நடைபாதையில் கோயிலா?

2 Min Read

நான் பெல் நிறுவனத்தில் பணியாற்றி கடந்த 2018 ஆம் ஆண்டு பணி நிறைவு பெற்றேன். நான் அங்கு பணிபுரிந்த போது பெல் பெரியார் தொழிலாளர் நல உரிமைச் சங்கத்தின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டு வந்தேன். எனது தொழிற்சங்கப் பணிக் காலத்தில் நம் நிறுவனத்தில் சமூக நல்லிணக்கமும் மத நல்லிணக்கமும் நிலவுவதற்கு என்னாலான பணிகளைச் செய்து வந்தோம்.
நிறுவன வளாகத்துக்குள் கோயிலோ – சர்ச்சோ – மசூதியோ கட்டப்பட்டால் தொழிலாளர் மத்தியில் தேவையற்ற ஜாதி, மதப் பூசல்கள் நிலவும் என்பதால் அப்படிப்பட்ட பூசல்கள் நிலவாத வகையில் எங்களுடைய செயல்பாடுகள் அமைந்திருந்தன. அன்றைக்கு இருந்த பெல் நிர்வாகமும் மதச்சார்பற்ற தன்மையில் நடு நிலையோடு நடந்து கொண்டார்கள். தற்பொழுதும் அதே நிலை தொடர்கிறது என்று நம்பலாம்.

தற்பொழுது திருச்சி – தஞ்சை நெடுஞ்சாலை யில் கணேசா பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து ஒரு கோயில் கட்டப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து நமது ஊழியர்கள் பலர் விபத்துக்காளானார்கள் என்பதாலேயே அங்கு மேம்பாலம் கட்டப்பட்டது. தற்பொழுது அந்த மேம்பாலத்தை ஒட்டியுள்ள நடைபாதையில் கோயில் கட்டினால் அதனால் முன் போல மீண்டும் பெல் ஊழியர்களே விபத்துக்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படும். நடைபாதைக் கோயில் கட்டுவது G.S.Ms.No 1052/28 MAY1973 என்கிற அரசு ஆணைக்கு எதிரானதாகும். இதனை மீறி கட்டப்படும் கோயில்கள் நீதிமன்ற ஆணைக்கிணங்க இடிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு சட்ட விரோதமாகக் கட்டப்படும் கோயிலானது வரும் பிப்ரவரி மாதம் கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றன. அந்தக் கோயில் கட்டுகின்ற நபர்கள் அந்த குடமுழுக்கிற்கு பெல் நிறுவன அதிகாரிகள் வர இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அத்துடன் அந்த குடமுழுக்கின் போது அருகிலுள்ள சிஅய்டியு தொழிற்சங்க வளாகத்தைப் பயன்படுத்திக்கொள்ள பெல் நிறுவன ஊழியர்துறை அனுமதி கொடுத்து விட்டதாக செய்தி பரப்பி வருகிறார்கள். அவ்வாறு அனுமதித்தாலோ அந்த குடமுழுக்கில் கலந்து கொண்டாலோ அவர்கள் மேற்கொள்ளும் சட்ட விரோத நிகழ்ச்சிக்கு அங்கீகாரம் கொடுத்ததுபோல் ஆகிவிடும்.

பக்தி அடிப்படையில் கோயிலுக்கு வருவதோ குடமுழுக்கில் கலந்துகொள்வதோ தனிப்பட்ட உரிமையாகும். ஆனால் பெல் நிறுவன அதிகாரிகள் என்ற அடிப்படையில் வந்து கலந்து கொள்வதும் அந்த தொழிற்சங்க வளாகத்தை கோயில் விழாவுக்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதும் சட்டத்திற்கு விரோதமான செயலாகக் கருதப்படும்.
எனவே, பெல் நிறுவன நிர்வாகம் சிஅய்டியு தொழிற்சங்க வளாகத்தில் கோயில் விழா நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். அப்படி மீறி அந்த வளாகத்தைக் கோயில் விழா நடத்த அனுமதிக்கப்படுமானால் திராவிடர் கழகத் தலைவர் அனுமதியோடு திராவிடர் கழகத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டி வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

– ம. ஆறுமுகம், திருவெறும்பூர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *