சென்னை, பிப்.7 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற சேவைகளுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதில் மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.
மகளிர் உரிமைத் தொகை
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் ஒன்றிய மற்றும் மாநில அரசு சார்பாக நியாய விலைக் கடைகளில் மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி, பருப்பு, பாமாயில், சக்கரை, உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 34 ஆயிரத்து 793 நியாயவிலைக்கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.இந்த நிலையில் ரேஷன் அட்டை இருந்தால் மட்டுமே மகளிர் உரிமைத் தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் புதிய ரேஷன் கார்டை பெறுவதற்காக விண்ணப்பித்துக் காத்துள்ளனர்.
ரேஷன் அட்டைக்காக
சுமார் 2.80 லட்சம் மக்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு ரேஷன் கார்டுகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் விண்ணப்பங்களானது சரிபார்க்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் ஏற்ெகனவே ரேஷன் அட்டை உள்ளவர்கள் தங்களது குடும்ப அட்டையில் புதிதாக பெயரை சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும், முகவரி மாற்றம் செய்வதற்கும், நல்லதொரு வாய்ப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மாற்றம் செய்து கொள்ளலாம்
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும். அதன்படி பிப்ரவரி 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நாளை (8ஆம் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகை
28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
சென்னை, பிப்.7 மேற்படிப்புக்கான கல்வி உதவித் தொகைக்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார்.
கல்வி உதவித் தொகை
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கான மேற்படிப்பு கல்வி உதவித்தொகை சிறுபான்மையினர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் அரசு, அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் இப்பிரிவு மாணவர்களுக்கு எவ்வித வருமான வரம்பு நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
28ஆம் தேதிக்குள்
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவர்கள் வரும் பிப்.28-ஆம் தேதிக்குள் http://umis.tn.gov.in என்ற இணையதளத்தில் நடப்பாண்டுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
கல்வி உதவித்தொகை பெற்று கல்லூரியில் 2, 3, 4-ஆம் ஆண்டு பயின்றுவரும் மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்களுக்கு சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் கல்வி பயில்வது உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
அதேபோல் கடந்த ஆண்டில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் தங்களது கல்லூரியில் ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி மேற்கண்ட இணையத்தின் மூலம் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி தெரிந்துகொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.