செட்டிமார் நாட்டு மகாநாடு காரைக்குடியில் இம்மாதம் 7,8 தேதிகளில் இந்திய சட்டசபை அங்கத்தினரும் உபதலைவருமான கோவை உயர்திரு. ஆர்.கே.¬ஷண்முகம் அவர்கள் தலைமையில் நடந்தது. மகாநாட்டின் தீர்மானங்கள் பெரிதும் மிகவும் சாதாரணமான தீர்மானங்களேயாகும். ஏனெனில் செட்டிநாடு என்பது மிகுதியும் செல்வவான்கள் ஆதிக்கத்திலிருப்பதாகும். மேலும் அவர்கள் புராண மரியாதையில்மிகுதியும் ஈடுபட்ட வைதீகச் செல்வவான்கள் கூட்டத்தில் சேர்ந்தவர்களாவார்கள். அதுமாத்திரமேயல்லாமல் சமூக வாழ்வில் தங்களை வைசிய குலத்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதின் மூலம் வர்ணாசிரம தர்மத்தை ஆதரித்து ஜாதிப் பெருமை அடைகின்றவர்களுமாவார்கள்.
இந்த நிலையில் அதாவது பணத்திமிர், மதத்திமிர், ஜாதித்திமிர் ஆகிய மூன்றிலும் சூழ்ந்து மகிழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் ஆதிக்கத்தில் உள்ள அந்த நாட்டில் இந்த அளவுக்காவது தீர்மானங்கள் ஏகமனதாய் நிறைவேற்ற முடிந்ததே என்கின்ற மகிழ்ச்சியின் மீதே பலர் திருப்தி அடைகின்றார்கள். ஆனாலும் பொதுமக்கள் முன்னிலையில் இந்த மகாநாட்டை ஒரு சுய மரியாதை மகாநாடு என்று சொல்லுவதென்றால் பரிகாசத்திற்கிடமாகத் தான் இருக்கும் என்பதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.
விதவை மணம்
இம்மாதிரி பிரசாரத்திற்கே அங்கு போதிய சவுகரியமில்லாமல் எவ்வளவோ கஷ்டத்திற்கிடையில் அங்குள்ள நண்பர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வேலை செய்து வந்து காரியத்திலும் துணிவாய் இரண்டு மூன்று கலப்பு மணம், விதவை மணம் முதலியவைகள் செய்து பல பத்திரிகைகளும் துண்டுப் பிரசுரங்களும் பதினாயிரக்கணக்காய் வழங்கி கிராமம் கிராமமாய் சென்று கலகம், கலவரம் முதலியவைகளுக்கெல்லாம் தலைகொடுத்துப் போதாக் குறைக்கு போலீசார் தொல்லைக்குமாளாகி 144 உத்தரவு முதலியவைகள் எல்லாம் தாராளமாய் பெறப்பட்டு மற்றும் பல கோர்ட்டு விவகாரங்களிலும் அதாவது சிவிலிலும் கிரிமினலிலும் இழுத்து விடப்பட்ட இவ்வளவையும் சமாளித்து இவ்விதத் தொல்லைகளுக்கிடையிலேயே இந்த மகாநாடு கூட்டப்பட்டிருக்கின்றதென் றால் இதன் கஷ்டம் எவ்வளவு என்பதை வாசகர்கள் தானாகவே உணரலாம். இந்தமகாநாடு விஷயத்தில் “குமரன்” பத்திராதிபர் திரு. சோ. முருகப்பா அவர்கள் சகலத்திற்கும் துணிந்து தனது சொத்தையும் மானத்தையும் சரீரத் தையும் ஒரு துரும்பாய் நினைத்து எது எப்படியானாலும் இயக்கமே பிரதான மானது என்று எண்ணிய துணிவான எண்ணமே இவ்வளவுக்கு அந்த இடத்தில் மகாநாடு நடத்த முடிந்தது.
ஏற்றதும் முக்கியமான தென்பதும் நன்றாய் விளங்கும். அதோடு இவ்வியக்கம் அரசியல் இயக்கங்களோடு முரண்படுவதாகக் காணப்படுவதற்கும் தகுந்த சமாதானங்கள் கிடைக்கும்.
மயக்கம் தீர்க்கும் மருந்து
அன்றியும், பாமர ஜனங்கள் அரசியல்காரர் களுடையவும், அரசியல் பத்திரிகைக்காரர்களுடையவும் வார்த்தைகளையும் எழுத்துகளையும் ஆழ்ந்து யோசித்துப்பார்த்து உண்மை கண்டுபிடிப்பதற்குப் போதிய ஞான மில்லாததால் “சுயமரியாதை இயக்கம் அரசியலில் மிகவும் பிற்போக்காய் இருக்கின்றது” என்கின்ற பேச்சுக்களைக் கிளிப்பிள்ளைகள் போல சுய ஞானமின்றிச் சொல்லிக்கொண்டிருக்கின்றவர்களுக் கெல்லாம் திரு. ஷண்முகம் அவர்களின் தலைமை உரையானது ஒரு பெரிய மயக்கத்தைத் தீர்க்கும் மருந்தாக விளங்கும். அதாவது திரு.ஷண்முகம் அவர்கள் தலைமை உரை யில் காணப்படும் வாக்கியங்களாவது:-
“சுயமரியாதை இயக்கம் துவக்கப்பட்டதற்கு காரணம் இந் நாட்டு மக்களுக்கு சுயமரியாதை இல்லை” என்பதோடு, “பொது வாகவே தென் னாட்டு மக்களுக்கு சுயமரியாதை இல்லை” நமது நாட்டு மக்களின் தருமத்தின் மூலமாகவே நமது சுயமரியாதை கெடுகின்றது.
“கடவுளைப்பற்றிக் கவலை கொள்ளாதே என்பது நாஸ்திக மாகாது” “புத்த பகவானும் கடவுளைப்பற்றிக் கவலைப்படாதே” என்றுதான் சொல்லி யிருக்கிறார்.
“மக்கள் தங்களது முட்டாள் தனத்தை மாற்றி அறிவு பெறவே நேரமில்லாமல் இருக்கும்போது கடவுளைப்பற்றிய யோசனையில் ஏன் நேரத்தைப் பாழாக்கவேண்டும்?”
“செட்டிமார்களின் தரும முயற்சிகளே நமது சுய மரியாதையை பங்கப்படுத்துகின்றது”
“இந்தியாவில் வேறு எங்கும் தென்னாட்டைப் போல் இவ்வளவு சுயமரியாதையற்ற தர்மம் நடத்தப்படுவதில்லை.”
சுயமரியாதை இயக்கம்
“தென்னாட்டுக்கே சுய மரியாதை இயக்கம் மிகவும் அவசியம்.”
“மக்களைக் கோவில்களும், புராணங்களுமே அறியாமையிலும், அடிமைத்தனத்திலும் ஆழ்த்துகின்றன என்று முதல் முதல் சொன்னவர் புத்தரேயாவார்.”
“புரோகிதர் தந்திரத்தினாலும், சூழ்ச்சியினாலும் புத்தரின் உபதேசங்கள் தலையெடுக்க முடியாமல் போய்விட்டது.”
“ஆனாலும் இப்போது 10 வருஷமாக மறுபடியும் அவ் வுணர்ச்சிகள் பரவிவரத் துடங்கிவிட்டன.”
“இவ்வுணர்ச்சியை”ப் பரப்பினவர் பெரியார் ராமசாமியாரே யாவார். நான் இவ்வியக்கத்தைப்பற்றி மகாத்மா காந்தி இடத்தில் கூறினேன்.
அவர் இவ்வியக்கத்தலைவர் யாரென்று என்னைக்கேட்டார். நான் இராமசாமிப்பெரியார் என்று சொன்னேன். உடனே அவர் அப்படியாகத் தான் இருக்கமுடியும் என்று தானும் நினைத் தாகக் கூறினார்.
இராமசாமியார் சுயமரியாதை இயக்கத்தை ஏன் ஆரம்பித்தார் என்ற பிரச்சினை வந்தபோது, பக்கத்தில் இருந்த ஒரு நண்பர் திரு. ராமசாமி காங்கிரசில் இருக்கும் போதே அவருக்கு இந்த உணர்ச்சி உண்டு என்று சொன்னார்.
இது முற்றிலும் உண்மை, ஏனெனில் அவர் நீண்ட நாளாகவே பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி உடையவர் என்று நான் அறிவேன்.”
“விடுதலைபெற்ற நாடுகள் எல்லாம் சுயமரியாதை இயக்கத்தால் தான் விடுதலை பெற்றிருக்கின்றது.”
சமூக சீர்திருத்தம்
“மேல்நாட்டில் முதலாவது சுயமரியாதை இயக்கம் இது போலவே சமுதாய சீர்திருத்தமாகத் தோன்றிற்று. அதாவது கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் தொல்லை பொறுக்கமாட்டாமல் மார்ட்டின் லூதர் என்னும் பெரியார் ஓர் இயக்கத்தை தோற்று வித்தார்.”
“பிறகு இரண்டாவதாக பிரான்சில் அரசியல் கிளர்ச்சி யாகத் தோன்றியது. அதிலும் நமது கொள்கைகளே சிறந்து விளங்கின.”
“மூன்றாவதாக ருஷியாவில் சுயமரியாதை இயக்கம் ஆரம் பித்து அது சமதர்ம இயக்கமாக மாறியது.”
“இவ்வாறு இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, ருஷியா முதலிய நாடுகளில் ஏற்பாடாகிய கிளர்ச்சிகளை ஆராய்ந்து பார்த்தால் அவற் றின் மூலாதாரம் நமது சுயமரியாதை இயக்க கொள்கைகளே தான் என்பது புலப்படும்”
“மதநூல்கள் யாவும் மனிதனுடைய சுயமரியாதைக்கு முர ணானவைகள்.”
“ஜாதிபேதம் அழிவதால் போய்விடும் மதமும், எல்லா மக்களும் சரிசமானம் என்பதால் போய்விடும் கடவுளும் ஒழிவதாயிருந்தால் அதற்கு நாங்கள் (சுயமரியாதைக் காரர்கள்) ஜவாப்பு தாரிகள் அல்ல.”
மதவாதிகளே
“சமத்துவம் விரும்பும் நாம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்பது பலர் குற்றமென்கிறார்கள். அதற்கு சமாதானம் சொல்ல ஆரம்பித்தால் மேல் நாட்டு பழக்கவழக்கங்களை காட்டி அங்கு வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் இல்லை என்கிறார்கள். மேல்நாடுகளில் கீழ்மேல் ஜாதி வித்தியாசமிருக்கின்றதா என்றால் தலைகுனிந்து முணுமுணுகின்றார்கள்.”
“இந்து மதத்தில் பெண்களுக்கு தகப்பன் சொத்தில் பாத்தியமில்லை. இப்படிச் சொல்லுகின்றவர்கள் மதவாதிகளே யாகும்.”
“தான் பெற்ற பெண்ணிற்கு சொத்தில்லாமல் எவனோ ஒருவ னுக்கு பிண்டம் போடுவதற்காக என்று சொத்துக்களை கொடுத்துவிட வேண்டுமாம். நமது சொத்துக்கு இருக்கும் பாத்திய தையைப் பாருங்கள்.”
“இந்தமாதிரியாக மதம் பிண்டத்தோடு முடிவதாக யிருந்தால் மதம் அவசியமா என்று கேட்கின்றேன்.”
“மகாத்மாவின் ( காங்கிரசின் ) 20 திட்டங்களில் ஒன்று இந்த வைதீக மதத்தைக் காப்பதற்கே அமைத்த தாகும்”
“இதற்கு பெயர்தான் மத நடுநிலைமையாகும்.”
“இந்த மத நடுநிலைமையைத்தான் நாம் இன்று அழிக்க வேண்டும் என்கின்றோம்.”
“மத நடுநிலைமையுள்ள சுயராஜியம் கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் பலன் ஒன்றே யாகும்.”
மத நடு நிலைமை
“லண்டன் மகாநாட்டில் மத நடு நிலைமைதான் தலை விரித்தாடும்.”
“நான் “ஜாதிபேத மிருக்ககூடாது” “பொட்டுக்கட்டக் கூடாது” என்பதான இரண்டு தீர்மானங்கள் கொண்டு வந்திருக்கின்றேன்.”
“மகாத்மா கூறும் சுயராஜியம் வந்தால் எனது மசோதாக்கள் ஒரு சிலராலேயே தூக்கி எறிந்து விடப்படலாம்.”
“சாதாரணமாய் 10 வருஷங்களில் ஏற்படவேண்டிய சீர்திருத் தங்கள் ஆங்கில அரசாங்கத்தில் மத நடுநிலை மையாலேயே 150 வருஷங்களாகியும் இன்னும் ஏற்பட வில்லை.”
“மதநடு நிலைமை வகிக்கும் அரசாங்கமும், சுயராஜியமும் ஒழிந்தால் அல்லது நமக்கு உண்மை விடுதலை வரப் போவ தில்லை.”
“மதநடு நிலைமை ஒழிக்கப்படாத சுயராஜியம் நமக்கு வேண்டவே வேண்டாம். அது நமக்கு மிகவும் ஆபத்தானதாகும்.”
“சுயராஜியத்திற்குமுன் நமது சுயமரியாதையையும், சக்தியையும் பெருக்கிக்கொள்ள வேண்டும்.”
முடிவுரையில் கூறியதாவது :-
“நமது தீர்மானங்களைப் பார்த்தவர்கள் இவற்றுள் எதையாவது குற்றம் சொல்ல இடமுண்டானால் தைரியமாகச் சொல்ல முன்வரட்டும்.”
அறிவுடைமையாகுமா?
“குழந்தைகள் பட்டினியால்வாட, கல் விக்கிரகத்தின் தலையில் பால் ஊற்றுவது அறிவுடைமையாகுமா?”
“வேறு எந்தத் தீர்மானத்தையாவது செய்து, ஆஸ்திகர் என்று பெயர் வாங்குவதைவிட, இத்தீர்மானங்கள் செய்து நாஸ்திகர் என்று பெயர் வாங்குவதே மேலானது.”
“எந்தக் கட்சியின் உதவியும் நமக்குக் கிடைக்கு மென்று எதிர் பார்க்கக்கூடாது.”
“காங்கிரசோ,ஜஸ்டிஸ் கட்சியோ மற்ற எதுவும் நமதியக்கத்திற்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்க வேண்டியதில்லை.”
“எகிப்து, அயர்லாந்து, ருஷியா, துருக்கி, சீனா முதலிய நாடுகள் 25 வருஷத்திற்கு முன்பே சுயமரியாதை இயக்கம் துவங்கிவிட்டது.”
“நாம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கின்றோம்.”
“வாலிப உலகம்தான் அந்நாடுகளில் வெற்றியை அளித்தது” என்று பேசினார்.
இதைப்பற்றி வாசகர்களை ஒன்று கேட்கிறோம். அதாவது,
சென்ற வாரம் குறிப்பிட்ட தூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டுத் தலைவர் திரு. எஸ். இராமநாதன் அவர்கள் பிரசங்கத்தையும் இவ்வாரம் குறிப்பிட்டிருக்கும் செட்டியார் நாட்டு சுயமரியாதை மகாநாட்டுத் தலைவர் ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் பிரசங்கத்தையும் படித்துப்பார்த்தபின் இதைப்பற்றி யார் என்ன ஆட்சேபனை சொல்லக்கூடும் என்பதே நமது கேள்வி.
அனுமதிக்க முடியாது
அரசியலைப் பற்றியும், மத இயலைப்பற்றியும் இருவரும் சொல்லி யுள்ளவைகள் தான் சுயமரியாதை இயக்கத்தின் மத இயல் அரசியல் சம்பந் தமான ஜீவநாடிகளாகும். எவ்வித தேசீய வாதியும், மதவாதியும் இந்தத் தத்துவத்திற்கு வந்தால்தான் இந்தியாவில் தேசீயமோ, மதமோ இருக்க முடியுமே அல்லாமல் மற்றபடி அதுவரையில் ஒரு காரியமும் நடைபெற சுயமரியாதை இயக்கம் அனுமதிக்கப் போவதில்லை என்பது மாத்திரம் உறுதி. மறுப்பு வேலையிலும், நாச வேலையிலுமே அது இறங்கி, முடியா விட்டால் தானே முடிவு பெற்றுவிடுமேயொழிய ராஜி என்பதோ, பின்னால் போவ தென்பதோ அதனிடம் யாரும் எதிர்பார்க்க முடியாது.
போதாக்குறைக்கு சென்னையில் இந்த வாரம் அதாவது 11ஆம் தேதி பச்சையப்பன் மண்டபத்தில் கூடிய மாதசம்பளக்கார சிப்பந்திகள் மகா நாட்டில் ( தொழிலாளர் மகாநாட்டில் ) தலைமை வகித்த பம்பாய் மாகாணப் பிரமுகர் திரு.ஜம்நாதாஸ்மேதா அவர்களின் தலைமை உபன்யாசத்தில் குறிப்பிட்டிருக்கும் இரண்டொரு வசனங்களையும் இங்கு குறிப்பிடு கின்றோம். அதாவது, ( சுதேசமித்திரனில் காண்கிறபடி )
“பணக்காரர்கள் தாங்களாக தங்களிடம் சேர்ந்திருக்கும் பணக்குவி யலை கொடுக்கச் சம்மதிக்க மாட்டார்கள். அவர்களுக்கு சொத்து சேர்ந்த விதம் பலாத்காரமாய் படையெடுத்து நிலங்களை வலுவில் பிடுங்கிக் கொண்டு அவர்களிடம் வாடகை ( குத்தகை ) என்று வசூலிக்கப்பட்டதால் சொத்துக்கள் குவியலாய்க் குவிந்து விட்டது.”………
“இவ்விதம் நிலச்சொந்தம் கொண்டாடுவதால் அவர்கள் (நிலச் சுவான்தார்கள்) ஒரு வேலையும் செய்யாமல் ஏராளமாய் பணம் சேர்த்துக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு மேலும் கூறுவ தாவது,
“மக்களுக்கு சாசுவதமான நன்மை ஏற்படவேண்டு மானால் பின் வரும் மூன்று முறைகளில் ஒன்றைக் கையாளவேண்டும்.”
பார்ப்பனீயம் ஒழிந்தால்
1.”சோவியத் ருஷியாவில் செய்ததைப்போல நிலச் சுவான்தாரர் களிடமிருந்து பலாத்காரமாகச் சொத்தை கொடுக்குமாறு செய்வது.
2. படிப்படியாக அபேதவாத (சமதர்ம) கொள்கை களைக் கையாளுவது.
3. தற்கால அமைப்பை மாற்றாமல் பெரிய பணக்காரர்களுக்கு அதிக வரியைப்போட்டு, அந்த வருமானத்தைக்கொண்டு கல்வி வசதி, முனிசிபல் சவுகரியம், பிரசவ உதவி, வயோதிகர்களுக்கு உபகாரச் சம்பளம் முதலியன கொடுப்பது.”
ஆட்சிக்கும் பார்ப்பனீயம் உதவி புரியவில்லை என்று யோசித்துப் பாருங்கள். இந்தியாவில் பார்ப்பனீயம் வெகு நாளைக்கு முன்பே ஒழிந்திருக்குமானால் பிரிட்டிஷ் இருந்த இடம் தெரியாமல் உலகத்தில் மறைந்திருக்கும். ஆகையால்தான் சுயமரியாதை இயக்கம். இப்போது பார்ப் பனீயத்திடமும், பிரபுத்தன்மையிடமும் வேலை செய்ய வேண்டுமென்கிறது. பிரபுத்தன்மை (முதலாளித் தன்மை) ஒழியும்போது யாருடைய முயற்சியு மில்லாமல் பிரிட்டிஷ் ஆதிக்கம் விகிதாச்சாரம் ஒழிந்து தான் தீரும். அல்லது பார்ப்பனீயத்தீற்கும் பிரபுத்தன்மைக்கும் விரோதமாய் வேலைசெய்யும் போது பிரிட்டிஷ் ஆதிக்கம் குறுக்கிட்டால் அதை யும் சேர்த்து அழிக்கத்தான் சுயமரியாதை இயக்கம் வேலை செய்யும். ஆகவே உண்மை விடுதலைக்கு மார்க்கம் தேடுவதை விட்டுவிட்டு போலிக் கூச்சல் போடும் வேலையில் சுயமரியாதை இயக்கம் ஒருநாளும் இறங்காது என்பதை வாசகர்கள் உணர்வார்களாக.
– குடி அரசு – தலையங்கம் – 19.04.1931
செட்டிமார் நாட்டு முதலாவது சுயமரியாதை மகாநாட்டில்…
சகோதரிகளே! சகோதரர்களே!!
நான் திரு. சண்முகம் அவர்களைப் பற்றிப் பேசுவது எனக்கே கொஞ்சம் சங்கடமாகத்தானிருக்கின்றது. ஏனெனில், அவர் எனது ஜில்லாக் காரர். அத்தோடு, இவ்வியக்கத்தில் ஈடுபட்டு, ஒத்துழைக்கும் எனது நண்பரும் ஆவார். அப்படிப்பட்ட ஒருவருடைய பெருமையைப்பற்றி எடுத்துச் சொல்ல ஏற்பட்டது எனக்கும் சங்கடமான நிலைமை, எனது நண்பருக்கும் சங்கடமான நிலைமை ஏற்பட்டது தானென்று சொல்ல வேண்டும். ஆனபோதிலும், கடமையைச் செலுத்த வேண்டிய அவசியம் நேர்ந்த காலத்தில் சொந்த அசவுகரி யத்தை உத்தேசித்து நழுவிக்கொள்ளப் பார்ப்பது நியாயமாகாது.
ஆகவே, சில வார்த்தைகள் சொல்ல வேண்டியவனாக யிருக்கின்றேன். ஏனெனில் இந்த நாட்டில், சுயமரியாதை பிரசாரம் நடை பெறக்கூடாதென்றும், இந்த மகாநாடு இங்கு நடத்தப்படக் கூடாதென்றும், பல சிவநேயர்களும், பண நேயர்களும் பெரிய முயற்சிகள் எடுத்து, எவ்வளவோ சூழ்ச்சிகளும் கஷ்டங்களும் செய்து பார்த்தார்களாம்.
ஒன்றும் பயன்படாமல்போய், பிரசாரமும் தாராளமாய் நடைபெற்று, மகாநாடும் இவ்வளவு ஆடம்பரத்தோடு இத்தனை ஆயிர ஜனங்களுடைய ஆதர வோடு ஆண் -பெண், மேல் ஜாதி – கீழ் ஜாதி, பணக் காரன்-ஏழை என்கின்ற பாகுபாடும், வித்தியாசமுமில்லாமல் நடைபெறுவதை பார்த்தவுடன், மேற்படி பணநேயர்கள் “யாரோ சில காலிகள் வந்து கூட்டம் போட்டு, கத்திவிட்டுப் போகின்றார்”களெனவும், சிவநேயர்கள் “ யாரோ சில அறிவற்ற பாமரமக்கள் வந்து கூப்பாடு போடுகின்றார்” களெனவும், அதைப் பற்றி யாரும் கவனிக்கப்படா தெனவும் சொல்லிக்கொண்டு, இளைப்பாரு வதாகக் கேள்விப்பட்டேன்.
ஆதலால்தான், இந்தக் கூட்டத்தில் வந்திருக்கும் காலிகளும் அறிவற்ற பாமர மக்களுக்கும் யார் யார் என்பதை தெரிவிப்ப தற்காகவும், இதிலிருந்து இந்தப்படி சொன்னவர்கள் யாராயிருக்கக் கூடுமென் பதை உங்களையே யூகித்து அறிந்து கொள்ளச் செய்வதற்காகவும் சில வார்த்தைகள் பேசுகின்றேன். திரு. சண்முகம் அவர்கள் ஒரு பணக்காரரும், இயந்திர சாலை முதலாளியும், நிர்வாகியுமாவார். அவர் பி.ஏ.பி.எல். பட்டம் பெற்ற படிப்பாளியாவார், நான்கு ஜில்லாக்களுக்கு பிரதிநிதியாக இந்திய சட்டசபை அங்கத்தினருமாவார். அது மாத்திரமல்லாமல், இந்தியாவின் பிரதிநிதிகள் அடங்கிய இந்திய சட்டசபைக்கு உபத்தலைவருமாவார்.
