நடைபாதைக் கோயில்கள் – எச்சரிக்கை!

Viduthalai
3 Min Read

அரசு அலுவலங்களாக இருந்தாலும் சரி, வளாகங் களாக இருந்தாலும் சரி – அவற்றில் எந்தவித மதச் சின்னங்களும் இடம் பெறக் கூடாது என்று அரசு ஆணை திட்டவட்டமாக உள்ளது.
நடைபாதைக் கோயில்களும் சட்ட விரோதமானவை தான். 2010ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றமும் நடை பாதைக் கோயில்களை அகற்ற ஆணை பிறப்பித்துள்ளது. அப்படி செய்யாத மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஆனாலும், அந்த ஆணை வெறும் காகிதப் பூவாகத் தான் உள்ளது.
நடைபாதைக் கோயில்களால் பாதசாரிகளுக்குப் பெரும் இடையூறு மட்டுமல்ல; விபத்துக்கள் நடை பெறவும் காரணியாக இருந்து வருகின்றன.

நடைபாதைக் கோயில்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் கிடைக்கும் பணம் யாருக்குப் போய் சேர்கிறது என்பது விளங்காத வெளிச்சம் ஆகும்.
கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற ஆணை யிடு கிறது நீதிமன்றம். பல இடங்களில் காவல்துறையும் கெடுபிடி செய்கிறது. ஆனால் நடைபாதைகளில் கோயில் எழுப்பினால் கண்டு கொள்ளாதது ஏன்?
வேலூர் நாராயணன் அவர்கள் சென்னை மாநகர மேயராக இருந்தபோதும், ப.உ. சண்முகம் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதும் நடைபாதைக் கோயில்கள் இடித்துத் தள்ளப்பட்டன.
இப்பொழுது மீண்டும் நடைபாதைக் கோயில்கள் முளைக்க ஆரம்பித்து விட்டன.

எடுத்துக்காட்டாக சில:
திருச்சி பெல் கணேசா மேம்பாலம் அருகில் நடை பாதையை ஆக்கிரமித்து ஒரு சிலரால் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதுவும் சட்ட விரோத மானதாகும்.அரசாணை எண்: G.O. Ms. No. 1052dt. 28 May 1973யை குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியர் நெடுஞ்சாலை துறைக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. துவாக்குடி முதல் பால்பண்ணை வரையி லான அணுகு சாலை (service road) அமைப்பதற்கான பொதுமக்களின் கோரிக்கை இன்னமும் செயலூக்கம் பெறாமல் இருக்கும் நிலையில், இது போன்ற பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்து சட்ட விரோதமாக கோயில் கட்டுவது என்பது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு விபத்துகள் நடப்பதற்கு காரணமாக அமைவதோடு மட்டுமல்லாமல், சமூக நல்லிணக்கத்திற்கும் குந்தகம் ஏற்பட்டு சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்பாகி விடும் என்பதனை பொதுமக்கள் புரிந்துகொண்டு சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களின் நடவடிக்கையை தடுக்க முன் வர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் பென்னேஸ்வர மடம் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக நிறுவனம் பென் னேஸ்வர மடம் 110/33-11 கி.வோ. துணை மின் நிலைய வளாகத்திற்குள் பிள்ளையார் சிலை  வைக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலக வளாகத்திற்குள்ளும், அலுவலகத்திலும் எந்தவித மதச் சின்னங்களும், கடவுளர் படங்களும் சிலைகளும் வைத்து பூசை புனஷ்காரங்கள் செய்யக்கூடாது என்று மாநில, ஒன்றிய அரசு ஆணைகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் தெளிவாக இருந்தும் அதனை மீறி காவேரிப்பட்டணம் பென்னேஸ்வரமடம்  110/33-11 கி.வோ. துணை மின் நிலைய வளாகத்திற்குள் அரசு ஆணைகளுக்கு புறம்பாக  வைக்கப்பட்டுள்ள பிள்ளையார் சிலையை அகற்ற கிருட்டினகிரி மாவட்ட ஆட்சித் தலைவரும், சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகளும் அகற்ற  நடவடிக்கை மேற்கொள்வார்களா? என்று பல தரப்பினரும் வினா எழுப்பியுள்ளனர்.

செய்யாறு அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் எழுப்பப்பட்டு வருகிறது.
இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது இந்தியாவிலேயே முன் மாதிரியான பெரியார் நினைவு சமத்துவப்புரங்களில் எந்தவித மதக் கோயில்கள், வழிபாட்டுச் சின்னங்கள் கூடாது என்பது தான் முக்கிய அம்சம். இப்பொழுது பல இடங் களில் மீறப்படுவதையும் அரசுக்குச் சுட்டிக்காட்ட விரும்பு கிறோம்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சில ஆண்டுகளுக்குமுன் கோயில் எழுப்பப் பட்டது. அதனை எதிர்த்து தஞ்சாவூர் நகர திராவிடர் கழகச் செயலாளர் மானமிகு முருகேசன் வழக்குத் தொடுத்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி கட்ட்பட்ட கோயில் இடிக்கப்பட்டதுண்டு.

சென்னை உயர்நீதிமன்ற நுழைவு வாயில் அருகே இருந்த கோயில் ஒன்றும் அவ்வாறே இடிக்கப்பட்டது.
நடைபாதைக் கோயில்கள் புற்றீசல்களாகக் கிளம்புகி்ன்றன. வழிபாடு என்பதைவிட உண்டியல் வசூல் என்ற வியாபார சுரண்டல் நோக்கமும் இதில் அடங்கி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
சட்ட விரோதமாகவும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் எதிராக நடந்து கொள்ளலாம் என்ற மனப்போக்கு மக்கள் மத்தியில் வளர்வது விருப்பத்தக்கதல்ல. அதுவும் மதம், கடவுள் என்ற பெயரால் எதையும் செய்யலாம் என்ற எண்ணத்திற்கு இடம் கொடுத்தால், பொது ஒழுங்கும், சட்ட ஒழுங்கும் பாதிக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
தமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்துக்கும் செயல் பாட்டுக்கும் இவற்றை முன் வைப்பது நமது இன்றியமையாத கடமையாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *