உச்சநீதிமன்றம் எழுப்பிய வினா!
புதுடில்லி, பிப்.5 தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வது ஏன் என்ற வினாவை எழுப்பியுள்ளது உச்சநீதிமன்றம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார் என்றும், இத்தகைய மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அனுப்பவும் இல்லை என்றும், அரசமைப்புச் சட்டத்தின் 200 ஆவது பிரி வுக்கு இது எதிரானது என்றும் குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முதலில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தது.
கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம்
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விகாரம் தீவிர கவலைக்குரியது என தெரிவித்திருந்தது. இந்தச் சூழலில் தமிழ்நாடு அரசு மற்றொரு ரிட் மனுவையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், தமிழ்நாடு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் நியமனங்களில் யுஜிசி தலைவரையும் சேர்க்க ஆளுநர் வலியுறுத்துகிறார் என்று தெரி விக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணையில், இந்த விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் அல்லது தீர்த்து வைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பார்திவாலா அமர்வு தெரி வித்திருந்தது. இதனையடுத்து கடந்த வாரம் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. அப்போது இவ்வழக்கு 4.2.2025 அன்று விசாரிக்கப்படும் என ஒத்திவைக்கப்பட்டது.
இந்தச் சூழலில் நேற்று (4.2.2025) காலை யில் தமிழ்நாடு அரசு தரப்பில் இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்று பிற்பகல் 3 மணிக்கு ஆளுநருக்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை நடை பெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர். .
ஆளுநர் பதவியே தேவையா?
இதன்படி அப்போது நடந்த விசாரணையின் போது. தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, ‘‘ஆளுநர் என்பவர் அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர். ஒரு பக்கம் ஆளுநர் பதவியே தேவை இல்லை என்கிற விவாதம் எல்லாம் நடைபெற்று வருகிறது என்பதையும் உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு மாநில அரசு 2 ஆவது முறையாக ஒரு மசோதாவை அனுப்பி வைத்தால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். ஆளுநரின் செயல்பாடுகளால் தமிழ்நாடு பல்கலைக் கழகங்களில் பல்வேறு பணிகள் பாதிக்கப்படுகின்றன’’ என்று அவர் தெரிவித்தார்.
அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகை யில், ‘‘ஆளுநர் – மாநில அரசு இடையேயான மோதலால் மக்களுக்குதான் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழ்நாடு ஆளுநர், அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, அரசியல் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு, ஆளுநர் அனுப்பி வைத்துவிட்ட பின்னர் என்ன நிவாரணத்தை நாங்கள் தர முடியும்? எந்தெந்த மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு, ஆளுநர் அனுப்ப முடியும்? ஆளுநர்கள் ஏன் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் அங்கு அனுப்பி வைக்கி றார்கள்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து நடந்த விவாதத்தின்போது, தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடுகையில், ‘‘மசோதா மீது ஆளுநர் முடிவெடுக்காமல் கிடப்பில் போட முடியாது. எனவே, சட்டப்பிரிவு 200 இன்படி செயல்பட நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், ‘‘ஒருவேளை மசோதா சரியாக இல்லை என ஆளுநர் கருதினால் என்ன செய்வது?’’ என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில், ‘‘அவருக்கு வேறு எந்த வழியும் இல்லை. மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துதான் ஆக வேண்டும். ஆண்டுக் கணக்கில் ஆளுநர் மசோதாவுக்கு அனுமதி அளிக்காமல் உள்ளார். “As soon as possible’’ முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை.
தன் விருப்பமாக செயல்படும் ஆளுநர்!
‘‘மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் அரச மைப்புச் சட்ட விதிகளின் கீழ், ஆளுநருக்குக் கூடுதல் வாய்ப்பு என்பது இல்லை. அவருக்கு விருப்பமான வழியில், அரசமைப்புச் சட்ட விதிகளைப் புறந்தள்ளி செயல்பட்டு வருகிறார். இதன்மூலம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றியுள்ளார்.
மசோதாவுக்கான ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக சட்டப்பேரவைக்கு கூறுகிறார். இதன் பொருள், மீண்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டப்பேரவைக்குப் போய்விட்டது என்பதுதான். இது அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல். எந்தக் காரணத்தையும் கூறா மல், மசோதாவைக் கிடப்பில் போட்டு வைப்பது – சட்ட விரோதம்! மேலும், கேசரி ஹந்த் வழக்கின் தீர்ப்பின்படி, சட்டமன்றத்தில் மறுபடியும் மசோதா இயற்றப்பட்டால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும், அதனை கிடப்பில் போடக்கூடாது’’ என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசுத் தரப்பின் வாதத்தை அன்றே முடிக்க நீதிபதிகள் அறிவுறுத்திய நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இன்று மாலைக்குள்!
இந்நிலையில், ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறார் என இன்று (5.2.2024) மாலைக்குள் தெரிவிக்க ஒன்றிய அரசின் தலைமை வழக்குரைஞருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இன்னும் 24 மணிநேரம் இருப்பதால், ஆளுநர் அரசமைப்புச் சட்டப்படி தமிழ்நாடு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடி வெடுக்க வேண்டும். வேண்டுமானால் தேநீர் விருந்துக்கு அழைத்துப் பேசுங்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கில் பரந்த நோக்கத்திலான அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.