தருமபுரி, ஜன.27- வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிஅய் விசாரணை தேவை இல்லை என தருமபுரியில் 25.1.2025 அன்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
தருமபுரியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில மாநாடு, நேற்று (26ஆம் தேதி) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தருமபுரி வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் 8 துணை வேந்தர்கள் பணியிடம் காலியாக உள்ளது. துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து பறிக்க வேண்டும். அந்தந்த மாநில முதலமைச்சர்களே வேந்தர்களாக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு ஆளுநர் பதவி விலகிவிட்டு, பாஜ அல்லது ஆர்எஸ்எஸ்சுடன் சேர்ந்து அரசியலில் செயல்படலாம். வேங்கைவயல் விவகாரத்தில், தற்போது 3 பேர் பெயரை காவல் துறை வெளியிட்டுள்ளது.
இதற்கு விசிக, சிபிஎம் ஆகிய 2 கட்சி தலைவர்களும் சிபிஅய் விசாரணை வேண்டுமென தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் சிபிஅய் விசாரணை தேவையில்லை என்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, கோவையில் பெண் செய்தியாளரிடம் சீமான் தகாத முறையில் பேசியது குறித்து கேட்டதற்கு, இழிவானவரிடம் பேசினால், இழிவாகத்தான் பேசுவார் என பதிலளித்தார்.
பெரியார் பற்றி பேசினால்தான்
சீமானுக்கு பிழைப்பு நடக்கும்
‘பெரியார் பற்றி பேசினால் தான் சீமானின் பிழைப்பு நடக்கும். கடந்த காலங்களில் திமுகவை விட, வீரமணியை விட, எங்களை விட, பெரியாரை உச்சத்தில் புகழ்ந்தவர் சீமான். பெரியார் நேற்றும் தேவை, இன்றும் தேவைப்படுகிறார். நாளையும் தேவைப்படுவார்’ என இரா.முத்தரசன் கூறினார்.