ரூ.12 லட்சத்திற்கு மேல் ஒரு ரூபாய் வருவாய் அதிகரித்தாலும்
ரூபாய் 60,000 வரி விதிக்கப்படும்
புதிய பட்ஜெட்டில் வருமான வரி குறித்த தகவல்கள் வருமாறு:
ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை!: நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில், புதிய வருமான வரி கட்டமைப்பின் கீழ் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் மொத்த வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி இல்லை. அதாவது, மூலதன ஆதாயங்கள் போன்ற சிறப்பு விகித வருமானத்தைத் தவிர மாதத்துக்கு சராசரி வருமானம் ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. அத்துடன், நிலையான கழிவுத் தொகை ரூ.75,000 அளிக்கப்படுவதன் காரணமாக ரூ.12.75 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை என்று 2025ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
புதிய வருமான வரிவிதிப்பு முறைப்படி ரூ.12,75,000-க்கு மேல் கூடுதல் வருவாய் ஈட்டுவோர் செலுத்த வேண்டிய வரி விகிதம் இது:
ரூ.4 லட்சம் வரை – வரி இல்லை
ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை – 5%
ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 10%
ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை – 15%
ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை – 20%
ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை – 25%
ரூ.24 லட்சத்துக்கு மேல் 30%
புதிய முறையின் கீழ் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
வாடகை மீதான டிடிஎஸ் வரம்பு உயர்வு
மூத்த குடிமக்களுக்கான வட்டி மீதான வரி விலக்குக்கான வரம்பு தற்போதைய ரூ.50,000இல் இருந்து ரூ. 1 லட்சமாக இரட்டிப்பாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல், வாடகை மீதான டிடிஎஸ்-க்கான ஆண்டு வரம்பு ரூ.2.40 லட்சமாக இருப்பதை ரூ. 6 லட்சமாக உயர்த்தும் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
பீகார் பட்ஜெட்
ஒன்றிய பட்ஜெட் -, “இது இந்திய அரசின் பட்ஜெட்டா அல்லது பீகார் அரசின் பட்ஜெட்டா என்ற கேள்வி எழுகிறது” என்று காங்கிரஸ் காட்டமாக விமர்சித்துள்ளது.
“நாட்டில் வேலையின்மை என்பது நமது பொருளாதாரம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய நெருக்கடி. அதைப் பற்றி நிதி அமைச்சர் பேசவே இல்லை. உங்களுக்கு ஊதியம் இருக்கிறது; நீங்கள் குறைவாக வரி செலுத்தலாம். ஆனால் ஊதியம் இல்லாதவர்களின் நிலை என்ன? அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் இல்லை” என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு சிறப்புத் திட்டங்கள் எதுவுமே இல்லை என்று தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
விலை குறையும், உயரும் பொருட்கள்
ஒன்றிய பட்ஜெட்டின் வரி விதிப்பு மாற்றங்களின் எதிரொயால் புற்றுநோய் மருந்துகள், அலைபேசி, சார்ஜர், எல்இடி/எல்சிடி, இறக்குமதி தங்கம், வெள்ளி பிளாட்டினம், கடல் உணவுப் பொருட்கள், தோல் பொருட்கள், சோலார் பேனல் தயாரிப்புகள் மற்றும் முக்கியமான 25 கனிமங்கள் விலை குறையும். அதேவேளையில் பின்னலாடை ஜவுளிகள், ஃப்ளாட் பேனல் டிஸ்ப்ளே, பிளாஸ்டிக் பொருட்கள், தொலைத்தொடர்பு தயாரிப்புகள் மற்றும் அமோனியம் நைட்ரேட் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்கும்.