‘‘சென்னை
அய்.அய்.டி. இயக்குநர் ஒரு சாதாரண நபர் அல்ல, அவர் ஏ.அய். தொழில் நுட்பத்தில் அதிநுட்ப ஆய்வு செய்தவர்; ஒளியை விடவேகமாக பயணம் செய்யும் குவாண்டம் கம்யூட்டிங் போன்றவற்றின் ஆய்வில் பங்கேற்றவர்.
அவர் நம்பும் ஸநாதன தருமத்தில் உள்ளதை அவர் கூறுகிறார். இதில் எந்தத் தவறும் இல்லை. இதை தேவையில்லாமல் அரசியலாக்குவது, இதற்காக மாணவர் அமைப்பு போராடுவது அவசியமற்றது.
நான் மாணவர் அமைப்புகளிடம் இந்தப் போராட்ட நாடகத்தை நிறுத்துங்கள். உங்கள் செயலால் அய்.அய்.டி. சென்னையின் புகழ் கெட்டுப்போகும்.
அய்.அய்.டி. சென்னை இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் கல்வி நிறுவனம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.’’
தமிழ்நாடு மாநில
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியது.
இந்தப் பாழாய்ப் போன பா.ஜ.க.வும், சங் பரிவார்க் கும்பலும் வந்ததுதான் வந்தது – அய்.பி.எஸ். அதிகாரிகளாக இருந்தவர்களையும், மாட்டு மூத்திரம் குடிப்பவர்களுக்கு வக்காலத்து வாங்கும் அளவுக்கு அடிமட்டத்துக்கு இழுத்துச் சென்றுவிட்டது.
மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொன்ன
அய்.அய்.டி. இயக்குநர் மெத்தப் படித்த மேதாவியாம்; ஒளியைவிட வேகமாகப் பயணம் செய்யும் குவாண்டம் கம்யூட்டிங் போன்றவற்றில் ஆய்வு செய்தவராம்!
இருக்கட்டுமே! இவ்வளவுப் படித்தும் மாட்டு மூத்திரத்தின் மகிமையைத் தூக்கிப் பிடிக்கும் அளவுக்கு மதத்தின் கோரப் பிடியில் சிக்கி, படித்த படிப்புக்கே அவமானத்தைத் தேடித் தந்துவிட்டாரே!
இப்பேர்ப்பட்ட பேர்வழிகளுக்கு, ‘வேலிக்கு ஓணான் சாட்சி’ என்று ஓர்
அய்.பி.எஸ். ஆசாமி, ‘‘ஆமாம் சாமி’’ என்று ‘‘சலாம்’’ போடுகிறாரே!
படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சும்மாவா சொன்னார்!
– மயிலாடன்