2035 ஆம் ஆண்டில் ஹிந்து நாடாக இந்தியா அறிவிக்கப்படும்!
இப்போதுள்ள கல்வி முறை மாற்றப்பட்டு, குருகுலக் கல்வி கொண்டு வரப்படும்!
கும்பமேளாவில் சாமியார்கள் கூடி அறிவிப்பு!
லக்னோ, ஜன.27 ஸநாதன தர்மமே இந்தி யாவின் மதம் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கும்பமேளாவில் சாமியார்களின் தனிக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, 2035 ஆம் ஆண்டில் இந்தியா, ஹிந்து நாடாக அறிவிக்கப்படும் என்றும், இப்போதுள்ள கல்வி முறை ஒழிக்கப்பட்டு, குருகுலக் கல்வி கொண்டுவரப்படும் என்றும் அக்கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில். ஜனவரி 13 முதல் மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, பிப்ரவரி 26 ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த நிலையில், ஸநாதன தர்மத்தின் பிரதிநிதியாக கும்பமேளா விளங்குகிறது என்றும், ஸநாதன தர்மம் நமது தேசிய மதம் என்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஸநாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம். அதுவே மனிதத்தின் மதம். நமது வழிபாட்டு முறைகளில் வேறுபாடு இருக்கலாம், ஆனால், மதம் ஒன்றுதான்.
அந்த மதம் ஸநாதன தர்மம். அந்த ஸநாதன தர்மத்தின் பிரதிநிதியாக கும்பமேளா விளங்குகிறது. ஒற்றுமையின் செய்தியை மகா கும்பமேளா கொடுக்கிறது. அங்கு பாகுபாடு காட்டப்படுவதில்லை. ஸநாதன தர்மத்தை விமர்சித்தவர்கள், கும்பமேளாவை பார்க்க வாருங்கள் என்று அழைக்கிறோம். திருதராஷ்டிரனைப் போல் இருக்காமல், இங்கு வந்து நேரில் பாருங்கள். பிரயாக்ராஜில் நடந்து வரும் மாபெரும் மத நிகழ்வான மகா கும்பமேளா, எந்த ஒரு ஜாதி அல்லது மதத்திற்கும் உட்பட்டது அல்ல. இது அனைத்து மதம், கலாசாரம் மற்றும் சமயங்களின் மாபெரும் கலவையாக திகழ்கிறது.’’
இவ்வாறு சாமியார் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உண்மையான வர்ணாஸ்ரமம் மறுகட்டமைக்கப்படுமாம்
ஹிந்து நாடு ஹிந்து அரசமைப்புச் சட்டக்குழு நியமனமாம்! கும்பமேளாவில் சாமியார் கூட்டம்!
2035 அன்று ஹிந்து நாடு என்று அறி விக்கப்படும்போது இந்த சட்டம் நடை முறைக்கு வருமாம்.
கும்பமேளாவில் கூடிய சாமியார் கூட்டம் ஹிந்து அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க குழு அமைத்துள்ளதாம், அதில் வட இந்தியாவின் 14 மற்றும் தென் இந்தியாவின் 11 வேத நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனராம். தூய ஸநாதன ஹிந்து சமுதாயத்தை உருவாக்குவதற்காக, தர்ம சாஸ்திரங்களுடன் ராமராஜ்யம், கிருஷ்ணராஜ்யம், மனுஸ்மிருதி மற்றும் சாணக்யனின் அர்த்தசாஸ்திரத்தைப் படித்து, ஹிந்து அரசமைப்பை உருவாக்கியுள்ளனராம்.
அந்தக் குழுவில் காசி ஹிந்து பல்கலைக்கழகம், சம்பூர்ணானந்த சம்கிருத பல்கலைக்கழகம் மற்றும் மத்திய சம்கிருத பல்கலைக்கழகத்தின் அறிஞர்கள் உட்பட பலர் உள்ளனர். அரசமைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சம்பவி பீடாதீஸ்வர் ஸ்வாமி ஆனந்த ஸ்வரூப் மகாராஜ் 2035 ஆம் ஆண்டுக்குள் ஹிந்து நாடு அறிவிக்கப்படும் என தெரிவித்தார். ஹிந்து நாடு முதல் அரசமைப்பின் அடிப்படையில், நாடு ஒரு குடியரசாக அமையவுள்ளது. நாம் வசுதேவ குடும்பகம் (ஒரே குடும்பம்) மற்றும் சர்வே பவந்து சுகினம் (அனைவரும் நலமாக இருக்கவேண்டும்) என்பவற்றைப் பின்பற்றுகிறோம். இந்த இரண்டு கருத்துகளும் அரசமைப்பின் அடிப்படையில் உள்ளன.
குருகுலத்தின் மூலம் மட்டுமே நாட்டின் தலைவர்(அதிபர்) தேர்ந்தெடுக்கப்படுவார்களாம்!
ஹிந்து தர்மத்தின் அடிப்படையில் தேர்தல் நடை பெறும்; வாக்களிக்கத் தகுதியான நபர்கள் பட்டியலி டப்படுவார்கள். குருகுலத்தின் மூலம் நாட்டின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் இந்த அரசியலமைப்பு நாட்டில் உள்ள பிற மதத்தினருக்கு எதிராக இல்லை. இங்கு அனைவருக்கும் வாழும் உரிமை இருக்கும்,
தர்மசாஸ்திரம் மற்றும் அரசியல் விஷயங்களில் தேர்ச்சி பெற்ற, மாநில நிர்வாகத்தில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவரே நாட்டின் தலைவர் பதவிக்குத் தகுதியானவர். ஹிந்து நாடு அரசமைப்பின்படி, யுத்தத்தின் போது தலைவர் தனது தலைமையில் படையைக் கொண்டு செல்ல வேண்டும். நாட்டிற்குத் தலைவரானவர் நீதி, போர் மற்றும் ராஜதந்திர விவகாரங்களில் கைதேர்ந்தவர்களை மட்டுமே அமைச்சுப் பதவிக்கு நியமிக்கவேண்டும்.
ஹிந்து நாட்டை உருவாக்க உலக நாடுகளுக்கு அழைப்பாம்!
அரசமைப்பு உருவாக்கும் குழுவின் தலைவர் டாக்டர் காமேஸ்வர் உபாத்யாய், ஹிந்து நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இராணுவக் கல்வி கட்டாயமாக இருக்கும் என்று தெரிவித்தார். ஹிந்து நாட்டில் தற்போதைய வரி முறை அமையாது மற்றும் விவசாயத்தை முழுமையாக வரியின்றி விடப்படும். வரி மோசடியைத் தடுக்க கடுமையான தண்டனை விதிக்கப்படும்.
அரசமைப்பில் நூற்றுக்கணக்கான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், தர்மசாஸ்திரங்களில் ஒரு திருத்தமும் இல்லை என்று சம்பவி பீடாதீஸ்வர் ஆனந்த ஸ்வரூப் தெரிவித்தார்.
ஹிந்து நாடு உருவாக்குவதற்காக உலகின் பல நாடுகளை நாங்கள் ஒத்துழைக்க அழைக்கிறோம். உலகில் கிறிஸ்தவர்களுக்கு 127, முஸ்லிம்களுக்கு 57, பவுத்தர்க ளுக்கு 15 நாடுகள் உள்ளன. இதுவரை யூதர்களுக்கு ஒரு நாடு இஸ்ரேல் உள்ளது. உலகில் சுமார் 1.5 பில்லியன் ஹிந்துக்கள் இருக்கிறார்கள், ஆனால், அவர்களுக்கு ஒரு நாடும் இல்லை.
ஹிந்து நாடு அரசமைப்பின் வடிவமைப்பின்படி, இது ஒரு சட்டசபை அமைப்பாக இருக்கும். சபையின் பெயர் நாடாளுமன்றம் அல்ல; ஹிந்து தர்ம பீடமாக இருக்கும்; ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் ஒரு தர்ம சாம்சத் தேர்ந்தெடுக்கப்படும். நாடு முழுவதும் 543 தர்ம சாம்சத் தேர்ந்தெடுக்கப்படும். தர்ம சாம்சதுக்கு குறைந்தது 25 வயதானவர் போட்டியிடலாம்; வாக்களிக்கக் குறைந்த வயது 16 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட ஸநாதனத்தின் படி நடக்கும் நபர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது. வாக்களிக்க ஜைனம், பவுத்தம் மற்றும் சீக்கிய மதத்தினருக்கே உரிமை உள்ளது
ஸநாதனத்தை வெறுப்பவர்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லையாம்!
ஸநாதனத்தை வெறுப்பவர்களுக்கு வாக்கு உரிமை மறுக்கப்படும். தர்ம சாம்சத்தின் உறுப்பினர்களுக்கு தேர்தல் தொகுதி நிதி, சாதாரண வாகனம் மற்றும் சாதாரண பாதுகாப்பு ஆகியவற்றை தவிர, மற்ற எதுவும் வழங்கப்படாது. தர்ம சாம்சத் உறுப்பினராக மாறுவதற்கு, குருகுலத்தில் வேதம் கட்டாயம் பயின்றிருக்க வேண்டும்.
தொகுதி மக்கள் தங்கள் பிரதிநிதியால் திருப்தி அடையாத நிலையில், குறைந்தது 50,000 மக்களின் கையொப்பங்களுடன் தர்ம சாம்சத் அனுப்ப வேண்டும். தர்ம சாம்சத் மக்களிடமிருந்து கருத்துக்கணிப்பு நடத்தும் மற்றும் மக்களுக்கு தங்கள் பிரதிநிதியை திரும்ப அழைக்க முழு உரிமை இருக்கும்.
இது நடைமுறைக்கு வரும் ஹிந்து நீதிமுறை. ஹிந்து நாட்டில் ஹிந்து நீதிமுறை நடைமுறையில் இருக்கும். இது உலகின் மிக பழைமையான நீதிமுறை. நாட்டுத் தலைவரின் கட்டுப்பாட்டில் முதன்மை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகள் இருப்பார்கள். கல்லூரி போன்ற எந்த அமைப்பும் இருக்காது. இந்திய குருகுலங்களில் இருந்து வரும் உயரிய சட்ட நிபுணர்கள் நீதிபதியாக பணியாற்றுவார்கள். அனைவருக்கும் விரைந்து நீதி உறுதி செய்யப்படும். பொய் குற்றச்சாட்டுகளைச் செய்யும் நபர்கள் மீது தண்டனை விதிக்கப்படும். தண்டனைகள் திருத்தமானவையாக இருக்கும்.
அவரவர் செய்யும் வேலையின் அடிப்படையிலான வாழ்வியல் முறைக்கு சட்டமன்ற அனுமதி வழங்கப்படும். ஹிந்து நாட்டில் பழைமையான வேதிக குருகுல அமைப்பே நடைமுறைக்கு கொண்டு வரப்படும். ஆங்கிலப் பள்ளிகள் குருகுலங்களாக மாற்றப்படும் மற்றும் அரசு நிதியால் இயங்கும் அனைத்து மதாராசா மற்றும் மிஸினரி பள்ளிகளும் இழுத்து மூடப்படும்.
தந்தையின் சொத்து மகனுக்கு மட்டுமே!
மனு மற்றும் யாஜ்ஞவல்கியாவின் ஸ்மிருதிகளை நடைமுறையில் கொண்டு வரப்படும். தந்தையின் மரணத்திற்குப் பிறகு மகன்கள் மட்டுமே உரிமையாளர் ஆக இருக்க வேண்டும்.
ஒருபுறம் சாமியார் முதலமைச்சர் ஸநாதன மதமே தேசிய மதம் என்கிறார். மற்றொரு புறம் சாமியார்கள் கூடி, இதுதான் இனி ஸநாதன நாட்டின் அரசமைப்பு என்கிறார்கள்.