புதுடில்லி, பிப்.6 செயற்கை நுண்ணறிவு செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என ஒன்றிய அரசும் நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட் டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு
இதுகுறித்து நிதியமைச்சகம், ”சாட் ஜிபிடி மற்றும் டீப் சீக் போன்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ரகசியங்கள் கசிய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
சீன உருவாக்கமான ‘டீப் சீக்’ தகவல்களை சேகரித்து சீனாவுக்கு கொண்டுபோய்ச் சேர்க்கும் எனக் கருதப்படுகிறது. ஆகவே செயற்கை நுண்ணறிவு செயலிகளை பயன்படுத்த வேண்டாம்” என தரவுகளை பாதுகாக்க நிதி அமைச்சகம் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
சுற்றறிக்கை
நிதிச் செயலாளரால் அங்கீகரிக்கப்பட்ட இந்த சுற்றறிக்கை, வருவாய், பொருளாதார விவகாரங்கள், செலவினம், பொது நிறுவனங்கள் மற்றும் நிதி சேவைகள் போன்ற அரசுத் துறைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பிற அமைச்சகங்களுக்கும் இதே போன்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. எனினும், ChatGPT தயாரிப்பாளரான OpenAI-யின் தலைவர் சாம் ஆல்ட்மேன் இந்தியாவுக்கு வரவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகி உள்ளது. உள்நாட்டு செய்தி நிறுவனமான ANI பதிப்புரிமை உள்ளடக்கத்தைப் பயன்படுத்தியதாகக் கூறி கடுமையான சட்டப் போராட்டத்தைத் தூண்டிய நிலையில், ஆல்ட்மேனின் இந்திய பயணம் அமைந்துள்ளது.