ஜனநாயகம், சமூகநீதி, மதச்சார்பின்மைக்கு சவால்கள் ஏற்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில் அண்ணாவின் அறைகூவல்கள் மிகவும் தேவை!

Viduthalai
2 Min Read

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

சென்னை, பிப்.3 – ஜனநாயகம், சமூகநீதி, மதச்சார்பின்மைக்கு அறைகூவல்கள் ஏற்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில், அண்ணாவின் அறைகூவல்களும், தொலைநோக்குச் சிந்தனைகளும் மிகவும் தேவை என்று செய்தியாளர்களிடம் கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
அறிஞர் அண்ணாவின் 56 ஆம் ஆண்டு நினைவு நாளாகிய இன்று (3.2.2025) அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:
பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
1962 ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் மாநிலங்களவையில் முழங்கி, ‘‘திராவிடப் பாரம்பரியத்திலிருந்து வந்திருக்கின்ற நாங்கள்’’ என்று தொடங்கி, ‘‘மாநில உரிமைகளையும், திராவிட சமுதாயத்தினுடைய கலை, பண்பாடு, நாகரிகம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும்; போற்றப்படவேண்டும்; பாதுகாக்கப்படவேண்டும்’’ என்று சொன்னார்களே, அதே நிலை இன்றைக்கும் தொடர்கிறது!
அறிஞர் அண்ணா அவர்களுடைய முயற்சி, முன்னோட்டம்!
இன்னுங்கேட்டால், முன்பு இருந்த தைவிட, அதிகமான அளவிற்கு ஜனநாயகத்திற்கும், சமூகநீதி, மதச்சார்பின்மைக்கும் அறைகூவல்களும், அரசமைப்புச் சட்டத்தை முழுக்க முழுக்க ஒன்றுமில்லாமல் ஆக்கப்படக்கூடிய சூழலும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் காலகட்டத்தில், மேலும் அறிஞர் அண்ணா அவர்களுடைய முயற்சி என்பது, அவர்களுடைய முன்னோட்டம் என்பது இன்றைக்கும் எவ்வளவு சரியானது என்பதைக் காட்டுகிறது.

ஆட்சிகள் காட்சிகளுக்கு அல்ல;
இனத்தின் மீட்சிகளுக்கு…
தந்தை பெரியார் அவர்களால் ஆளாக்கப்பட்டு, மிகப்பெரிய அளவிற்கு அடித்தளத்தை ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு அமைத்தவர் பேரறிஞர் அண்ணா. அதற்குப் பிறகு, இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அது தொடர்ச்சியாக வருகிறது என்று சொன்னால், ஆட்சிகள் காட்சிகளுக்கு அல்ல; மீட்சிகளுக்கு, இனத்தின் மீட்சிகளுக்கு என்பதை ஒவ்வொரு நாளும் நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே, அப்படிப்பட்ட ஓர் அருமை யான சூழலை, இன்றைக்கு மீண்டும் உருவாக்கி, யாரிடமிருந்து நம்மினத்தைப் பாதுகாக்கப்பட வேண்டுமோ, அந்த ஆரிய மாயையை மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களுக்குப் புரிய வைக்கவேண்டும்.
‘ஆரிய மாயை’ என்பது ‘‘கூலி களை ஏவுவார்கள்; புதிய புதிய வித்தைகளை காட்டுவார்கள். எனவே, அவற்றையெல்லாம் எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும்’’ என்று அண்ணா அவர்கள், தந்தை பெரியாரிடத்தில் கற்ற பாசறை பாடத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
‘‘அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்கிறார்!’’ என்பதுதான் தந்தை பெரியார் அன்றைக்கு எழுதிய ஒரு செய்தி!

அண்ணா சிலை அல்ல, சீலம்!
படம் அல்ல, பாடம்!
அதற்கு என்ன பொருள் என்றால், ‘‘அண்ணா என்ற தனி மனிதருக்கு வேண்டுமானால் மறைவு இருக்கலாம். நான் உருவாக்கிய கொள்கைகள், அதனை அண்ணா செயல்படுத்திய முறைகள் எல்லாம் என்றைக்கும் தொடரும்’’ என்பதுதான்.
அதுதான் இன்றைக்கும் தேவைப்படு கிறது.
எனவே, அண்ணா சிலை அல்ல, சீலம்! படம் அல்ல, பாடம்!
பைத்தியக்காரர்களுக்கு நாங்கள் எப்போதும்
பதில் சொல்வதில்லை!

செய்தியாளர்: தமிழ்நாடு பெரியார் மண் அல்ல; பெரியாரே ஒரு மண்தான் என்று சீமான் சொல்லியிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: பைத்தியக்காரர்களுக்கு நாங்கள் எப்போதும் பதில் சொல்வதில்லை.
மனிதர்களுக்கும், பகுத்தறிவா ளர்களுக்கு மட்டுமே பதில் சொல்லி பழக்கப்பட்ட நாங்கள், இத்தகைய வெறிபிடித்தவர்களுக்குப் பதில் சொல்லி, கீழிறங்க விரும்பவில்லை.
– இவ்வாறு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *