சென்னை, பிப்.7 ஆதித் தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் இரா.அதியமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு தாழ்த்தப் பட்ட சமூக மாணவர்களின் 38 ஆண்டுகளுக்கான (1972 முதல் 2010 வரை) கல்விக் கடன் தொகை ரூ 48 கோடியை தள்ளுபடி செய்துள்ளதற்கு ஆதித்தமிழர் பேரவை நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
இன்றைக்கு ஒன்றிய அரசாங்கம் கல்விக் கடன் கொடுப்பதை பெருமையாக சொல்லிக் கொள்வதை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே கல்விக் கடனுதவியை வழங்கி சாதனை செய்திருக்கிறது தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு அன்றைக்கு வழங்கிய கடன் உதவித் தொகை யின் பலனால் அரசு பதவி கள் பெற்று இன்றைக்கு கல்வி பொரு ளாதாரத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் முன்னேற்றம் கணி சமாக அதிகரித்திருக்கிறது.
கடந்த காலங்களில் பயின்ற தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்களின் கல்விக் கடனுதவியை தள்ளுபடி செய்யக் கோரி கோரிக்கை வைத்திருந்தோம் அக் கோரிக்கையில் ஒன்றான இக்கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசிற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே போல் 2009இல் தாழ்த்தப்பட்ட சமூகத்தினுள் வழங்கிய அருந்ததியர் உள் ஒதுக்கீடு மூலம் உயர்கல்வி, மருத்துவம் மற்றும் அதன் சார்ந்த படிப்புகளில் கல்விக் கடன் பெற்று ஏராளமானவர்கள் பயின்ற வந்த போதிலும் அவர்களுக்கான கல்விக் கடனுதவி தொகைகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டள்ளது.
பொதுத் தேர்வின்போது
மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக தடையற்ற மின் விநியோகம்
அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவு
சென்னை, பிப். 7 பொதுத்தேர்வையொட்டி தடையற்ற மின் விநியோகம் வழங்குவதை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொதுத் தேர்வு
சிபிஎஸ்இ, அய்எஸ்சி, அய்சிஎஸ்இ, எஸ்எஸ்எல்சி, 12-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான செய்முறை உள்ளிட்ட தேர்வுகள் 7ஆம் தேதி தொடங்கி ஏப்.15-ம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே, அனைத்து தேர்வு மய்யங்களிலும் நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 5.30 வரை தடையற்ற வகையில் மும்முனை மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். மையத்துக்கு மின் விநியோகம் செய்யும் மின் மாற்றியை கண்காணிக்க அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
தடையற்ற மின் விநியோகம்
ஒவ்வொரு 5 மையங்களுக்கும் அவசர காலங்களில் உதவும் வகையில் களப்பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும். பள்ளி அதிகாரிகளுடன் இணைந்து செயற்பொறியாளர் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் தலைமையாசிரியர்கள் அவசர காலங்களில் தொடர்பு கொள்ளும் வகையில் துறை சார்ந்த பணியாளர், அதிகாரிகளின் எண்களை அவர்களிடம் வழங்க வேண்டும். தேர்வு நேரத்தில் பராமரிப்புக்கான மின்தடை மேற்கொள்ளக் கூடாது. மாணவர்கள் படிப்பதற்கு தடையில்லாத வகையில் இரவு நேரங்களிலும் மின்தடை செய்யக் கூடாது. இவ்வாறான அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுவது தொடர்பாக நாள்தோறும் மண்டல தலைமைப் பொறியாளர்கள் தலைமையகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெருநகர் கிராமத்தில் இருந்து பூவிருந்தவல்லி வரை
புதிய அரசு பேருந்து வழித்தடம்
சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்
மதுராந்தகம், பிப்.7 பெருநகர் கிராமத்தில் இருந்து பூவிருந்தவல்லி வரை புதிய அரசு பேருந்து வழித்தடத்தை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான க.சுந்தர் தொடங்கி வைத்தார். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் கிராமத்தில் இருந்து பூவிருந்தவல்லி வரை அரசு பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளருமான க.சுந்தரிடம் கோரிக்கை மனு அளித்த இருந்தனர். அதன்படி, விழுப்புரம் கோட்டம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு பரிந்துரை செய்தார்.இதனைத் தொடர்ந்து, பெருநகர் கிராமத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக பூவிருந்தவல்லிக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பெருநகர் பேருந்து நிறுத்தத்தில் நேற்று (6.2.2025) காலை நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மேலும், ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி தலைவர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் ருத்ரகோட்டி அனைவரையும் வரவேற்றார். இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கொடியசைத்து வைத்து பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்து பயணச்சீட்டு பெற்று சிறிது தூரம் பேருந்தில் பயணம் செய்தார். இந்த பேருந்து போக்குவரத்து கிடைத்ததற்காக கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.