உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா 45 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஜனவரி
13-ஆம் தேதி துவங்கிய இந்த மகா கும்பமேளாவில் பாபாக்கள் எனும் பல்வேறு வகையான துறவிகள் முகாமிட்டுள்ளனர். மொத்தம் உள்ள 13 அகாடாக்களில் ஒன்றில் இந்தத் துறவிகள் இணைந்திருப்பார்கள். திரிவேணி சங்கமத்தின் கரையில் தம் அகாடாக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இவர்கள் முகாம் அமைத்துள்ளனர். இந்த முகாம்களில் தங்கியுள்ளவர்களில் குழந்தைத் துறவி களும் உள்ளனர். இவர்களை தரிசித்து ஆசிபெற அவர்களது முகாம்களில் பொதுமக்கள் கூடுகின்றனர்.
ஜுனா அகாடாவின் முகாமில் 8 வயது துறவியாக கிரிராஜ் புரி அமர்ந்துள்ளார்.
சாம்பல் பூசிய அவரது உடலும், தலையில் மலர்களுடனான காவி துண்டும் தான் இந்தக் குழந்தையும் ஒரு துறவி என்பதைக் காட்டுகிறது. இவர், மத்தியப் பிரதேச மாநிலத்தின் கண்டுவா மாவட்டத்தை சேர்ந்தவர். பள்ளிக்குச் சென்று படிக்கும் இந்தக் குழந்தை தன்னை ஒரு துறவி எனக் கூறுகிறான். வளர்ந்து நாகா சாதுவாக மாறுவது தன் விருப்பம் எனக் கூறுபவன், தனது குருவான மஹந்த் தனாவதியுடன் கும்பமேளாவிற்கு வருகை தந்துள்ளார். எந்நேரமும் ஹனுமர் மந்திரம் ஓதியபடி காலை முதல் இரவு வரை அமர்ந்துள்ளவருக்கு அருகில் கதாயுதமும் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குழந்தைத் துறவியின் குருவான மஹாந்த் தனாவதி கூறும்போது, ‘இந்த பாபா பிறந்ததில் இருந்து, தனது 4 வயது வரை வெறும் பாலையே குடித்தே வளர்ந்தார். அவருக்கு விவரம் தெரிந்ததில் இருந்து ஆன்மீகத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். இதனால், நாகா சாதுவாக ஆக வேண்டி அவர், இங்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னுடன் வருகை புரிகிறார்.’ எனத் தெரிவித்தார்
இதன் அருகிலுள்ள முகாமிலும் ஒரு 7 வயது குழந்தை துறவி ஆஷு கிரி அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறான். உ.பி.யின் காஜியாபாத்தை சேர்ந்த இச்சிறுவன் அருகிலுள்ள சிக்கந்தரா ராவின் குருகுலத்தில் படித்து வருகிறான். வரும் காலத்தில் நாகா சாதுவாக மாறுவது தன் விருப்பம் எனக் கூறுகிறான். இந்த துறவி ஆஷு. கழுத்திலும், கைகளிலும் நிறைந்து இருக்கும் ருத்ராட்ச மாலைகள் மட்டுமே அவருக்கு ஒரு துறவி தோற்றத்தைத் தருகிறது. தன்னிடம் உள்ள உடுக்கையை அடித்து, கொத்தாகக் கட்டி வைத்திருக்கும் மயில் தோகைகளால் ஆசி வழங்குகிறான் சிறுவன்.
இவனைப் பற்றி உடனிருக்கும் ராஜஸ்தானின் புஷ்கர் ஆசிரமத்தின் பெண் துறவி சீமா கிரி கூறும்போது, ‘இவரது பெற்றோருக்குப் பல ஆண்டு களாக குழந்தை பாக்கியம் இல்லை. எங்களிடம் ஆசிபெற வந்தவர்களிடம் நாங்கள் அவர்களுக்கு பிறக்கும் முதல் குழந்தையை எங்களுக்கு நேர்ந்து விட வேண்டும் எனக் கூறினோம். அதன்படி அவர்களும் எங்களிடம் கொடுத்துவிட்டனர். இவரது பெற்றோருக்கும் இப்போது மூன்று குழந்தைகள் உள்ளனர்.’ எனத் தெரிவித்தார்.
ஜுனா அகாடாவின் இன்னொரு முகாமிலும் 6 வயது குழந்தை துறவியாக பிரேம் புரி அமர்ந்துள்ளான். மகா கும்பமேளாவில் முகாமிட்ட துறவிகளில் மிகவும் வயது குறைந்தவனாக இவன் கருதப்படுகிறான். எந்நேரமும் யாகம் நடைபெறுகிறது. இவன் தன்னைக் காணவரும் பக்தர்களுக்கு விளையாடியபடியே ஆசி தருகிறான். இந்த மூன்று குழந்தை துறவிகள் முன்பாகவும் காணிக்கை வழங்க தட்டுகள் வைக்கப் பட்டுள்ளன. அதில் பக்தர்கள் காணிக்கையாக ரூபாய் நோட்டுக்களைப் போடுகின்றனர்.
மதத்தின் பெயரால் சிறுவர்களின் வாழ்வைச் சீரழிக்கும் இத்தகைய கொடுமை ஏற்கத்தக்கதுதானா?
மதம் என்ற முகமூடி அணிந்து விட்டால் எதை வேண்டுமானாலும் செய்ய அனுமதிக்கலாமா? 8 வயது சிறுவனின் எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்க வேண்டாமா?
முற்றும் துறந்த அந்தச் சிறுவன் முன் உண்டியல் (பணதட்டு) ஏன்? இது ஒரு வியாபார தந்திரம் தானே!
சாமியார்களிடம் சிறுமிகளை விட்டுச் செல்லும் அளவுக்கு மத நம்பிக்கையும், பக்திக் கிறுக்கும் கருத்தையும், கண்களையும் மறைக்கிறது.
இதனை சட்டம் அனுமதிக்கிறதா? இந்தியா எதிர்கால இளைஞர்களின் கைகளில் இருக்கிறது என்று விவேகானந்தர் பேசினார் என்றெல்லாம் பெருமைப் பேசும் ஹிந்துத்துவவாதிகள் இவற்றை எப்படி அனுமதிக்கின்றனர்?
வட இந்தியாவுக்குப் பல பெரியார்கள் தேவை என்று கர்மவீரர் காமராசர் சொன்னதை இந்த இடத்தில் நினைவு கூர வேண்டும் வடமாநிலங்களில் – தேசிய அளவில் செயல்படும் இடதுசாரிகள் இதி்ல் கவனம் செலுத்துவார்களாக! பிரச்சார யுக்திகளை மேற்கொள் வார்களாக!