தந்தை பெரியாரை மதிக்காதவர்களை நாங்களும் மதிக்கமாட்டோம்!
எல்லா பிரச்சினைகளிலும் அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்!!
சென்னை, பிப்.1 தந்தை பெரியாரை மதிக்காதவர்களை நாங்களும் மதிக்கமாட்டோம்! அரசுக்கு எதிராக எல்லா பிரச்சினைகளிலும் செயல்படும் ஆளுநர் செயல்படுகிறார் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (31.1.2025) வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
10 இடங்களில் மேம்பாலங்கள் கட்டியதை பெரிய சாதனையாக
நான் கருதுகிறேன்
நான் சென்னை மாநகராட்சிக்கு மேயராக இருந்த போதும், தொடர்ந்து துணை முதலமைச்சராக இருந்த போதும் இதே வடசென்னை பகுதிக்கு குறிப்பாக சென்னைக்கு என்னென்னப் பணிகளையெல்லாம் செய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டது, போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்த 10 இடங்களில் மேம்பாலங் கள் கட்டியதை பெரிய சாதனையாக நான் கருதுகிறேன்.
சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு பணிகள் செய்தோம். இப்போது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு வந்த பிறகு, சென்னை மாநகராட்சியின் பொறுப்பை மீண்டும் தி.மு.க ஏற்ற பிறகு பல்வேறுப் பணிகளை சென்னைக்குச் செய்திருக்கிறோம்.
6,309 கோடி ரூபாய் மதிப்பீட்டில்….
அதில் குறிப்பாக, வடசென்னை பகுதிக்கு, சட்டமன்றத்தில் ஏற்கெனவே 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வட சென்னை வளர்ச்சி திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்து அறிவிப்பை வெளியிட்டேன். ஆனால், அந்த 1000 கோடி ரூபாயும் தாண்டி பல்வேறு துறைகளின் ஒத்துழைப்போடு சுமார் 6,309 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மொத்தப் பணிகள் 252. அந்த 252 பணிகளில் 29 பணிகள் முழுமையாக முடிவ டைந்துள்ளது. 166 பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணிகளும் முடிவடைய இருக்கிறது. எனவே, இந்த ஓராண்டு காலத்திற்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க வேண்டும் என்று அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளேன்.
தொடர்ந்து, நம்முடைய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர், இந்தப் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நானும், இரண்டாவது முறையாக ஏற்கெனவே, அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டாலும், தொடர்ந்து நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். துணை முதலமைச்சரையும், சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்களையும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். அவர்களும் இந்தப் பணிகளை துரிதப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
வளர்ந்த சென்னையாக நிச்சயமாக
ஓராண்டுக்குள் வடசென்னை உருவாகும்!
வட சென்னையைப் பொறுத்தவரை இது ஒரு வளர்ந்த சென்னையாக நிச்சயமாக இந்த ஓராண்டுக்குள் உருவாகும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்தப் பணிகளை தான் இன்றைக்கு நான் ஆய்வு மேற்கொண்டேன்.
அனைத்து பிரச்சினைகளிலும் அரசுக்கு எதிராகதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் ஆளுநர்!
கேள்வி: தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து அரசு மீது குற்றச்சாட்டை வைத்துக்கொண்டு வருகிறார். அறிக்கை வெளியிடுகிறார். எக்ஸ் வலைதளத்திலும் குற்றச்சாட்டை வைக்கிறாரே.
முதலமைச்சர் பதில்: ஒன்று, இரண்டு மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் குற்றச்சாட்டு வைக்கிறாரே! அனைத்து பிரச்சினைகளிலும் அரசுக்கு எதிராகதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அது எங்களுக்கு நன்றாகத்தான் உள்ளது. தொடர்ந்து அதை செய்ய வேண்டும். ஏன் என்றால், அதை செய்ய செய்யதான் எங்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் வேகம் வருகிறது. அவருடைய போக்கு இந்த ஆட்சிக்கு சிறப்பைதான் சேர்க்கிறது. எனவே, அவர் அதை தொடர்ந்து செய்யட்டும், தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நான் ஆளுநரை கேட்டுக்கொள்கிறேன்.
நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம்!
கேள்வி: காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் நியமனம் குறித்து தேடுதல் குழுவை ரத்து செய்து ஆளுநர் அறிவித்திருக்கிறாரே அது பற்றி…..
முதலமைச்சர் பதில்: அவர் தொடர்ந்து இந்த வேலை களைத்தான் செய்து கொண்டு இருக்கிறார். அது குறித்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. வரும் 4 ஆம் தேதி வழக்கு வருகிறது. அப்போது தெரியும்!
பெரியார் தான் எங்களுக்கு தலைவர்!
கேள்வி: பெரியார் மீது இன்னும் விமர்சனம் வைத்து வருகிறார்களே அது பற்றி…….
முதலமைச்சர் பதில்: பெரியாரை மரியாதை குறைவாக பேசக்கூடியவர்களுக்கெல்லாம் நான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை. ஏன் என்றால், பெரியார் தான் எங்களுக்கு தலைவர். எங்கள் தலைவர்க ளுக்கெல்லாம் தலைவர் அவர்தான். அதனால், அதை நாங்கள் பெரிதுப்படுத்தவும் தயாராக இல்லை. பொருட்படுத்தவும் தயாராக இல்லை.
கேள்வி: ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பற்றி….
முதலமைச்சர் பதில்: 5 ஆம் தேதி தேர்தல், 8 ஆம் தேதி தேர்தல் முடிவு. அப்போது தெரியும்.
கேள்வி: ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் உங்க ளுடைய எதிர்பார்ப்பு என்ன? கடந்த முறை தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக அறிக்கை வெளியிட்டி ருந்தீர்கள். அது பற்றி……
முதலமைச்சர் பதில்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் தீர்மானம் போட்டு இருக்கிறோம். நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபையில் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்த சொல்லியிருக்கிறோம். பார்ப்போம். நிதிநிலை அறிக்கை வெளியிட்ட பிறகு தான் என்ன என்பது தெரியும்.
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு
சிறப்பாக இருக்கிறது
கேள்வி: சட்டம்-ஒழுங்கு குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். அது பற்றி…………
முதலமைச்சர் பதில்: வேண்டுமென்றே திட்டமிட்டு அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் சில சம்பவங்களை பெரிதாக ‘பூதாகர’மாக்குகிறார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்க ளைப்பொறுத்தவரை சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. அதனால்தான் வெளிநாட்டில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் தொழிற்சாலைகள் எல்லாம் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.
செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.