எளிதாக பேசுமொழி தமிழ் பாப்பா – மூச்
சிழுக்கும் வல்லொலி யதில் இல்லை பாப்பா
பேசு பாப்பா – தமிழ் பேசு பாப்பா…’
பாவாணர் இந்த வரிகளை எழுதி 100 ஆண்டுகள் நிறைவடையப்போகின்றன. அவர் எழுதிய காலத்தைத் தாண்டி இன் றைக்கும் இந்த வரிகள் அவசியமானதாக உள்ளன. தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியைத் தமிழ் மொழியியல் ஆராய்ச்சிக்காகச் செலவழித்த தேவநேயப் பாவாணர் பிறந்த நாள் இன்று. அவரது அரிய பணிகளை நினைவுகூர்வதன் மூலம், நம் மொழியின் பெருமையையும் வரலாற்றையும் நாம் பயணிக்க வேண்டிய பாதையையும் அறிய முடியும்.
இயற்பெயர் தேவநேசன். ஞான முத்துவுக்கும் பரிபூர்ணம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் தேவநேசன். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்ததால், கிறிஸ்துவ பாதிரியார் யங் துரை வளர்ப்பில் கல்வி பயின்றார். கவி பாடும் திறன் பெற்றதால் `கவிவாணன்’ என்ற பட்டத்தைப் பெற்றார். பிறகு, தனித்தமிழ் ஈடுபாட்டின் காரணமாக, தன் பெயரை `தேவநேயப் பாவாணர்’ என மாற்றி அமைத்துக்கொண்டார்.
அடிப்படையில் ஆசிரியரான இவர், தான் பணியாற்றிய இடங்களிலெல்லாம் மொழியின் மீது பற்றுக்கொண்ட மாணவர்களை உருவாக்கினார். `பாவாணர் பரம்பரை’ என்று அடையாளப்படுத்தும் அளவுக்கு அவரின் மாணவர்கள் திறம்கொண்டு விளங்கினர்.
பாவாணர் வாழ்ந்த காலத்தில் விடுதலை வேட்கை, நாடு முழுக்க பற்றி எரிந்தபோது இவர் மனதில் உருவானது `மொழி விடுதலை.’ தமிழின் தொன்மையை அறிந்த பாவாணர், அதைச் சூழ்ந்திருக்கும் சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழ் விடுதலை பெறுவதே தமிழின் மேன்மைக்கு வழிவகுக்கும் என உணர்ந்தார். அதை முன்னெடுக்கவே தமிழ் மொழி குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் `தமிழே மற்ற மொழிகளுக்குத் தாய்’ என்றுணர்த்தும் கட்டுரைகளையும் நூல்களையும் தொடர்ந்து எழுதினார். வடமொழிச் சொற்களில் அய்ந்தில் இரண்டு பங்கு தமிழ்ச் சொற்கள்தான் என்பதை நிறுவினார். வடமொழியிலிருந்து பிறந்தது தமிழ் என்று பரப்பப்பட்ட கருத்தைக் கடுமையாகச் சாடினார்.
ஆரிய படையெடுப்பால் சிதைந்த தமிழர் மரபை மீட்க, நம்மிடம் எஞ்சி நிற்கும் ஒரே கருவி மொழிதான். `எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே’ என்கிறார் தொல்காப்பியர். தமிழ் என்பது, வெறும் மொழியன்று… கலை, நாகரிகம், பண்பாடு, மரபு, கலாச்சாரம் எனத் தமிழ் மொழி தாங்கியுள்ள கூறுகளை வெளிக்கொணர்வதே தன் பணியாகத் தானே விருப்பத்துடன் ஏற்று செயல்பட்டார் பாவாணர்.
1971ஆம் ஆண்டில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தின் இயக்குநராகப் பாவாணர் பொறுப்பேற்றார். திட்டக்காலம் நான்கு ஆண்டுகள் எனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்குள் முடிக்க இயலாத அளவு தமிழின் பரப்பு விரிந்து கிடப்பதை உணர்ந்தும் `தன்னால் மட்டுமே இத்தகைய பணியைச் செய்ய முடியும். இதை நிறைவேற்றுவதே இதற்கு முந்தைய தன்னுடைய உழைப்பின் பயன்’ என்ற தன்னம்பிக்கையோடு செயல்படத் தொடங்கினார். அணிகலன்கள், தொழிற்கருவிகள் என உலகிலேயே அச்சில் வராத சொற்களைத் தொகுக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அவர் தொகுத்த சொற்களோடு இன்னும் சிலவற்றையும் சேர்த்து `தேவநேயம்’ என்கிற பெயரில் 13 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழர் என்று இருப்போரெல்லாம் – நல்ல
தமிழ் அன்பரோ நெஞ்சைத் தடவிப்பாரும்
நாமும் நம்மை கேட்டுக்கொள்வோம்,
நாம் எல்லாம் தமிழர்தானே?