சென்னை,ஜன.30- தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 25 மாவட்ட மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
அமைச்சர் ஆய்வு
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.362.87 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள புதிய டவர் பிளாக் கட்டடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.362.87 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் கட்டப்பட்டு வருகிறது.
ரூ.200.66 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்களும், ரூ.162.21 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் என்கின்ற வகையில் ரூ.362.87 கோடி செலவில் கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2,68,815 சதுர அடி பரப்பில் தரைத்தளத்துடன் கூடிய 6 தளங்கள் 468 படுக்கை வசதிகள், 16 அறுவை அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள், அதில் ஒன்று Hybrid OT என்று சொல்லக்கூடிய ஒருங்கிணைந்த அறுவை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள்
தமிழ்நாட்டில் இந்த அரசுப் பொறுப்பேற்பதற்கு முன் 19 இடங்களில் மட்டுமே மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் இருந்தது. தற்போது புதிதாக 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் பயன்பாட்டிற்கு மிக விரைவில் வர உள்ளது.
கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைகளைப் பொறுத்தவரை 19 மாவட்ட அரசு மருத்துவமனைகள் 6 தலைமை மருத்துவமனைகளுக்கு இணையாக மருத்துவ கட்டமைப்புகளை கொண்ட மருத்துவமனைகள்.
இந்த 25 மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு ரூ.1,018 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் 3 மாத காலங்களில் அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிவுற்று தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 திட்டம்
இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 என்கின்ற மகத்தான திட்டம் தொடங்கப்பட்டதற்கு பிறகு கடந்த மூன்றரை ஆண்டுகளில் இதுவரை 3,20,000த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு விபத்து சிகிச்சைகளில் இருந்து உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.283 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது. எனவே விபத்துகளில் இருந்து உயிர்கள் காப்பாற்றப்படுவது என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருந்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.