மேனாள் இலங்கை எம்.பி. மாவை சேனாதிராஜா மறைவு

1 Min Read

தமிழர் தலைவர் இரங்கல்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மேனாள் தலைவரும், ஈழத் தமிழர் உரிமைக்காகப் போராடிய மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும், எந்நாளும் நம் மீது மாறாத அன்பு கொண்டிருந்தவருமான கெழுதகை நண்பர்
மாவை சேனாதிராஜா அவர்கள் (82) வயது முதிர்வு, உடல்நலக் குறைவின் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (29.01.2025) இரவு காலமானார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.

இளமைக் காலம் முதலே தமிழர் உரிமைக்கான அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு, ஈழத்தந்தை செல்வா, தோழர் அமிர்தலிங்கம் ஆகியோரின் அடியொற்றி நடந்தவர். இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்காக அவர் குரல் தொடர்ந்து ஒலித்து வந்தது. தமிழர்கள் மிக மோசமான சூழலில் தள்ளப்பட்டிருந்த காலத்தில், கடந்த 10 ஆண்டுகளாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் இருந்து வழிநடத்திய மூத்த தலைவர் ஆவார்.
2024 ஆகஸ்ட் மாதத்தில் நாம் இலங்கை, யாழ்ப்பாணத்திற்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, நம்மை வரவேற்க யாழ்ப்பாண விமானநிலையத்திற்கே வந்திருந்து அழைத்துச் சென்றதுடன், மூன்று நாட்களிலும் தன்னுடைய உடல் நலிவைக் கூட பொருட்படுத்தாமல், பல முறை வந்து சந்தித்து, தமிழர் உரிமை தொடர்பாகத் தம்முடைய கவலையை வெளிப்படுத்தி, தமிழர் ஒற்றுமைக்கான பணிகளைக் குறித்துக் கலந்துரையாடினார்.

நம்மை அவரது இல்லத்திற்கு அழைத்து உபசரித்து அளவளாவினார். அப்போதும் ஈழத் தமிழர் உரிமை குறித்தே உரையாடல்கள் அனைத்தும் அமைந்திருந்தன.
இலங்கை அரசியல் வரலாற்றின் மிக முக்கியமான காலகட்டத்தில் அவருடைய மறைவு தமிழ் மக்கள் அனைவருக்குமான பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது வாழ்விணையர், மகன் மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள், அவர்தம் இயக்கத் தோழர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழர் மாவை.சேனாதிராஜா அவர்களுக்கு நமது வீரவணக்கம்!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 
30.1.2025 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *