இந்தியர்களை அவமதித்த அமெரிக்கா! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம்

Viduthalai
1 Min Read

புதுடில்லி, பிப்.6 அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பியதால் அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

இந்தியர்கள் அவமதிப்பு
பட்ஜெட் கூட்டத்தொடரின் அய்ந்தாவது இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மக்களவைக் கூட்டம் தொடங்கியது. அமெரிக்காவில் இருந்து 100க்கும் அதிகமானோர் நாடு கடத்தப்பட்டிருப்பது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு தீர்மான அறிவிக்கை (நோட்டீஸ்) வழங்கி இருந்தது. அதில் நமது மக்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதைத் தடுக்கவும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அவர்களின் கண்ணியத்தைக் காத்திடவும் இந்த அவை இந்த விவகாரத்தை உடனடியாக கையாள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

எதிர்க்கட்சிகள் முழக்கம்
இந்த நிலையில், அவையில் கேள்வி நேரம் தொடங்கியது. பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு ட்ரோன்களைப் பயன்படுத்துவது தொடர்பான கேள்வியுடன் மக்களவை கேள்வி நேரம் தொடங்கியது. என்றாலும் இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து 12 மணிக்கு விவாதிக்கப்படும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

அடுத்து ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தண்ணீரின் தரம் குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுதீர் கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவர்களை அமைதி காக்குமாறு மக்களவைத் தலைவர் கோரினார். மேலும் இந்த விவகாரம் மற்றொரு நாட்டின் கொள்கை தொடர்பானது என்று தெரிவித்தார். அவரது கோரிக்கையை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், ஓம் பிர்லா அவையை 12 மணி வரை ஒத்திவைத்தார். மாநிலங்களவையிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பியதால் மாநிலங்களவையும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *