கோடியக்கரை அருகே நடுக்கடலில் அட்டூழியம்
மீனவர்கள் மீதுஇலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு
காரைக்கால், ஜன.29 நாகை, காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கைது செய்து உள்ளனர். கடலில் குதித்ததில் 2 பேர் படுகாயமடைந்தனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாக உள்ளது. கடந்த 25ஆம் தேதி ஒரே நாளில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பு அடங்காத நிலையில் நாகப்பட்டினம், காரைக்காலை சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்திருப்பது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்வேல்.இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே கிராமத்தை சேர்ந்த மாணிக்கவேல் (39), தினேஷ் (30), கார்த்திகேசன் (27), செந்தமிழ் (27), பட்டினச்சேரியை சேர்ந்த மைவிழிநாதன் (22), வெற்றிவேல் (28), மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடி சேர்ந்த நவேந்து (34), வானகிரியை சேர்ந்த ராஜேந்திரன் (36), ராம்கி (30), நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகரை சேர்ந்த சசிகுமார் (26), நந்தகுமார் (30), பாபு (31), குமரன் (28) ஆகிய 13பேர் கடந்த 26ஆம் தேதி காலை காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் 27.1.2025 அன்று அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர், இந்தியகடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக கூறி படகை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அச்சமடைந்த செந்தமிழ், பாபு ஆகிய 2 மீனவர்கள் கடலில் குதித்தனர். அப்போது ஒரு மீனவருக்கு கால்முறிவு ஏற்பட்டது. மற்றொருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
துப்பாக்கி முனையில்!
துப்பாக்கி முனையில் படகில் இருந்த 11 மீனவர்கள் மற்றும் கடலில் தத்தளித்த 2 மீனவர்களையும் கைது செய்து பறிமுதல் செய்யப்பட்ட படகுடன் யாழ்ப்பாணம் அழைத்து சென்றனர். பின்னர் இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதில் படுகாயம் அடைந்த 2 மீனவர்கள் யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படகுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கிராமத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.