தந்தை பெரியார் பல்கலைக் கழகத்துக்குச் சென்று படித்தவர் அல்லர்; ஏன் உயர்நிலைப் பள்ளிக்குள்ளும் காலடி பதித்தவர் அல்லர். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், வெறும் நான்காம் வகுப்புதான் – திண்ணைப் பள்ளிக்கூடம்தான்.
அத்தகைய ஒருவர் இன்றைக்கு 87 ஆண்டுகளுக்குமுன் பரிசோதனைக் குழாய்க் குழந்தைபற்றி தொலைநோக்கோடு சொன்னார் என்றால், அவருடைய சுய சிந்தனையின் ஊற்று எத்தகையது என்பதை எண்ணிப் பார்த்தால், பெரும் ஆச்சரியம்தான்!
1938 இதே தேதியில் (ஜனவரி 31) ஆயக்கவுண்டன் பாளையத்தில் ஆற்றிய சொற்பொழிவில், ‘‘போகிற போக்கில்’’ இதைச் சொன்னார் என்றால், அந்த இயற்கை அறிவின் ஊற்றை என்னென்பது!
1943 செய்யாறு திருவத்திபுரத்தில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணத்திற்கு உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார் தலைமை தாங்கி ஆற்றிய உரையில், ‘‘இனிவரும் உலகம்பற்றி’’ கூறியிருக்கிறார்.
அந்தத் திருமணத்திற்கு அய்யாவுடன், அண்ணாவும் சென்றிருக்கிறார். திருமணம் முடிந்து வரும்போது, ‘அய்யா இந்தத் திருமணத்தி்ல தங்களின் கருத்து வித்தியாசமாக இருந்தது’ என்று சொன்னபோது, ‘அப்படியா?’ என்று சர்வ சாதாரணமாக சொல்லியிருக்கிறார் அய்யா!
அறிஞர் அண்ணா நடத்திய ‘திராவிட நாடு’ இதழில், இரண்டு வாரங்களில் (21.3.1943 மற்றும் 28.3.1943) அண்ணாவே அந்தப் பேச்சைக் கைப்பட எழுதி வெளியிட்டும் உள்ளார்.
அதுதான் முதல் பதிப்பாக 1944 இல் ‘‘இனிவரும் உலகம்’’ என்ற நூலாக வெளிவந்தது.
‘‘போக்குவரத்து எங்கும் ஆகாய விமானமும், அதிவேக சாதனமாக இருக்கும். கம்பியில்லாத் தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும். ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும். உருவத்தை தந்தியில் அனுப்பும் படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்கு ஆள் உருவம் காட்டிப் பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும். மேற்கண்ட சாதனங்களால் ஓர் இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க சாத்தியப்படும்’’ என்றெல்லாம் பேசியிருக்கிறார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.
(குறிப்பு: முதல் சோதனைக் குழாய்க் குழந்தை இங்கிலாந்தின் மான்சென்ஸ்டர் நகரில் லேஸ்லீ மற்றும் பீட்டர் பிரவுன் பெற்றோரின் கருமுட்டை மற்றும் உயிரணுக்களைக் கொண்டு IVF முறையில் குழந்தை பிறந்தது. குழந்தையின் பெயர் லூசி ஜோய் பிரவுன் – பிறந்த நாள் 25.7.1978).
‘‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’’ என்று தந்தை பெரியார் குறித்து புரட்சிக்கவிஞர் (1958) பாடினாரே!
– மயிலாடன்