ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
புதுடில்லி, பிப்.1 “நாட்டின் பொரு ளாதாரம் மந்தநிலையில் உள்ளது. இதனால் வேலையின்மை மற்றும் பணவீக்கம் ஆகியவற்றால் மக்கள் தவித்து வருகின்றனர்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மேனாள் நிதி யமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில், மேனாள் எம்.பி ராஜீவ் கவுடா மற்றும் அவரது குழுவினரால் தயாரிக்கப்பட்ட பொருளா தாரத்தின் உண்மையான நிலை 2025 என்ற அறிக்கையை மூத்த காங்கிரஸ் தலைவரும், மேனாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது கூறியதாவது:
“நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது என்பதை மறுக்கவே முடியாது. இதனால், வேலையின்மை அதிகரித்துள்ளது.
வேலையின்மை அதிகரிப்பு
இளைஞர்களின் வேலை யின்மை 40 சதவீதத்தை நெருங்கி விட்டது. பிரதமர் அவ்வப்போது மக்களுக்கு நியமன கடிதங்களை வழங்கி வருகிறார். இது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது மட்டுமே, புதிய பணியிடங்களை உருவாக்குவது இதில் அடங்காது. நாட்டில் பணவீக்கம் – விலைவாசி அதிகரித்து வருகிறது. நாட்டில் மிகப் பெரிய வருமான சமத்துவமின்மை நிலவுகிறது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது. அதைச் சமாளிக்க இந்த அரசு எதுவும் செய்யவில்லை.”
இவ்வாறு அவர் கூறினார்.