பாகேஷ்வர் மடத் தலைவர் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி என்ற இளம் வயது சாமியார் கும்பமேளாவில் இறந்தவர்கள் குறித்து பேசியதாவது
‘‘கும்பமேளாவில் இறந்து விட்டார்கள் என்று ஊரெல்லாம் புலம்பு கிறார்கள்.
ஆனால் அவர்கள் 7 பிறவி புண்ணியம் செய் துள்ளனர். அதனால் தான் அவர்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி கலக்கும் இடத்தில் தங்களின் ஜீவன் தான்(உயிர்தானம்) செய்துள்ளனர்.
முக்தி பெற்றுள்ளனர். இது எல்லோருக்கும் கிடைக் காத பாக்கியம், ஆனால் ஏதோ பயங்கரம் நடந்துவிட்டதைப் போன்று பேசுகிறார்கள்.
உலகில் நோய் வந்து சாகி றார்கள். சண்டையில் சாகிறார்கள். விபத்தில் சாகிறார்கள்.
அப்படி இறக்கும் நபர் களுக்கு அவரவர்கள் செய்த பாவம் புண்ணியத்திற்கு ஏற்ப மோட்சம் கிடைக்கும் – ஆனால் இங்கே இறந்தவர்கள் நேரடியாக மோட்சம் பெறுகிறார்கள் இது பெருமைக்குரிய ஒன்றே.’’ என்று பேசி இருக்கிறார். பக்தி, மதப் போதை இவர்களின் அறிவை எந்த அளவுக்கு சின்னா பின்னப் படுத்தியிருக்கிறது.
கும்பமேளாவில் கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் இடத்தில் உயிர்தானம் செய்ததால், உடனடியாக முக்தி கிடைக்கும் – மோட்சத்திற்கு உடனடியாகச் சென்று விடு வார்களாம்!
அப்படியா? சாமியார் சொல்லுவது உண்மை யானால், சொல்லுவதில், அவருக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருக்குமானால், இந்த சாமியாரும் அவர் பயன் படுத்தியிருக்கும் அந்த வாசகமான உயிர் தானத்தை செய்திருக்கலாமே!
ஏன், அவர் அங்கு செத்து மடியவில்லை? மோட்சத்திற்கு நேரடியாக இலவச டிக்கெட் வாங்கவில்லையா? ஊருக்குத் தான் உபதேசமா?
கும்பமேளாவில் செத்த வர்களுக்கு ஏழு பிறவியிலும் புண்ணியம் கிடைக்குமாம்.
அடடா, கும்பமேளாவுக்கு நதிகளின் சங்கமத்தில் குளித்த பல கோடி மக்களுக்கு இது தெரியாமல் போய் விட்டதே!
இதை முன்கூட்டியே தெரிவித்து, ஏடுகளில் விளம்பரமாகக் கொடுத்திருந் தால் ‘புண்ணியமா’ போயி ருக்குமே!
மோட்சத்திற்குச் செல்லும் பக்தர்களைத் தடுத்த குற்றம் இந்த சாமியாரைத் தான் சாரும் – அப்படித் தானே!
கும்பமேளாவில் பக்தர்கள் சாவுக்குக் காரணம் பற்றி விசாரிக்க உத்தர விட்டுள்ளார்களே! இது தவறு குற்றமானது – அவர்கள் செத்தவர்கள் அல்லர்; மோட்சத்திற்குப் போனவர்கள், அப்படி இருக்கும்போது, விசாரணை, என்பதெல்லாம் அடாத செயல் – பாவச் செயல் என்று சாமியார்கள் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்துவார்களா?
கோயில் திருவிழா என்ற பெயரிலும், புண்ணிய முழுக்கு என்ற பெயரிலும் விலைமதிக்க முடியாத மனித உயிர்கள் பறி போகின்றனவே – இதற்கொரு முடிவு கட்டப்பட வேண்டாமா?
பெரும் எண்ணிக்கையில் கூடும் பக்தர்களின் சிறுநீர், மலம் இவை எல்லாம் கலந்த நதி நீரில் முழுக்குப் போட்டால் புண்ணியம் கிடைக்குமா – பொல்லா நோய்கள் கிட்டுமா? சிந்திப்பீர்!
– மயிலாடன்