சென்னை மாதவரத்தில் 200 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாம் 8ஆம் தேதி நடக்கிறது

viduthalai
1 Min Read

சென்னை,பிப்.3- சென்னை மாதவரத்தில் வரும் பிப்.8ஆம் தேதி நடைபெறவுள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் முகாமை தொடங்கி வைக்கிறார்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கி வரும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், சென்னை மாதவரம் புனித அன்னாள் கலை மற்றும் கல்லூரியில் கடந்த டிச.14ஆம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தொடர் மழையின் காரணமாக அந்த வேலைவாய்ப்பு முகாம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மாதவரம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப்.8ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்தப்படும் இந்த முகாமை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைக்கிறார். இதில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

மேலும் 20 ஆயிரத்துக்கும் மேலான காலிப்பணியிடங்களுக்கு ஆள் தேர்வு நடத்தப்பட வுள்ளன. முகாமில் 8 முதல் 12ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், அய்டிஅய், தொழிற்கல்வி, பொறியியல் பட்டம் பெற்றவர்கள், கணினி, தையல் கற்றவர்கள் என தகுதியுள்ள நபர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.

அனுமதி இலவசம்

இத்துடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு, மாவட்ட தொழில் மய்யத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், வங்கி கடன் பெறுவது குறித்த வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.
ஆர்வமுள்ள இளைஞர்கள் https://forms.gle/qsZbxrrSn547L9ep7 என்ற தளத்தில் தங்களது விவரங்களை பதிவுசெய்து பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *