புதுடில்லி, பிப். 4 மகா கும்ப மேளாவில் ஜனவரி 29-ம் தேதி நடந்த கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தது மிக மோசமானது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், உத்தரப் பிரதேச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரிய மனுவை நிராகரித்துள்ளது. மேலும், மனுதாரர் இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
பொது நல மனு
இது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறியதாவது: “மகா கும்பமேளா கூட்ட நெரிசல் ஒரு மோசமான கவலைக்குரிய சம்பவம். ஆனால் மனுதாரர் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தை நாடலாம். ஏற்கெனவே இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்ய நீதி விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மகா கும்பமேளா கூட்ட நெரிசல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் விஷால் திவாரி பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில் அவர், “யோகி ஆதித்யநாத் அரசு கும்பமேளாவில், குறிப்பாக மவுனி அமாவசையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை தடுக்கத் தவறிவிட்டது. கும்பமேளா நிர்வாகத்தில் குறைபாடுகள் உள்ளன. கும்பமேளா பக்தர்களுக்கு உதவுவதற்காக ஒரு தனி உதவி மய்யம் அமைக்க வேண்டும்.
உயர்நீதிமன்றம்
அனைத்து மாநிலங்களும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான மேலாண்மை கொள்கைகளை உருவாக்க உத்தரவிட வேண்டும். மேலும், உத்தரப் பிரதேச அரசு ஒத்துழைப்புடன் பல்வேறு மாநில மருத்துவ குழுக்களை அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.அத்துடன், “பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பக்தர்களின் உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறி முறைகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். வி்ய்பி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த வேண்டும்” என்றும் அவர் கோரியிருந்தார்.
மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோஹ்தகி, “கூட்ட நெரிசல் தொடர்பாக நீதி விசாரணை நடந்து வருகிறது. இதுபோல ஒரு மனு உயர் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, உத்தரப் பிரதேச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரிய இந்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரர் இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடுமாறும் அறிவுறுத்தியது.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்துவரும் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஹர்ஷ்குமார் தலைமையிலான மூன்று நபர் குழு விசாரணை செய்து வருகிறது. இந்தக் குழுவில், மேனாள் காவல் துறை தலைவர் வி.கே.குப்தா மற்றும் ஓய்வுபெற்ற குடிமைப் பணி அரசு அதிகாரி டி.கே.சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.