சிற்றுந்துகளுக்கான கட்டணம் மாற்றியமைப்பு
புதிய ஒருங்கிணைந்த சிற்றுந்து (மினி பேருந்து) திட்டத்தின் கட்டணத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி முதல் 4 கி.மீ. வரை 4 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4 முதல் 6 கி.மீ. வரை 5 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 6 முதல் 8 கி.மீ. வரை 6 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது 2025 மே 1-ஆம் தேதி நடைமுறைக்கு வரும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாஞ்சோலை தொழிலாளர்களை முதலமைச்சர் சந்திக்கிறார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற பிப்ரவரி 6, 7ஆம் தேதிகளில் நெல்லை செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். அப்போது மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை முதலமைச்சர் சந்தித்துப் பேசவுள்ளதாகவும், அதன் பின்னர் மீனவர்களையும் சந்திக்க இருப்பதாகவும் அமைச்சர் கே.என்.நேரு தகவல் தெரிவித்துள்ளார்.
தொழில் முனைவோருக்கான பயிற்சி
தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு – ‘தொழில் முனைவோருக்கான ChatGPT’ பயிற்சி நாளை (31.1.2025) கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. முன்பதிவிற்கு www/editn/in<http//:www.editn.in> என்ற வலைத்தளத்தில் செய்து கொள்ளலாம்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு
அதிக தண்டனை விதிக்கும் சட்டம் தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு
தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடந்து முடிந்த கூட்டத் தொடரின் நான்காவது நாளில், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் சட்ட மசோதாவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அந்த மசோதாவில் 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதோடு, பாலியல் வன்கொடுமை வழக்கில் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அவை அனைத்தும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேறியது. அதையடுத்து சட்டத் திருத்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, இந்தச் சட்டம் தமிழ்நாடு அரசிதழில் வெளியாகியது. அதில், கடந்த 25ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்த தேதியில் இருந்து திருத்தப்பட்ட சட்டம் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்பில் பல கணக்குகளை
பயன்படுத்தும் வசதி
இந்தியாவில் மட்டும் சுமார் 35 கோடி பேர் பேஸ் புக்கையும், 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் வந்த ஆரம்ப காலத்தைவிட தற்போது பல்வேறு அப்டேட்களை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று ஒரே APP-இல் பல கணக்குகளை பயன்படுத்தும் அம்சத்தை வாட்ஸ்அப்பில் மெட்டா விரைவில் கொண்டு வரவுள்ளது. இதன்மூலம், Account-அய் சுவிட்ச் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
94,362 ஏக்கர் நிலங்கள்
பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை மூன்றாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட நிலங்களுக்கு அய்ந்து சுற்றுகள் 29.1.2025 முதல் 13.6.2025 முடிய 135 நாள்களுக்குள் உரிய இடைவெளி விட்டு 10,300 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர் வட்டங்களிலுள்ள நிலங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், காங்கேயம் மற்றும் தாராபுரம் வட்டங்களிலுள்ள நிலங்களும் என ஆக மொத்தம் 94,362 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (நீர்வளத் துறை) தெரிவித்துள்ளார்.