சென்னை,பிப்.1- தமிழ்நாட்டில் தினசரி மின் நுகர்வு அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வு, தினமும் சராசரியாக காலை, மாலை, 14 ஆயிரம் மெகாவாட்; மற்ற நேரங்களில், 15 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இது, கோடைக்காலத்தில் அதிகரிக்கிறது. அதன்படி, 2024 மே 2ஆம் தேதி, 20,830 மெகா வாட்டாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாகும். பின், மின்நுகர்வு வழக்கமான அளவுக்கு வந்தது.
கடந்த டிசம்பரில் பெய்த கனமழை காரணமாக, மின் நுகர்வு, 10 ஆயிரம் மெகா வாட்டாக குறைந்தது. பொதுவாக, ஜனவரியில், பனிப்பொழிவு இருக்கும் என்பதால், மின்நுகர்வு தினமும் வழக்கமான அளவிலேயே இருக்கும். அதற்கேற்ப, இம்மாதம் கடும் பனிப்பொழிவு காரணமாக, மின்நுகர்வு தினமும் சராசரியாக, 15 ஆயிரம் மெகா வாட்டாக இருந்தது.
அதிகரிப்பு
ஆனால், கடந்த சில தினங்களாக, பகலில் வெயில் சுட்டெரிக்கத் துவங்கியுள்ளதால், மின்நுகர்வு படிப்படியாக அதிகரித்து வருகிறது. 30.1.2025 அன்று மின் நுகர்வு, 17 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியது. அன்று மாலை, 17,114 மெகா வாட்டாக இருந்தது. இதுவே, இந்த ஆண்டில் இதுவரை உச்ச அளவு.
இதை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின் உற்பத்தி, கொள்முதல் இருந்ததால், மின் பற்றாக்குறை ஏற்படவில்லை.