பிற்பகல் மாநாடு பெரியார் தலைமையில் மாலை 3 மணிக்கு கூடியது. ஜஸ்டிஸ் கட்சியின் பெயரை அதாவது தென் இந்திய நலஉரிமைக் கழகம் என்பதை திராவிடர் கழகம் என்பதாக மாற்ற வேண்டும் என்கிற தீர்மானம் தோழர் அண்ணாதுரை அவர்களால் பிரேரேபிக்கப்பட்டது. தோழர் டி.ஷண்முகம் அவர்கள் ஆமோதித்தார்.
இத்தீர்மானத்தைத் தோழர்கள் சி.ஜி.நெட்டோ; அ.கணேசசங்கரன், எ.வேணுகோபால் ஆகியவர்கள் விஷயாலோசனைக் கூட்டத்தில் அனுமதித்துவிட்டு ‘போதுமான கால நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை”யென்பதாக ஆட்சேபித் தார்கள். தலைவர் பெரியார் எழுந்திருந்து ‘ஜஸ்டிஸ்’ என்பது பத்திரிகையின் பெயர் என்றும், இக்கட்சியின் பெயர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்பதாகவும், சேலத்தில் 20.11.43-ல் கூடிய நிர்வாகசபைக் கூட்டத்தில் (இவர்களும் கூடியிருந்த நிர்வாகசபைக் கூட்டத்திலே,) ஜஸ்டிஸ் கட்சி என்றிருப்பதை ‘திராவிடர் கழகம்’ என்பதாக மாற்ற வேண்டுமென மாகாண மாநாட்டுக்கு சிபாரிசு செய்திருப்பதாகவும் மற்றும் பல சங்கங்கள் ஆதரித்திருப்பதாகவும் தென் இந்தியர் என்றாலும் திராவிடர் என்றாலும் ஒன்றுதான் என்றும் தெரிவித்தார். பின்னர் தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டது. ஆயிரக்கணக்கான கைகள் உயரத் தூக்கின. ஆட்சேபிக்கிறவர்களை கைதூக்கும்படி கேட்கப்பட்ட போது, யாரும் கை தூக்கவேயில்லை! ஆட்சேபித்தவர்களும் சும்மா இருந்துவிட்டார்கள். எனவே தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
பின்னர் சமுதாய சீர்திருத்த சம்பந்தமான தீர்மானங்கள் தலைவரால் பிரேரேபிக்கப்பட்டு ஏகமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டன.
அதன் பின் தோழர் அண்ணாதுரை அவர்களின் தீர்மானம் பிரேரேபிக்கப்பட்டு ஒரு சிறு திருத்தத்துடன் நிறைவேறியது.
கடைசியாக ஜில்லா, தாலுகாக்களில் ஸ்தாபன அமைப்பு வேலைக்கு நான்கு பொறுப்பாளர்களை மாநாடு வேண்டிக் கொண்டதும் தலைவரால் முடிவுரை கூறப்பட்டது.
முடிவாக நகரப் பிரமுகரும் வரவேற்புக் கழக முதியவருமான ராவ்சாஹிப் துரைசாமி பிள்ளை அவர்கள், பெரியார், தோழர்கள் அண்ணாதுரை, பாண்டியன் முதலியவர்களுக்கும் வந்திருந்த பிரதிநிதிகளுக்கும் மாநாட்டை சிறப்புடன் கூட்டித் தந்த வரவேற்புக் கழகத் தலைவருக்கும், முனிசிபா லிட்டியாருக்கும் வந்தனோபசாரம் கூற மாநாடு இனிது முடிந்தது.
இனி பொது ஜனங்கள் செய்ய வேண்டிய வேலையை கவனிக்க வேண்டும். அங்கத்தினர்களைச் சேர்ப்பதும்,அமைப்புகளைப் புதுப்பிப்பதும் முக்கியமான வேலையாகும்.
கட்சி அரசியல் தீர்மானங்கள்
1. (அ) இந்த மாநாடானது ஜஸ்டிஸ் கட்சி என்று அழைக்கப்படும் இக்கட்சிக்கு உள்ள தென் இந்திய நலஉரிமைச் சங்கம் என்ற பெயரை ‘திராவிடர் கழகம்’ Dravidian Association என்று பெயர் மாற்றத் தீர்மானிக்கிறது.
(ஆ) அதன் முக்கிய கொள்கைகளில் திராவிடநாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்க நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும், நேரே பிரிட்டிஷ் செக்கரட்டரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி ஸ்டேட் நாடாக பிரிக்கப்படவேண்டியது என்ற கொள்கையை முதற்கொள்கையாக சேர்க்கப் பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.
(இ) திராவிடர் கழகத்து அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் மேற்கண்ட திராவிட நாடு பிரிக்கப்பட்டு அமைக்கவேண்டும் என்பதை ஒப்புக்கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
ஜாதிபேதம்
2. (அ) மக்கள் பிறவியினால் ஜாதி பேதம் கற்பிக்கப்பட்டிருப்பதையும், அவற்றுள் உயர்வு கற்பிக்கப்பட்டிருப்பதையும் இக்கழகம் மறுப்பதோடு, அவைகளை ஆதரிக்கிற போதிக்கிற, கொண்டு இருக்கிற மதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம் காவியம் என்பவை முதலாகிய எவையையும் பொதுமக்களும் குறிப்பாக நம் கழகத்தவர்களும் பின்பற்றக் கூடாது என்று தீர்மானிப்பதோடு, அவை நம்மீது சுமத்தப்படாமல் இருக்கவேண்டிய காரியம் தீவிரமாய்ச் செய்யவேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கின்றது.
(ஆ) மேலே கண்ட தன்மைகளை நீதியாகக் கொண்ட அரசியல் சட்டங்களையும் மாற்றி அமைக்க முயற்சிக்க வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
(இ) வருணாசிரம தர்மம் என்கின்ற கொள்கையையும் அதன் பேரால் ஏற்படுத்தப்பட்ட பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற பிரிவையும் இக்கழகம் ஒப்புக் கொள்ளுவதில்லை என்பதோடு, அக்கொள்கைகள் எந்த முறையில் இருந்தாலும் ஒழிக்கப்பட வேண்டி யவை என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
(ஈ) மனிதனை மனிதன் தீண்டாமை பார்க்காமை, ஒன்றாயிருந்து உண்ணாமை, தொழுகாமை முதலிய தன்மைகளை ஒழிக்க வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
(உ) மக்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் ஜாதிப்பிரிவைக் காட்டும் சொற்களையும் மற்றும் குறிகளையும் விட்டுவிட வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
சமயம் கோவில் மடம்
3. (அ) கோவில்களில் பல கடவுள்கள் தன்மை யையும், கடவுளுக்கு உருவத் தன்மையையும் அதற்கு பெண்டுபிள்ளை, பல மனைவி, காதற்கிழத்தி தன்மையையும் அதற்கு திருமணம், ஒய்யாரம், உற்சவம், ஊர்வலம், சதுர்கச்சேரி, வாணவேடிக்கை முதலாகிய ஆடம்பரங்கள் செய்யப்படுவதையும் நிறுத்தப்படவேண்டும்.
(ஆ) தொழுகைக்கு பூசைக்கும் தரகன் இருப்பதும் தேங்காய், பழம், கற்பூர ஆரத்தி, நிவேதனம் (படைப்பு) முதலியவைகளுக்கு செலவிடுதலும் ஆகியவைகள் ஒழிக்கப்பட வேண்டும்.
(இ) நம் மடங்கள், மடாதிபதிகள் என்கின்ற தன்மைகள் மனித நாகரிகத்திற்கும், பகுத்தறிவிற்கும், சுயமரியாதைக்கும் பொருத்தமற்றதாக இருப்பதாலும், அவை இன்றைய நம் வாழ்விற்கும் லட்சியத்திற்கும் வேண்டாததாகவும், விரோதமானதாகவும் இருப்ப தாலும், அவைகளால் பெரிதும் ஒழுக்கமோ, உயர் குணமோ, அறிவு வளர்ச்சியோ, சமுதாய ஒற்றுமையோ ஏற்படுவதற்கு இல்லாமல் இருப்பதினாலும் அவற்றின் அடிப்படையை மாற்றி அவைகளை சமுதாய வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் ஒற்றுமைக்கும் பாடு படும் ஸ்தாபனங்களாக மாற்றவேண்டும்.
(ஈ) கோயில்களிலும், மடங்களிலும் ஏராளமான பொருளும் வருவாய்களும் இருப்பதால் அவை மக்களின் கல்வி, சுகாதாரம், வைத்தியம், விஞ்ஞானம், தொழிற்சாலை, இயந்திரசாலை, கண்காட்சி முதலிய காரியங்களுக்குப் பயன்படுத்தச் செய்யவேண்டும் என்பதாக இம்மாநாடு தீர்மானிக்கின்றது.
பெண்கள்
4. (அ) பெண்களுக்கு ஆண்களைப் போன்ற சொத்து உரிமையையும், இருவருக்கும் கல்யாண ரத்து உரிமையையும், கலப்பு மண உரிமையையும் அளித்து அவை சட்டமாக்கப்படவேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
(ஆ) விதவை மணம் ஆதரிக்கப்பட்டு பெருவாரியாக அமலுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
(இ) திருமணங்கள், பதிவுத் திருமணங்களாகவும், அல்லாவிட்டால் பார்ப்பனப் புரோகிதம், ஆடம்பரம், வீண் சடங்கு இல்லாததாகவும், அவசியமானால் ஒரு நாள், ஒரு விருந்துக்கு மேல் இல்லாமலும் நடத்தப் படவேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கின்றது.
கல்வி
5. (அ) கல்வியானது அறிவு வளர்ச்சிக்கும் புலமைக்குமே தவிர, மதப்பிரசாரத்திற்காக அல்ல என்பது கல்வியின் அடிப்படைத் தத்துவமாக இருக்கவேண்டும்.
(ஆ) பகுத்தறிவுக்கு மாறானதும், மூட நம்பிக் கையை வளர்ப்பதுமான எந்த விஷயங்களும் கல்வியில் பாடமாகவோ, பாடப்புத்தகமாகவோ, கற்பிக்கப்போவதாகவோ இருக்கக்கூடாது.
(இ) கல்வி கற்பிக்கப்படுவது என்பதானது யாவ ருக்கும் பொதுவானாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தொழிலாளிகளுக்கும் பிற்பட்ட வகுப்பாருக்கும் முதல் உரிமை அளிப்பதாக இருக்கவேண்டும்.
(ஈ) சராசரி வாழ்க்கைத் தேவைக்கும் சாதாரண அறிவு தன்மைக்கும் மேற்பட்டதான கல்வி முறை பொதுக்கல்வியாக செய்யப்படாமல் எல்லா மக்களுக்கும் எண், எழுத்து, வாசிப்பு இருக்கும் படியான அளவு கல்வி, பொது இலவச கட்டாயக் கல்வி முறையாக இருக்கவேண்டும்.
(உ) அரசியல் நிர்வாகத் தேவைக்கு மேற்பட்ட கல்வியின் பொறுப்பையும், உயர்தரக் கல்வி என்று சொல்லப்படுவதின் பொறுப்பையும், சர்க்கார் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதோடு, பொது நிதியில் இருந்து அவைகளுக்கு செலவழிக்கவும் கூடாது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
விவசாயம்
6. (அ) விவசாய முறை
(ஆ) நீர் பாய்ச்சல் வசதி
(இ) தனிப்பட்ட மக்களுக்கு நில அடைப்பு (தர்க்காஸ்து)
ஆகிய இவைகளுக்கு ஒரு தனிப்பட்ட இலாகா ஏற்படுத்தி இவற்றை ஒரு தொழில் முறையாக நடத்தவேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
தொழிலாளி
7. தொழிலாளிகளுக்கு இலாபத்தில் பங்கும் அப்பங்கை முதலீட்டுப் பங்குடன் சேர்க்கப்படவும் வேண்டும்.
மற்றவை ஜஸ்டிஸ் கட்சிக்குப் பெரியார் அளித்த திட்டம் என்பவைகளை ஜஸ்டிஸ் கட்சி முன்பே ஒப்புக் கொண்டிருப்பதை இம்மாநாடு ஏற்றுக்கொள்கிறது.
ஒழுங்கு முறை
8. (அ) நம் கட்சிக்கு ஒழுங்குமுறை நடவடிக்கை எடுத்துக்கொள்ளத் தக்க பாதுகாப்பு இருக்க வேண்டியது அவசியம் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
(ஆ) அதற்கு ஏற்ற காரியங்கள் செய்ய தலைவரைக் கேட்டுக்கொள்கிறது.
தொடரும்