இந்திய வரலாற்றில் பெரும் மதக்கலவரம் மூழ்வதை தடுத்து நிறுத்த முக்கிய காரணமாக இருந்தவர்கள் ரகுநாத் நாயக் மற்றும் ஹெர்பெர்ட் ரேனர் ஜூனியர் ஆவர்.
காந்தியார் கொலைக்குப் பிறகு தப்பி ஓட முயன்ற நாதுராம் கோட்சேயை முதலில் தடுத்து நிறுத்திய ஒடிசாவின் ரகுநாத் நாயக் என்றவரை உலகம் அதிகம் அறியவில்லை.
அவர் இல்லை என்றால் அன்று காந்தியார் கொலை என்பது மிகப்பெரிய மதக்கலவரத்திற்கு வித்தட்டிருக்கும். 1948 ஜனவரி 30 ஆம் தேதி, நேரம் மாலை 5.10 மணி அளவில் பிர்லா மாளிகையில், சர்தார் படேலுடன் கூட்டம் முடிந்த பிறகு, காந்தியார் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் செல்ல ஆர்வமாக இருந்தார். அன்று கொஞ்சம் தாமதமாகிவிட்டது. காந்தியார் மக்கள் தனக்காக காத்திருப்பதை விரும்பவில்லை.
உடனடியாக மக்களைச் சந்தித்துவிட்டு பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் செல்ல திட்டமிட்டார்.
காந்தியாரைப் பார்த்து, மக்கள் இரண்டு வரிசைகளாக நின்றனர். காந்தியார் மக்களிடையே நடந்து சென்றார். அப்போது, கூட்டத்திலிருந்து ஒரு இளைஞன் திடீரென காந்தியாரின் முன்னால் வந்து, ஒரு கைத்துப்பாக்கியில் சுட்டான்.
குண்டுகள் காந்தியாரின்ன் மார்பு மற்றும் வயிற்றைத் துளைத்தன. காந்தியார் அங்கேயே மரணமடைந்தார்.
பிர்லா மாளிகையின் தோட்டக்காரர் ரகுநாத் நாயக், அவர் ஒரு சாதாரண தோட்டவேலை செய்யும் நபர் மட்டுமே – அவரை மாலி என்று அழைப்பார்கள்.
அந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
துப்பாக்கிச் சுட்டுச் சத்தம் கேட்கும்போதே அவர் காந்தியாரிடம் ஓடினார். பிரியமான காந்தியாரை இரத்தக் வெள்ளத்தில் கண்ட ரகுநாத் நிலைமையைப் புரிந்துகொண்டு எதிரே தப்பி ஓட முயன்ற நாதுராமைப் பிடித்தார்.
ஆனால் கோட்சே துப்பாக்கியைக் கீழேபோட்டுவிட்டு தனது கைமுட்டியால் கழுத்திலும் இடுப்பிலும் குத்தினார். ஆயுதம் இல்லாத போது எதிரியை நிலைகுலைய வைக்க நாஜிக்கள் பயன்படுத்தும் தாக்குதல் முறை அது. நிலைகுலைந்து விழச்சென்ற போது ஆங்கிலேயரான ஹெர்பெர்ட் ரேனர் ஜூனியர் என்பவர் ரகுநாத்தை தாங்கிக்கொள்ள சுதாரித்துக்கொண்ட ரகுநாத் கையில் வைத்திருந்த சிறிய மண்வெட்டியால், கோட்சேவின் தலையில் அடித்தார்.
இரும்பாலான அந்தக்கருவியின் தாக்குதலால் மயக்க நிலைக்கு நாதுராம் கேட்சே சென்றுவிட்டார்.
