இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
உலகப் புகழ்பெற்ற இந்திய குழுமமான, டாடா குழுமத்தின் துணை நிறுவனங்களான டிசிஎஸ். டைட்டன், டாடா மோட்டார்ஸ், டாடா எலெக்ட்ரானிக்ஸ், தாஜ் ஹோட்டல்கள், தனிஷ்க் ஆகியவை ஏற்கெனவே தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ளன. இந்நிலையில், டாடா குழுமத்தின் துணை நிறுவனமான TATA Power Ltd., காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை தணிப்பதற்கு அவசியமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் துறையில் முதலீடு மேற்கொள்வதற்காக 2022-ஆம் ஆண்டு ஜுலை மாதம், இத்திட்டத்திற்கான முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது கூடுதலாக முதலீடு மேற்கொள்வதாக இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டது.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 3,800 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்து, உற்பத்தியையும் தொடங்கி வைத்தார்.
பின்னர், முதலமைச்சர் அவர்கள் தொழிற்சாலையை பார்வையிட்டு, அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்களிடம் உரையாடி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சோலார் பேனலில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “வாழ்த்துகள்” என்று எழுதி கையொப்பமிட்டார்.
பெண்களுக்கு 80 சதவிகித வேலைவாய்ப்பு என்பது மட்டுமின்றி, பெண்களுக்கு தங்கும் விடுதி வசதிகளும் அளிக்கப்படவுள்ளது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். இந்நிகழ்ச்சியில், காணொலிக் காட்சி வாயிலாக டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.