அண்ணா வாழ்க!

2 Min Read

அண்ணா முடிவெய்திவிட்டார். அண்ணா வாழ்க! அதாவது அண்ணா கொள்கை வாழ்க! தோழர்களே! நோய் வருவதும், முடிவெய்துவதும் மனித ஜீவனுக்கு இயற்கையேயாகும். இதில் யாரும் தப்ப முடியாது. ஆனால், அதற்காக மக்கள் வருந்துவதும், துக்கம் கொண்டாடுவதும் மக்களுக்கு ஒரு சம்பிரதாயமேயாகும். என்றாலும், இவ்விஷ யத்தில் அறிஞர் அண்ணாஅவர்கள் சம்பிரதாயத்தை எல்லாம் தாண்டி மக்களின் உச்ச நிலைத் துக்கக் கொண்டாட்டத்தைப் பெற்றுவிட்டார்.
யானறிந்தவரை, சரித்திரம் கண்டவரை, அண்ணா முடிவுக்குப் பொதுமக்கள் காட்டிய துக்கக் கொண்டாட்டத்தில் 4இல், 8இல் ஒரு பங்கு அளவு கூட வேறு எவருடைய முடிவுக்கும் காட்டியதான நிகழ்ச்சி கிடையவே கிடையாது.

இந்த அளவுக்கு அண்ணா தமிழ் மக்கள் உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டார்கள். இது அண் ணாவின் இரண்டாண்டு ஆட்சியில் தமிழர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சி என்பதோடு, இவ்விஷயத்தில் மனித வாழ்வில் வேறுயாருக்கும் கிடைக்க முடியாத பெருமையை அண்ணா அடைந்து விட்டார். எனவே, அண்ணாவின் நற்குண நற்செய்கை, பெருமைக்கு இதற்கு மேல் எடுத்துக் காட்டமுடியாது.

இன்று மக்களுக்கு உள்ள கவலை எல்லாம் – நானறிந்த வரை அண்ணா முடிவடைந்து விட்டாரே, இனி ஆட்சி எப்படி இருக்குமோ என்பது தான். நான் சொல்லுவேன், “அண்ணா இறந்து விட்டார்; அண்ணா வாழ்க!” என்பதற்கிணங்க, இனி நடை பெறும் ஆட்சியில் எவ்வித மாறுதலும் (திருப்பமும்) இல்லாமல் அவரது கொள்கை வளர்ந்தே வரும். ஆட்சியாளர்கள் தாங்கள் தமிழர்கள், தமிழர் களுக்காகத் தமிழர்களாக, ஆட்சி செய்கிறோம் என்கின்ற உணர்ச்சியோடு, மற்ற இனத்தார் காட்டும் இன உணர்ச்சியைத் தங்களுக்கு வழிகாட்டியாக வைத்துக் கொண்டு அதன்படி நடந்து கொள்வார்கள் என்றே கருதுகிறோம். இயற்கையும் அவர்களை அந்தப்படி நடக்கச் செய்யும் என்பது உறுதி. அதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம் என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

அண்ணா நோய்ப்பட்டிருந்த காலத்தில் மேன்மை தங்கிய கவர்னர் பெருமானும், மாண்புமிகு மந்திரிமார்களும் பட்ட கவலையும், காட்டிய ஆறுதல் ஆதரவுகளும், சிகிச்சை செய்வதில் டாக்டர் சதாசிவம், கிருஷ்ணமூர்த்தி முதலிய வேலூர் டாக்டர்களும் எடுத்துக் கொண்ட மனிதத் தன்மைக்கு மேற்பட்ட முயற்சியும், 15 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி ஒழுங்காக நடத்தியதில் போலீஸ் அதிகாரிகளும், சிப்பந்திகளும் நடந்து கொண்ட பாதுகாப்புத் தன்மைகளும், ரேடியோ நிலையத்தாரும், பத்திரி கைக்காரர்களும், விஷயங்களை அவ்வப்போது மக்களுக்குக் கூடியவரை தெரிவித்து வந்த நேர்மையும், மிகமிகப் பாராட்டத்தக்கதும், நன்றி செலுத்துவதற்கு உரியதுமாகும்.

தமிழ் மக்கள் அண்ணாவிடம் காட்டிய அன்பு போலவே, இன்றைய நமது மந்திரிகள் எல்லோரி டமும் காட்டி பரிவாய் நடந்து கொள்ள வேண்டு மென்று வேண்டிக் கொண்டு இதை முடித்துக் கொள்ளுகிறேன்.

(04.02.1969 – அண்ணா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தந்தை பெரியார் ஆற்றிய வானொலி உரை –
‘விடுதலை’, 5.2.1969)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *