விண்வெளியில் உணவுப் பயிர்களை வளர்க்க இஸ்ரோ திட்டம்

viduthalai
2 Min Read

பெங்களூரு, பிப்.4- உணவுப் பயிர்களை விண்வெளியில் வளர்க்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறினர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத் திற்காக இந்திய விமானப் படையைச் சேர்ந்த 4 பேரை தேர்வு செய்து பயிற்சி அளித்து வருகிறது.

இந்த நிலையில், தேர்வு செய்யப்பட்டவர்களில் சுபன்ஷூ சுக்லா என்ற விண்வெளி வீரர் (ககன்யாத்ரி) அமெரிக்கா புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மய்யத்திலிருந்து பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு ‘ஆக்சியம்-4’ திட்டம் மூலம் ‘ஸ்பேஸ்எக்ஸ் டிராகன்’ விண்கலம் மூலம் வருகிற மார்ச் முதல் ஜூன் மாதத்திற்குள் செல்ல உள்ளார்.

பன்னாட்டுக் குழு

இவருடன், பன்னாட்டு திட்டத்தில் போலந்தைச் சேர்ந்த அய்ரோப்பிய விண்வெளி நிறுவனம் (இ.எஸ்.ஏ.) திட்ட விண்வெளி வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி, அங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு, அமெரிக்காவின் மிகவும் அனுபவம் வாய்ந்த மேனாள் நாசா விண்வெளி வீரர் பெக்கி விட்சன் தலைமையில் திட்ட நிபுணர்களாக 4 பேர் கொண்ட குழு செல்கிறது.

கடந்த மாதம், இஸ்ரோவும், அய்ரோப்பிய விண்வெளி நிறுவனமும் விண்வெளி வீரர் பயிற்சி, திட்ட செயல்படுத்தல் மற்றும் ஆராய்ச்சி சோதனைகளில் ஒத்துழைக்க ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் கூட்டு சோதனைகளை நடத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

ஆக்சியம்-4 திட்டத்தின்போது, இஸ்ரோவும், அய்ரோப்பிய விண்வெளி நிறுவனமும் இந்திய விஞ்ஞானிகளுக்கான 2 உயிரியல் சோதனைகளில் ஒத்துழைக்கும்.

இணைந்த செயல்பாடு

இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் திருவனந்தபுரம் வெள்ளாயணி வேளாண்மை கல்லூரி ஆகியவை இணைந்து உணவுப் பயிர்கள் நுண் ஈர்ப்பு விசை சூழலில் வளர்க்கப்படும்போது அவற்றின் மகசூல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? என்பதை மதிப்பீடு செய்கின்றன.

ஆய்வுகள்

குறிப்பாக, கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி சிறீஅரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-30 ராக்கெட்டில் ஸ்பேடெக்ஸ் செயற்கைகோளுடன், பிஎஸ்-4 ஆர்பிடல் எக்ஸ்பிரிமென்ட் மாட்யூலில் (போயம்-4) மூலம் 24 பேலோடு கருவிகள் கொண்டு செல்லப்பட்டன.

அதில் தட்டைப்பயறு விதைகள் கொண்டு செல்லப்பட்டன. புவிவட்ட சுற்றுப்பாதையில் செயல்பட்ட கருவிகளில் இருந்த தட்டைப்பயறு முளைத்துள்ளது. இதனை இஸ்ரோ முறைப்படி அறிவித்தது.

இதனை தொடர்ந்து, ஆக்சியம்-4 திட்டத்திலும் உணவுப் பயிர்களை விண்வெளியில் வளர்க்க இஸ்ரோ, அய்ரோப்பிய விண்வெளி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் புவி சுற்றுப்பாதையின் நுண் ஈர்ப்பு விசை சூழலில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்ள இஸ்ரோ மற்றும் அய்ரோப்பிய விண்வெளி நிறுவனம் இணைந்து செயல்படுகின்றன என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *