‘மாட்டு மூத்திரத்திற்கு மருத்துவ குணம் உள்ளதாக மருந்து அதிகார அமைப்பு சான்றளித்துள்ளதா?– கே. அசோக்வர்தன் ெஷட்டி பெரியார் நூலக வாசகர் வட்ட சிறப்புக் கூட்டத்தில் அறிவியல் மனப்பாங்கு வளர்ப்பு கருத்துகள் எதிரொலித்தன!
மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்தி பிளவுபடுத்தி, உயர்வு தாழ்வு கற்பித்து அடக்கி ஆளுவதுதான் தங்களுடைய பண்பாடு சார்ந்த நம்பிக்கை என ஆண்டாண்டு காலமாக ஆதிக்கவாதிகள் கடைப்பிடித்து வருகின்றனர். அந்த ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள புராணங்களை இதிகாசங்ககளைப் படைத்து வெகு மக்களை நம்ப வைத்து விட்டனர். அந்த நம்பிக்கையினை தொடர்ந்து கொண்டு செல்ல புராணப் புளுகினையே வரலாற்றுச் செய்தி என சொல்லி வருகின்றனர். தொடர்ந்து தங்களது நிலைப்பாட்டை வலியுறுத்திட அறிவியல் போர்வையில் அறிவியலுக்குப் புறம்பாகச் செய்திகளை பரப்ப முற்பட்டு வருகின்றனர். அண்மைக் காலமாக உயர் கல்வி ஆய்வுப் புலனில் பொறுப்பில் உள்ளவர்கள் அறிவியல் அடிப்படை ஏதுமின்றி நடைமுறைக்கு ஒவ்வாத, அறிவியல் மனப்பாங்கினை மட்டுப்படுத்துகி்ன்ற செய்திகளைப் பரப்பத் தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையில் உண்மையான அறிவியல் என்பது எது? மூடநம்பிக்கை அடிப்படையிலான செய்திகள் எப்படி அறிவியல் மூலம் பூசி பரப்பப்படுகின்றது என்பது குறித்து ஒரு சிறப்புக் கூட்டத்தினை பெரியார் நூலக வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்தது.
6.1.2025 அன்று சென்னை – பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் புரவலருமான தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மத்திய கடல்சார் பல்கலைக் கழத்தின் மேனாள் துணைவேந்தரும், பணிநிறைவு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியுமான கே. அசோக் வர்தன் ெஷட்டி மற்றொரு சிறப்புரையினை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை வரவேற்று பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி உரையாற்றினார். தொடக்க உரையினை திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் ஆ. வெங்கடேசன் நன்றி தெரிவித்தார். சிறப்புக ்கூட்டத்தில் உரையாற்றியவர்களின் உரைச் சுருக்கம் பின்வருமாறு:
கவிஞர் கலி. பூங்குன்றன்
‘கல்வி என்பது வயிற்றுப் பிழைப்புக்கான லைசென்ஸ்’ என்று தந்தை பெரியார் கூறினார். படித்தவர்கள் பலரும் உயர் கல்வி பொறுப்பில் உள்ளவர்களும் அறிவியலைக் கற்ற அளவிற்கு, அறிவியல் மனப்பாங்குடன் நடந்து கொள்வதில்லை. ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத அய்ந்து பொருள்கள் – பால், தயிர், நெய், மாட்டு முத்திரம், மாட்டுச் சாணம் ஆகியவற்றின் கலவையை பக்தியின் பெயரால் ‘பிரசாதமாக சாப்பிட வைத்துள்ளனர் ஆதிக்க சக்தியினரான பார்ப்பனர்கள். வெளிப்படையாக நடைபெறும் கலப்படத் தொழில் இன்று முகம் சுளிக்காமல் அந்த ‘பஞ்ச கவ்வியத்தை’ பருகிவிடுவது என்பது அடிமைத்தனத்தை உறுதி செய்வதன் வெளிப்பாடே, படித்தவர்களும் பயபக்தியுடன் அதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அறிவியல் அடிப்படையில் பஞ்ச கவ்வியத்தை தோலுரித்துக் காட்டுவது பெரியார் இயக்கத்தினர் பணியாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசமைப்புச் சட்டம் கூறும் குடிமகனின் அடிப்படைக் கடமையான அறிவியல் மனப்பாங்கினை வளர்க்கும் பணியினை பெரியார் இயக்கத்தினர் செய்து வருகின்றனர். இது வருங்காலங்களில் பரந்துபட்டு பரப்பப்பட வேண்டும். குறிப்பாக கல்விக் கூடங்களில் பரப்பப்பட வேண்டிய பணியாகும்.
தமிழர் தலைவரின் சிறப்புரை
‘ஏன் வேண்டும் அறிவியல் மனப்பாங்கு?’ – இதனை தொடர் பிரச்சாரமாக செய்யக் கூடிய ஒரே அமைப்பு – மக்கள் பிரச்சினையோடு அதனை இணைந்து செயல்படக் கூடியது சுயமரியாதை இயக்கம். கள ஆய்வில் முதல் நிலையில் இருக்கக் கூடிய கிராம பஞ்சாயத்து தலைவர் முதல் பிரதமர் ஒன்றிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளும் பொழுது இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீதுதான் உறுதி எடுத்துக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை கடமையினை வலியுறுத்துகிறது.அடிப்படை உரிமையைப் போலவே அடிப்படைக் கடமையும் முக்கியமானது. கடமையைச் செய்யாமல் உரிமையை மட்டும் கேட்டு மக்கள் முன்னேற்றம் காண முடியாது. அப்படிப்பட்ட கடமையினை சட்டக் கூறு 51A(h)வலியுறுத்திருக்கிறது.
It shall be the duty of every citizen of India to develop scientific temper, humaniam and spirit of inquiry and reform.
அறிவியல் மனப்பாங்கினை வளர்ப்பது மனிதநேயத்துடன் கேள்வி கேட்டு ஆராயும் தன்மையினையும் சீர்திருத்ததையும் தொண்டாகக் கொள்வது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமையாகும்.
அறிவியல் மனப்பாங்கினை வளர்ப்பது மனிதநேயம் பேணப்பட வேண்டும் என்பதற்காகவே, கேள்வி கேட்கும் போக்கு சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்காகவே.
அனைத்தும் மாறிவரும், செம்மைப்பட்டு வரும் சூழலில், பழைமையை நடைமுறைக்கு ஒவ்வாததைக் கடைப்பிடிப்பது அறிவியல் மனப்பாங்கற்ற செயலாகும். குருவி கூடு கட்டுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படிகூடு கட்டியதோ அதே மாதிரிதான் இன்றைக்கும் கூடு கட்டுகிறது. ஆனால் தொடக்க நிலையில் வீடு கட்டிய முறையிலேயே இன்றைக்கும் மனிதன் வீடு கட்டுவதில்லை.
ஆனால் அறிவியலுக்கு புறம்பான செயல்களை – பலவற்றை இன்றைக்கும் கடைப்பிடிப்பது பயன்படாது. முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லாது. பள்ளியில் ஆசிரியர்கள் சிலர் கிரகணம் பற்றிய அறிவியல் கருத்துகளை பாடமாக நடத்துகின்றனர். சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்பொழுது கிரகணம் நிகழ்கிறது. இது வானியல் அடிப்படையிலான அறிவியல் செய்தி. இந்த கருத்தை பாடமாக கற்பித்து விட்டு, கிரகண நாளில் – கிரகணம் தொடங்குவதற்கு முன்பே உணவருந்திவிட வேண்டும். கிரகண நேரத்தில் செய்யப்படும் உணவு கெட்டு விடும் என்று மூடநம்பிக்கையினை கடைப்பிடிப்பவர்கள் பலர் உள்ளனர். எதனையும் கேள்விக்கு உட்படுத்திப் பார்க்கும் மனப்பாங்கு பெருகிட வேண்டும்.
‘கேள்வி கேட்டு தெளிவு கொள்’ என்பதனை தொடர் பிரச்சாரமாக செய்துவருவது சுயமரியாதை இயக்கமாகும்.
மாட்டு மூத்திரம் மருத்துவ குணமுடையது அனைவரும் அருந்தலாம்’ என்று உயர் கல்வி நிறுவனமான அய்.அய்.டி.யின் இயக்குநர் கூறவது அறிவியலுக்குப் புறம்பானது. அறிவியல் படித்தவர்களே அறிவியலுக்குப் புறம்பான செய்தியினை கூறி வருகிறார்கள். அறிவியல் என்பதே ஆதாரத்தோடு காட்டுவதுதான். உரிய ஆதாரம் இல்லாமல் அறிவியல் போல கருத்துகளைச் சொல்லக் கூடாது என்ற சமுதாயப் பொறுப்பு வேண்டும்.
