திருவள்ளூர், ஜன. 28- திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் பழமை வாய்ந்த கிருஷ்ணன் கோயிலை வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 பேர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியில் 1979ஆம் ஆண்டு சிறீ ருக்மணி சத்தியபாமா சமேத சிறீ சந்தன கோபால கிருஷ்ண சிறீ சந்தான விநாயகர் கோயில் கட்டப்பட்டது. இந்த பழமை வாய்ந்த கிருஷ்ணன் கோயில் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் அதனை இடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் அரசு இடத்தில் உள்ள கிருஷ்ணன் கோயிலை இடித்து அகற்ற வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டது.
சாலை மறியல்
இதனையடுத்து திருவள்ளூர் வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் கடந்த நவம்பர் மாதம் கோயிலை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்க முயன்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்போது கோயிலை இடிக்கும் பணியை வருவாய்த் துறையினர் கைவிட்டனர்.
இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் உடனடியாக போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கிருஷ்ணன் கோயிலை இடித்து அகற்ற வேண்டும் என மீண்டும் உத்தரவு பிறப்பித்தது. பின்னர் புல்லரம்பாக்கம் பகுதியில் இருந்த கிருஷ்ணன் கோயிலை இடித்து அகற்றுவதற்கான ஏற்பாடுகளை வருவாய்த் துறையினர் தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (26.1.2025) இரவு புல்லரம்பாக்கம் கிருஷ்ணன் கோயில் பகுதியில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் மேற்பார்வையில் வட்டாட்சியர் ரஜினிகாந்த் தலைமையில், வருவாய்த் துறையினர் கோயிலில் இருந்த கிருஷ்ணன், ராதா, ருக்மணி மற்றும் விநாயகன் சிலைகளை அகற்றினர்.
அப்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரா.சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அகற்றப்பட்ட சிலைகளை அரசு வாகனத்தில் ஏற்றி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்தனர்.
சிலைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து புல்லரம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் காவல் துறையினரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணி முதலே காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழரசி தலைமையில் ஆய்வாளர்கள் வெற்றிச்செல்வன், அந்தோணி ஸ்டாலின் உள்பட 100க்கு மேற்பட்ட காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் மேற்பார்வையில் வட்டாட்சியர் ரஜினிகாந்த் தலைமையில், வருவாய்த் துறையினர் கோயிலை இடித்து அகற்றினர்.
தீக்குளிக்க முயற்சி
இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தைச் சேர்ந்த 2 ஆண்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் புல்லரம்பாக்கம் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. எனவே பதற்றத்தை தவிர்க்க பலத்த காவல் துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எந்த காலகட்டத்திலும் இனி பிஜேபியுடன் கூட்டணி இல்லை
அடித்து கூறுகிறார் மேனாள் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை,ஜன.28- அதிமுக மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று (27.1.2025) சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தால் அதிமுக – பாஜ கூட்டணி ஏற்பட்டு விடும் என்று நயினார் நாகேந்திரன் (பாஜக சட்டமன்ற உறுப்பினர்) கூறி இருக்கிறார். அது அவருடைய ஆசையாக இருக்கலாம். எல்லோரும் ஆசைப்படுவார்கள். அவர் ஆசைப்படுவதை வைத்தெல்லாம் நான் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் எங்களுடைய கருத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொல்லி விட்டார்.
அதனால், 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் சரி, இனி வரப்போகிற எந்தத் தேர்தலிலும் பாஜவுடன் கூட்டணி கிடையாது என்பதே அதிமுகவின் இறுதியான முடிவு. இப்போதும் இல்லை, எப்போதும் இல்லை என்பதுதான் அதிமுகவின் முடிவு. நீங்கள் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்கிறீர்கள். ஆனால், அண்ணாமலையைப் பார்த்தால் சிரித்து பேசுகிறீர்களே என்று கேட்கிறீர்கள். அரசியலில் எதிரும் புதிரும் இருக்கலாம். ஆனால் நேரில் பார்க்கும்போது ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து பேசுவதுதான் தமிழர் பண்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.