நாதுராமுக்கும் ரகுநாத்துக்கும் இடையேயான மோதல் குறுகியதாக ஆனால் கடுமையானதாக இருந்தது. போராட்டமே முடிவை நிர்ணயித்தது. உடனடியாக நாயக் நாதுராமை கீழே தள்ளி, காவல்துறையினர் வந்து அவரைக் கைது செய்யும் வரை ஹெர்பெர்ட் ரேனர் ஜூனியர் கைகளை பின்னல் மடக்கிப் பிடித்து வைத்திருந்தார். ரகுநாத் கோட்சேவின் கால்களை பிடித்துக்கொண்டு முதுகில் அமர்ந்துவிட்டார்
காந்தியாரின் கொலை வழக்கு விசாரணை தொடர்ந்தது. காந்தியாரின் கொலைக்கு ஆறு நேரடி சாட்சிகள் வாக்குமூலம் அளித்தனர். ரகுநாத் குற்றவியல் சாட்சியாக இருந்தார். அவருடன் அமர்நாத், நந்த்லால் மேத்தா, ரதன் சிங், தர்ம சிங், மற்றும் சர்தார் குர்பச்சன் சிங் ஆகியோரும் குற்றவியல் சாட்சிகளாக இருந்தனர். பின்னர், நாதுராம் தூக்கிலிடப்பட்டார்.
பல அறிஞர்கள் ரகுநாத்தின் வீரச்செயலைப் பற்றி எழுதியுள்ளனர். தீஸ்தா செதல்வாடின் “பியாண்ட் டவுட் – ஏ டாசியர் ஆன் காந்திஸ் அசாசினேஷன்” என்ற நூலில், 1948 ஜனவரி 30 அன்று, காந்தியாரைப் பாதுகாக்க பிர்லா மாளிகையில் 26 காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் காந்தியாரைச் சுட்டவரை முதலில் பிடித்தவர் ரகுநாத்தான். பின்னர் இரண்டு காவலர்கள் அவருக்கு உதவ முன்வந்தனர். ஒரு காவல் ஆய்வாளரும், உதவி ஆய்வாளரும் கூட அங்கிருந்தனர். ஆனால் அவர்களால் நாதுராமைப் பிடிக்க முடியவில்லை.
திரேந்திர ஜாவின் “காந்தி அசாசின் – த மேக்கிங் ஆஃப் நாதுராம் கோட்சே அண்ட் ஹிஸ் அய்டியா ஆஃப் இந்தியா” என்ற புத்தகத்தில் பிர்லா மாளிகையில் நடந்த பிரார்த்தனைக் கூட்டம் மற்றும் காந்தியாரின் படுகொலை பற்றிய சுருக்கமான விவரம் உள்ளது. ஹெர்பர்ட் ரெய்னர் ஜூனியர் அமெரிக்கத் தூதரகத்தின் இளம் அதிகாரியாக இருந்தார். அவர் தனது தாயின் ஆலோசனைப்படி காந்தியரின் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்தார். அந்த நாளில் இப்படி ஏதாவது நடக்கும் என்று ரெய்னர் கற்பனை கூட செய்திருக்கவில்லை. காந்தியாரின் படுகொலையைக் கண்ட பிறகு அருகிலிருந்த அனைவரும் முடங்கிப்போய் அல்லது உறைந்துபோய் நின்றதாக நியூயார்க் ஹெரால்ட் ட்ரிப்யூனில் அவர் குறிப்பிட்டார். பிர்லா ஹவுசின் தோட்டக்காரர் ரகுநாத், தனது குர்பியால் நாதுராமின் தலையில் அடித்தார். கோட்சேக்கும் ரகுநாத்துக்கும் இடையேயான சண்டை மூர்க்கமாக இருந்தது. தாமும் ரகுநாத்துடன் சேர்ந்து நாதுராமின் தோள்பட்டையைப் பிடித்ததாக ஹெர்பர்ட் ரெய்னர் கூறினார்.
பிர்லா ஹவுசின் தோட்டக்காரராக இருப்பதோடு, காந்தியாருக்கு ஆட்டுப்பால் கொடுப்பதற்கும், காந்தியார் வசித்த அறையைப் பராமரிப்பதற்கும் ரகுநாத் பொறுப்பாக இருந்தார். ரகுநாத்தின் மனைவி மந்தோதரி, ரகுநாத் எப்போதும் காந்தியாரைப் பற்றிப் பேசுவார் என்றும், காந்தியாரின் பார்வை அவரை மிகவும் கவர்ந்தது என்றும் கூறினார். தனது கடைசி மூச்சு வரை, ரகுநாத் ஜனவரி 30 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தினங்களில் காந்தியாரின் நினைவாக பிரார்த்தனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்து, அரை மணி நேரம் பிரார்த்தனை செய்து காந்தியாருக்கு மரியாதை செலுத்தி வந்தார்.
– டாக்டர் பரிடா
சமூகவியல் துறை உதவிப் பேராசிரியர்