கோவை, பிப். 3- ஒன்றிய அரசின் கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், ஏற்கனவே கடன் வாங்கியவர்களுக்கே தொடர்ந்து கடன் வழங்கு வதாகவும், முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு, வங்கிக் கடன் கிடைப்பதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.
குறு, சிறு தொழில்களை துவக்க குறைந்த முதலீடு தேவைப்படுகிறது. இதனால், பலரும் அந்த தொழில்களை துவக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
வங்கிகள் கடன் வழங்கும் நபர் களிடம் இருந்து, சொத்து ஆவணங் களை பிணையாக பெறுகின்றன. இதனால், புதிதாக தொழில் துவங்குவோர், வங்கிகளில் கடன் வாங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சிக்கல்
ஒன்றிய அரசு, கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், புதிய தொழில் மற்றும் விரிவாக்கத்திற்கு, எவ்வித பிணையும் இல்லாமல், 5 கோடி ரூபாய் வரை கடன் வழங்க, பொதுத்துறை வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதை பல வங்கிகள் பின்பற்றுவதில்லை என, தொழில்முனைவோர் கூறுகின்றனர்.
இதனால், முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, ‘டான்ஸ்டியா’ எனப்படும் சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க பொதுச் செயலர் வாசுதேவன் கூறியதாவது:
முதல் தலைமுறை
சொத்து பின்புலம் இல்லாமல், முதல் தலைமுறையை சேர்ந்தவர்கள் தொழில் துவங்குவதற்கு கடன் வழங்க, கடன் உத்தரவாத திட்டம் உள்ளது. ஆனால், பொதுத்துறை வங்கிகள், புதியவர்களுக்கு கடன் வழங்காமல், ஏற்கனவே கடன் வாங்கியவர்களுக்கு மட்டும் தொடர்ந்து கடன் வழங்கு கின்றன.
எனவே, ரிசர்வ் வங்கி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பொதுத்துறை வங்கிகளிடம், கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் எத்தனை பேருக்கு கடன் வழங்கப்பட்டது, அதில் எத்தனை பேர் புதியவர்கள் உள்ளிட்ட விபரங்களை கேட்க வேண்டும்.
மேலும், கடன் உத்தரவாத திட்டம் சரியான முறையில் பின்பற் றப்படுகிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
பெரிய தொழில் நிறுவனங்கள், கடன் வாங்கிய வங்கி மட்டுமின்றி, வேறு எத்தனை வங்கிகளிலும் நடப்பு கணக்கு வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடன் வாங்கிய வங்கியை தவிர, வேறு எந்த வங்கியிலும் நடப்பு கணக்கு துவக்க அனுமதிப்பது இல்லை.
இதனால், ஒன்றிய, மாநில அரசுகளின், ‘ஒப்பந்தக் கோரலில்’ பங்கேற்க பணம் செலுத்துவது, பி.எப்., செலுத்துவது போன்றவற்றில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, சிறு தொழில் நிறுவனங்களும் கடன் வாங்கிய வங்கி தவிர, வேறு வங்கிகளிலும் நடப்பு கணக்கு துவக்க, ரிசர்வ் வங்கி அனுமதி வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.