அய்தராபாத், ஜன.28- அரச மைப்புக்கு எதிரான யு.ஜி.சி. வரைவு விதிகளை திரும்பப் பெற வேண்டும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த்ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
யு.ஜி.சி. வரைவு விதிகள்
பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அண்மையில் வரைவு விதிகளை வெளியிட்டது. அதில் பல்கலைக்கழக வேந்தராக செயல்படும் மாநில ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதற்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் தெலங்கானா தலைநகர் அய்தராபாத்தில் உள்ள அம்பேத்கர் திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் அம்பேத்கரின் சிலையை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, யு.ஜி. சி.யின் புதிய வரைவு விதிகளை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார். இது குறித்து அவர் கூறியதாவது:-
அரசமைப்புச் சட்டத்தின் சிற்பியான அம்பேத்கர், மாநில, ஒன்றிய மற்றும் ஒருங்கிணைந்த பட்டியல்களில் உள்ள பாடங்களை அரசமைப்பில் கோடிட்டுக் காட்டியிருந்தாலும், இப்போது திருத்தங்கள் என்ற பெயரில் பல்கலைக்கழகங்களின் இருப்பை மாநிலத்திலிருந்து பறிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.
அரசமைப்பின் மீதான தாக்குதல்
தெலங்கானா பல்கலைக்கழகங் களின் துணைவேந்தர்களை டில்லியில் இருந்து நியமிக்க ஒன்றிய அரசு முன்மொழிகிறது, ஆனால் டில்லியில் உள்ளவர்கள் மாநிலத்தில் உள்ள உண்மைகளை எப்படி அறிந்துகொள்வார்கள்?
மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள் மீது கட்டுப்பாட்டை வைத்திருக்க முயல்வதற்குப் பின்னால் பெரிய கலாசார தாக்குதலுக்கான சதி உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு, கருநாடகா மற்றும் கேரளாவின் முதலமைச்சர்களுடன் ஒருங்கி ணைந்து செயல்படுகிறேன். விரைவில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடனும் பேச விரும்புகிறேன்.
76ஆவது குடியரசு தினத்தை யொட்டி, பிரதமர் நரேந்திர மோடியை நான் வலியுறுத்துகிறேன். நீங்கள் மாற்ற விரும்பும் யு.ஜி.சி. விதிமுறைகளை அரசமைப்பின் மீதான தாக்குதலாக நாங்கள் கருது கிறோம். எங்கள் மீது படையெடுப்பு நடத்த நினைக்கிறீர்கள்.
மாநில அரசின் பரிந்துரைகள் புறக்கணிப்பு
உங்களிடம் அதிகாரம் உள்ளது என்பதற்காக நீங்கள் எங்கள் மக்கள், எங்கள் மாநிலங்கள் மற்றும் எங்கள் பிராந்தியங்கள் மீது படையெடுத்தால், அது நல்ல பலனைத் தராது.
மாநில அரசு தனது உரிமைகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. எனவே யு.ஜி.சி.யின் புதிய வரைவு விதிகளை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பத்ம விருதுகளை தேர்வு செய்வதில் மாநில அரசின் பரிந்துரைகளை ஒன்றிய அரசு புறக்கணிப்பதாகவும் அவர் கடும் அதிருப்தி தெரிவித்தார்.