இன்றைய ‘தினமலர்’ நாளேட்டில் ’அமெரிக்கா விசா வேண்டி அனுமார் கோயிலில் பலர் பிரார்த்தனை’ என செய்தி வந்துள்ளது. குரஜாத் மாநிலம் அகமதாபாத் நகரிலுள்ள ஓர் அனுமன் கோவிலில் நடைபெற்ற செய்தி, பெரிய தலைப்பிட்டு வெளி வந்துள்ளது. விசா பெறுவது என்பது விசா வழங்கிடும் நாட்டின் சட்ட திட்டங்களைப் பொறுத்தது. அந்த விதிகளுக்குட்பட்டு பெறப்படும் மனுக்களுக்கு விசா கிடைக்கும். இந்த உண்மை நிலைக்கு மாறாக பிரார்த்தனை செய்தால் ‘விசா‘ கிடைக்கும் வகையில் அச்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது – அறிவியல் மனப்பாங்கு வளர்க்கப்பட வேண்டும் என்பதற்கு எதிரானது.
அண்மையில் பிரபல ஆய்வாளர் அருண்ஷோரி, The New Icon – Savarkar and the Facts என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இந்தத் நூலின் பிதாமகன் என்று சொல்லப்பட்டுவரும் சாவர்க்கர் திலகருடன் கொண்ட கருத்து மோதல் பற்றிய குறிப்புகள் அதில் இடம் பெற்றுள்ளன. மாட்டு மூத்திரம், பற்றிய திலகரின் நம்பிக்கையினை எள்ளி நகையாடுகிறார். மாமிசம் உண்ணுவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட தெரிவு. அதில் தலையிட மற்றவருக்கு உரிமையில்லை என்று கூறுகிறார். ஆனால் இன்றைய இந்துத்துவாதிகள் மாட்டு மூத்திரம், மாமிசம் ஆகியவற்றை வைத்துஅரசியல் செய்து வருகின்றனர்.
இப்படி ஒவ்வொரு விதத்திலும் அறிவியலுக்குப் புறம்பான கருத்துகள், சார்ந்த நம்பிக்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதைத் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்தி, புறந்தள்ள வேண்டியதை நீக்கிட வேண்டும். அதற்கு அறிவியல் மனப்பாங்கு வளர்த்தெடுக்கப்பட வேண்டும். முன்னேற்றத்தில் பெரும் பங்கு அத்தகைய அடித்தளத்தை அகலப்படுத்துவதில்தான் உள்ளது’
கே. அசோக் வர்தன் ெஷட்டி
‘மாட்டு மூத்திரம் குடிக்கத் தகுந்தது. அதில் மருத்துவக் குணங்கள் உள்ளது என்று சென்னை அய்.அய்.டி. இயக்குநர் கூறியுள்ளார். அறிவியல் படித்தவர் வெளியிட்ட அறிவியல் அடிப்படை ஆதாரமற்ற கூற்று இது. உடலிலிருந்து வெளிவரும் கழிவுகளில் சிறிதளவு கெட்ட பாக்டீரியாக்களைக் கொல்லும் பொருள் இருக்கும். ஆனால் அது பெரும்பகுதி அல்ல; சிறு பகுதிக்காக பயன்படுத்த வேண்டும் என்பது அறியாமை. உண்மையில் அறிவியல் ஆராய்ச்சி முடிவினை அந்தக் கல்வியாளர் தரவில்லை; மருத்துவ குணம் உள்ளது என்பதை மருத்துவ அதிகாரம் பெற்ற அரசமைப்புதான் அங்கீகரிக்க முடியும். அந்த அங்கீகாரம் பெற்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதா? இல்லையே! உண்மையில் மாட்டு மூத்திரத்திற்கு மருத்துவக் குணம் இருந்தால், இந்நேரம் பன்னாட்டு மருத்துவ நிறுவனத்தினர் மாட்டு மூத்திரத்தை விட்டு வைத்திருப்பார்களா?
இப்படி கேள்விகளை அந்தக் கல்வியாளரிடம் அப்பொழுது இருந்த செய்தியாளர்கள் கேட்டிருக்க வேண்டும். செய்தி ஊடகங்களுக்கு அறிவியல் மனப்பாங்கினை வளர்ப்பதில் பெரும் பங்கு உள்ளது. குறைந்தபட்சம் அறிவியல் தொடர்பற்ற செய்திகளை வெளியிடாமல் இருந்தாலே போதும்.
கல்வியாளர் கூறிய கூற்றினை மறுதலிக்க ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். டெட்டால், பினாயில் ஆகியவைகளில் கிருமி நாசினிகள் உள்ளன. கிருமி நாசினிகளாக உள்ளதால்,டெட்டாலுக்கும் பினாயிலுக்கும் மருத்துவ குணம் உண்டு என குடித்து விட முடியுமா? அய்.அய்.டி. இயக்குநர் வலியுறுத்துவாரா?