உயர் திரு. காந்தி முதலியவர்கள் செல்லும் வட்ட மேஜை மகாநாட்டிற்கு இந்திய பிரதிநிதியாக செல்ல தெரிந்தெடுக்கப் பட்டவருமாவார். தமிழ்நாட்டிலிருந்து எப்பொழுதும் திரு.அய்யங்கார்களே இந்திய சட்டசபைக்குச் செல்வதாகயிருந்த வழக்கத்தை, இவர் ஒருவர்தான் மீறி, அங்கு போன வரும், மற்றவர்களையும் ஒவ்வொரு அய்யங்கார்களாக ஒழித்துக் கொண்டு வரும்படியாக ஏற்பாடும் செய்தவருமாவார். திரு.ஷண்முகம் அவர்கள் பள்ளியில் படிக்கும் பொழுது முதலே, நல்ல அறிவாளியென்றும், பேச்சாளியென்றும் தங்கப் பதக்கமும், போட்டிப்பரிசு வெற்றி பத்திரமும் பெற்றவர்.
அவர் வக்கீல் தொழிலிலும் பிரபலமும் சாமார்த்தியமும் பொருந்தியவர். மாதம் 3000 ரூபாய் சம்பளமுள்ள சர்க்கார் உத்தியோகம் கிடைக்க விருந்ததை வேண்டாமென்று சொன்னவர். இவைகள் மாத்திரமல்லாமல் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை காங்கிரஸ் ஒப்புக்கொள்ளா விட்டால் தான் காங்கிரசில் இருக்க மாட்டே னெனவும் சொன்னவர். அன்றியும், சுயமரியாதை இயக்கம், நாஸ்தீக இயக்க மல்லவென்று எங்கும் பேசி, வெற்றிபெற்று வருபவர். ஆகவே, இப்படிப்பட்ட பிரமுகர்கள் கலந்து, தலைமை வகித்து நடத்தப்படும் இந்த மகாநாடு யாரோ இரண்டுகாலிகள் வந்து பேசிவிட்டு போனதாகுமா யென்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றுதான் இதைச்சொன்னேன்.
மற்றும், சுயமரியாதைச் சங்கத் தலைவராகிய டபுள்யூ.பி.ஏ சவுந்திர பாண்டியன் அவர்களும், மற்றும் அவர்போன்ற இரண்டொரு கனவான்களும் இதில் கலந்து உழைப் பதையும் நீங்கள் பார்க்கின்றபோது, இந்த ஊரிலுள்ள காலிகளில்லாத பணக்காரர்களென்பவர்களுக்கு இவர்கள் எந்த விதத்திலாவது சிறிதும், இளைத்தவர்கள் அல்லவென்பது உங்களுக்கு நன்றாய்த்தெரியும். அறிவு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் இந்தப்பக்கத் திலுள்ள, எந்தப்பெரிய ஆள் என்பவரின் அறிவிற்கும், சுயமரியாதை இயக்கத்திலுள்ள எந்த சாதாரண ஆளின் அறிவும் குறைந்ததல்ல வென்பதை நீங்கள் நன்றாக இதுவரை உணர்ந்திருப்பீர்கள்.
ஏதோ, இந்தப் பக்கங்களிலுள்ள சில அதிகாரிகளை தங்களுடைய பணச் செருக்கினால் சுவாதீனப்படுத்திக் கொண்டிருக்கின்றோம் என்கின்ற ஆணவத்தால், சில்லரைத் தொல்லைகள் விளைவிக்கின்ற ஒரு காரியத்தைத் தவிர வேறு எந்த விதத்திலும், இந்த மகாநாடுகள் பாதிக்கப்படகூடியதல்ல. ஆகையால், இச்சிறு உரைகளோடு திரு. ஷண்முகம் அவர்களை இம் மகாநாட்டின் தலைமை வகித்து, நடத்திக் கொடுக்கும் படியாக் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
குறிப்பு: காரைக்குடியில் 07.04.1931 அன்று நடைபெற்ற செட்டிமார் நாட்டு முதலாவது சுயமரியாதை மாநாட்டில் தலைவரை முன்மொழிந்து ஆற்றிய உரை.
குடி அரசு – சொற்பொழிவு – 19.04.1931