சாமியார்கள்் அறிவியலை அறிவியல் உண்மைகளை பொத்தாம் பொதுவாக தவறு எனக் கூறி வருகிறார்கள்.
நாடு தாண்டிய சாமி நித்தியானந்தா அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் அயன்ஸ்டீன் கூறிய E = mc2 என்பது தவறு E = mc என்பது மட்டுமே என மந்திரம் போன்று கூறியுள்ளார்.
– ஈசா நிலைய சத்குரு சாமியார் கிரகணத்தின் போது கதிர்கள் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியவை என எந்த ஆதாரமும் இல்லாமல் கூறுகிறார்.
– உத்தரப்பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் பசுமாடு மூச்சு இழுக்கும் பொழுதும், மூச்சை விடும் பொழுதும் ஆக்ஸிஜன் வாயு உள்ளே சென்று வெளியேவும் வருகிறது என்று கூறியுள் ளார். இதை அவரது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
– ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் மயில்கள், ஆண் பெண் சேர்க்கையில்லாமல் இனப் பெருக்கம் செய் கின்றன என்று ஒரு ஆதாரமற்ற செய்தியினை வெளியிட்டுள்ளார்.
– மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி, ஒன்றிய அமைச் சராக இருந்த நிலையில் அவர் பரிணாமக் கோட் பாட்டை (இயற்கை விஞ் ஞானி சார்லஸ் டார்வின்) தவறு என குறிப்பிட்டுள்ளார். பள்ளிப் பாடப் புத்தகங்களில் சில மாநிலங்களில் பரி மாணக் கோட்பாடு பாடம் நீக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட செய்திகள் வெளிவருவதை – அறிவியல் படித்தவர்கள் மறுக்க முன், வர வேண்டும். இயக்கமாகச் செயல்படாதது மாபெரும் சமுதாயப் பிழை; கடமை மறந்த செயல். கேள்வி கேட்பதற்கு ஆள் இல்லை என்றால் இப்படிப்பட்ட அறிவியலுக்குப் புறம்பான கருத்துகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கும்.
அறிவியல் மனப்பாங்கினை வளர்ப்பது எப்படி?
*உண்மை நிலையினை தெரிந்து கொள்ளும் ஆர்வம் வேண்டும்.
* கண்மூடித்தனமாக எதனையும் நம்பி விடக் கூடாது.
* பழம் பெருமைகளில் மயக்கம் கொள்ளக் கூடாது (Romaticising the past is dangerous)
* தான் பிடித்ததே சரி எனும் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அறிவியல் மனப்பாங்கை வளர்த்தெடுப்பது படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் எந்தளவு செயல்பட முடியுமோ அந்தளவு செய்தாலே ஒருமித்த விளைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திடும்.
நூல் வெளியீடு
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ‘மாணவர்களும் அறிவியல் மனப்பான்மையும்’, ‘அறிஞர்கள் பார்வையில் ஜோதிடம்’, ‘The Necessity of Scientific Temper’ நூல்களும், ‘பெரியாரும் அறிவியலும்’ – மயில்சாமி அண்ணாதுரை, ‘மதமும் விஞ்ஞானமும்’ – கே.பிரம்மச்சாரி, ‘விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்’ (பாகம் 1, 2) – மா.சிங்காரவேலர் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
சிறப்புத் தள்ளுபடியில் ரூ.400 நன்கொடைக்கு வழங்கப்பட்ட இந்நூல்களை முனைவர் நாகநாதன், பேரா.கருணாநந்தன், வழக்குரைஞர்கள் ஆ.வீரமர்த்தினி, பா.மணியம்மை, சு.குமாரதேவன், த.கு.திவாகரன், இரா.தமிழ்ச்செல்வன், ஆ.வெங்கடேசன், வெ.ஞானசேகரன், ச.ராஜேந்திரன், சீ.லட்சுமிபதி, மு.இரா.மாணிக்கம், தங்க.தனலட்சுமி மற்றும் கழகத் தோழர்களும், பார்வையாளர்கள் பலரும் வரிசையாக வந்து தமிழர் தலைவரிடமிருந்து நூல்களைப் பெற்றுச் சென்றனர்.
பெரியார் நூலக வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்த இந்தச் சிறப்புக் கூட்டத்தில் மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் மற்றும் பொது நிலையாளர்கள் பலரும் திரளாகப் பங்கேற்றனர்.
தொகுப்பு: வீ. குமரேசன்